Wednesday, May 22, 2024

காலச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத்தாங்கி, வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி, ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன வேரெனநீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்-

1958 களில் நான் சிறுவனாய் இருந்த காலத்தில் குளத்து நீருக்குள் நின்றிருக்கும்படி
யான இந்த ஓவியத்தை வரைந்தவர் டிராயிங் மாஸ்டர் இன்னாசி முத்து .
அவர் குருவிகுளம் கழக உயர்நிலைப் பள்ளியில் ( Board high School)ஓவிய ஆசிரியராக இருந்தார். அக்காலத்தில் மழை அதிகம் பெய்து  எங்களூர் குளம் நிரம்பி இருந்தது. அக்குளத்தில் நான் பின்புறம் கையைக் கட்டி நின்றிருந்த போது எனது மூத்த அண்ணன் பேராசிரியர் முனைவர் டாக்டர் எஸ். பாலகிருஷ்ணன் அவர்கள் ஒருபுகைப் படத்தை எடுத்தார்.

அந்த புகைப்படத்தை வைத்து டிராயிங் மாஸ்டர் இன்னாசி முத்து அவர்கள் வரைந்திருந்த இந்த ஓவியத்தை நான் கிராமத்திற்கு போனபோது சமீபத்தில் தான் பார்த்தேன். இந்த ஓவியம் வரைந்து ஏறக்குறைய 66 ஆண்டுகள் ஆகி இருக்கிறது.

இந்த ஓவியத்தை பார்த்ததும் எனது பால்யகால நினைவுகள் அனைத்தும் மீண்டும் மேலோங்கி வந்தன. எத்தனை உறவினர்கள் சுற்றுப்புறங்கள் அவர்கள் என்னை பராமரித்த விதங்கள் நான் சக வயது சிறுவர்களோடு விளையாடிய குளங்கள் தெருக்கள் யாவும் கண்முன்னே காட்சியாக ஓடியது. காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடி விடுகிறது. நமது சிறு பிராயத்தை அது எவ்வாறு மெல்ல மெல்ல கடத்தி முதிர்ச்சிஅடைய வைத்து எத்தனையோ பேரை சந்திக்க வைத்து எத்தனையோ வாழ்வு அனுபவங்களை கொடுத்து 
வாழ்வெனும் பேராற்றில் கரைத்தும் விடுகிறது. 

அந்த  இளம்பருவக் கனவுகளில்
எத்தனை லட்சியங்கள் கோட்பாடுகள் அறிவு வாதங்கள் சம்பவங்கள் உள்ளே புகுந்து ஒருவரை  முழு மனிதனாக்க முயல்கிறது என்று எண்ணிப் பார்க்கும்போது இந்த அரசியல் இழுத்துக் கொண்டு போன கடந்த காலங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை.

மீண்டும் இந்த ஓவியத்தை பார்க்கும்போது நான மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். அதில் வெகுளித்தனமும் நம்பிக்கைகளும் மாறாத இளம் எண்ணங்கள் அக்காலத்தின் மகிழ்ச்சியான உறவுகள் நட்புகள் மேலும் நினைத்துப் பார்க்கக் கூடிய வாழ்வு அனுபவங்கள்தான் எத்தனை எத்தனை? அத்துடன் இன்றைய நவீன காலத்தின் மாற்றங்கள் விழுமியங்கள் அனைத்தும்  அற்றுப் போன இன்றைய நிலம் உள்ளிட்டு அனைத்தும் மனிதர்களின் வேட்டைக் காடாகி போன அவலங்களோடு எல்லாவற்றிற்கும் ஆன மூன்று தலைமுறைகளின சாட்சியாக நான் மீந்திருப்பதை அவதானித்துப் பார்க்கிறேன்.   எத்தனை காலம் தான் ஆனால் என்ன ?மாற்றங்கள் எதுவானாலும் அடிப்படை வாழ்வு ஒன்றே!அது எப்பொழுதும் உறுதியானது.

இந்த ஓவியத்தை போலவே நீடித்திருப்பது. கால சக்கரம் வேகமாக ஓடுகிறது…
•••



#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost
22-5-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...