Friday, May 5, 2023

இன்று சித்திரை பௌர்ணமி #கண்ணகி கோட்டம்

#இன்று சித்திரை பௌர்ணமி
#கண்ணகி கோட்டம்

சித்திரை பௌர்ணமி நாளன்று ஒவ்வோர் ஆண்டும் தேனி மாவட்டம் குமுளி விண்ணேற்றிப் பாறையில் உள்ள  மங்கல தேவி கண்ணகி கோட்டத்தில் திருவிழா நடைபெறுகிறது.
கண்ணகிக்கு மங்கலதேவி கண்ணகி கோட்டம் தவிர வேறு எங்கும் கோவில்கள் இல்லை.
சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தின் வாழ்த்துக்காதையில் இடம் பெற்றுள்ள,
தென்னவன் தீதுஇலன்; தேவர் கோன் தன் கோயில்
நல்விருந்து ஆயினான், நான் அவன் தன் மகள்
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்
என்ற கண்ணகியின் கூற்றின் மூலம் கண்ணகிக்கு வேறு எங்கும் கோவில்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
குமுளியிலிருந்து 14 கி.மீ.தொலைவில் விண்ணேற்றிப் பாறை உள்ளது. இந்தப் பாறை கேரளாவின் ஆளுகையின் கீழ் உள்ளது. 1956- இல்மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகம் – கேரளம் எல்லையில் சுமார் 600 கி.மீ. பரப்பளவு உள்ள வனப்பகுதி சரியாக அளக்கப்படவில்லை. பெரியாறு காப்புக் காட்டுப் பகுதிகளிலும் அளக்கப்படாத பல பகுதிகள் உள்ளன. இதை கேரள அரசு 1983 - இல் அறிவித்தது.
கண்ணகி கோவில் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து குமுளி வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மங்கலதேவி கண்ணகி கோட்டத்திற்கு ஒவ்வோராண்டும் செல்கின்றனர். இதற்கும் நிறைய கட்டுப்பாடுகளை கேரள வனத்துறை விதித்திருக்கிறது.இந்த பகுதி அன்றைய மதுரை மாவட்டத்தின் பகுதி ஆகும்

கண்ணகி கோவிலுக்கு திருவிழா நடைபெறும்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்தான் பக்தர்கள் செல்ல வேண்டும்; அப்படிச் செல்லும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை கேரள தொல்லியல்துறை விதித்திருக்கிறது. இதனால் தமிழகத்திலிருந்து கண்ணகி கோட்டம் செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள்.
மங்கலதேவி கண்ணகி கோட்டம் சரியான பராமரிப்பின்றி  இடிந்து சிதிலமடைந்த நிலையில்  உள்ளது. 

அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும் நானும் கடந்த 1982 -83 கால கட்டத்தில் கண்ணகிக் கோட்டம் சென்று பார்வையிட்டது நினைவுக்கு வருகிறது. மங்கலதேவி கண்ணகி கோட்டத்தை தமிழகத்துக்குச் சொந்தமாக்க வேண்டும் என்று அடியேன் இதற்காக பொதுநல வழக்கு ஒன்றை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தேன். சென்னை உயர்நீதிமன்றமும் என்னுடைய வழக்கை விசாரித்து, "அங்கு செல்லும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, அமைதியாக வழிபாடு நடத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் " என்று தனது கருத்தைத் தெரிவித்தது. இதன் பின் கேரள காவல்துறையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் சிறிது குறைந்தன. 
கண்ணகி கோட்டம் அமைந்துள்ள இடம் தமிழகத்துக்குச் சொந்தமானதாக இருக்கும்பட்சத்தில், மங்கலதேவி கண்ணகி கோட்டத்தின் சிதிலமடைதல்களைத் தவிர்த்திருக்க முடியும். கேரள காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆண்டுக்கு ஒரு முறை கண்ணகிகோவிலுக்குச் செல்லும் பக்தர்களைச் சிரமத்துக்கு உள்ளாவதையும் தடுத்திருக்க முடியும்.
அடுத்த சித்திரை பௌர்ணமி கண்ணகி கோவில் திருவிழாவின்போது, மங்கலதேவி கண்ணகி கோட்டம் தமிழகத்துக்கு உரிமையானதாக மாற வேண்டும்.    அதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடுஅரசு எடுக்க வேண்டும்.

https://dhinasari.com/general-articles/12823-mangaladevi-kannakikottam-dispute.html

https://tamil.oneindia.com/news/chennai/mangala-devi-kannagi-kottam-and-tamils-rights-ks-radhakrish-384790.html?story=1

https://thaaii.com/2022/04/16/mangala-devi-kannagi-temple/

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
5-5-2023
(மீள்)

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...