Monday, May 27, 2024

இன்றைய அரசியல் சதுரங்கத்தில் தகுதியே தடை; அடிமையே தகுதி.

#*தன்னிலை செய்தி*…..
————————————
என்னை பொருத்தவரையில் அரசியல் என்பது எனது சுவாசம். இயங்கி கொண்டு இறுதிவரை நீடிக்கும் அறத்தின் பாதை. 52 ஆண்டுகளாக இந்த அரசியல்ப்பயணத்தில் கால் கொண்டுள்ளேன்.

எனது அரசியல் பார்வை என்பது முற்றிலும் வேறானது. பகுத்தறிவு மற்றும் தன்மானம் சார்ந்தது. யாராக இருந்தாலும் மரியாதையாக அணுகுவதும் அவருடன் நடத்தையில் நாகரிகத்தை கடைபிடிப்பதும் தான் எனது பார்வை! மாறாக  அடிமையாக பதவிக்கு யாரின் கால்களிலோ விழுவது எனது நிலைப்பாடு அல்ல!

இதைச் சிலர் பரிகாசமாக கூட என்னை பார்க்கலாம். எதையும் அனுசரித்துப் போகாமல் வீணாகிப் போனவராய் இருக்கிறாரே என்று கூட நினைக்கலாம். அதனால் ஒன்றும் குடி முழுகிப் போகாது பரவாயில்லை! 

இந்த உலகமயமாக்கில், எனது பார்வையில் தமிழ் தேசியம் விசால இந்தியா என்கிற பார்வை உண்டு. நான் தமிழன் அல்ல தெலுங்கன் என்று சிலர் கூறுவார்கள். தமிழ் பேசும் தெலுங்கன் தான். இதை நான் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை.!

ஆனால் மற்றவர்களைப் போல பிழையாகவோ தவறாகவோ நான் எப்போதும் நடந்து கொண்டதில்லை.
எனக்கான கொள்கைகள் அதன் நெறிமுறைகள் வேறு. இக்காலத்து அரசியலுக்கு இவர் ஒத்துவர மாட்டார் என்று பிறர் நினைப்பது என்னை எப்படிப் பாதிக்கும்? அது என் விருப்பம் எனது தேர்வு. அதுதான் என் பலமும் பலவீனமும். இதைக்  குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும்!

இப்படியான என் நிலைப்பாட்டில் யாருக்கும் எந்த பாதகமும் இல்லை பல நன்மைகள் பிறருக்குதான் விளைந்திருக்கிறது. பலரையும் நான் தூக்கிச் சுமந்து இருக்கிறேன் என்னால் உதவி பெற்றவர்கள் குறிப்பாக முக்கியமான சிரமமான நேரங்களில் என்னை பயன்படுத்திக் கொண்டவர்களிடம் நான் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை . என்னை யாரு ம் தூக்கி சுமக்க வேண்டாம்.ஆனால் 
அதற்கான நன்றி காட்டுகிற முகபாவனையாவது அவர்களுக்கு
இருந்தால் போதும் என்று தான் விரும்புகிறேன். 

இன்றைய அரசியலைப் பொறுத்தவரை ஜனநாயகம் குடியரசு என்கிற மாண்புகள் அறவே இல்லை. ஓட்டளிக்க பணம் வாங்கிக்கொண்டு விற்கும் மக்களுக்கும் இதைச் சிந்திக்க நேரமில்லை. மது போதையிலும் வெவ்வேறு வகையான போதைப் பொருட்களை உபயோகிக்கும் கேளிக்கைகளிலும் மனம் திரும்பிக் கிடக்கும் இந்தச் சமுதாய சீரழிவிற்குள் எனது அரசியல் தெளிவாகவே இருக்க விரும்புகிறது! இந்த போக்குகள் ஒரு சமூக அடிப்படையை ஒரு போதும் மெய்மையாக உருவாக்காது.

எல்லா இடங்களிலும் பொருளாதாரமே மேலோங்கி இருக்கிறது. பணமே மூல மந்திரம் என்று தன் குடும்ப வாரிசு ரத்த பாசங்களோடு இணைந்து குலவிக் அரசியல் களத்தில் நெறியற்ற கொட்டமடித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் சட்டம் நீதி போன்றவை அனைத்தும் கடைச்சரகாகி ஆகிவிட்டது.

இப்படியான சூழலில் சம நீதி என்பது கனவாகி போய்விட்டது. இந்த சூழலைத்தான் அனுசரிக்க வேண்டுமா இல்லை என்றால் அவர்கள் ஒவ்வாதவர்களாக ஆகிவிடுகிறார்களா?

உண்மையும் உழைப்பும் புறக்கணிக்கப்படும் போது நன்மைக்கும் நீதிக்கும் நாட்டில் இடம் இல்லை. வேறு என்ன சொல்ல? இங்கு  இன்றைய அரசியல் சதுரங்கத்தில் தகுதியே தடை;
அடிமையே தகுதி.

உண்மை நிலைத்திருக்கும் 
அ ளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது  இரண்டுக்கும் கிட்டத்தட்ட  சம ஆயுள்.

உண்மையில் மனித சமுதாயத்திற்கு பாதுகாப்பு எதில் அடங்கி இருக்கிறது?

தன்னை உணர்வதிலும், தன் வன்முறை குணத்தை கவனித்து கைவிடுவதிலும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுகுள்ளும் ஒரு போராளி ஒளிந்து இருக்கிறான். இது ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரையில் வருவது…..

நீங்கள் போலியான ஏமாற்றி பிழையான வெற்றிக்கு ஆசைப்பட்டால் தோல்வியடைவீர்கள். நீங்கள் ஒருபோதும் இம் மாதிரி வெற்றியை விரும்பவில்லை என்றால் உங்களை யாரும் தோல்வியடையச் செய்ய முடியாது.

என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நல்லது. அலட்டிக் கொள்ளாதீர்கள்.

இது இப்படியே இருக்கப் போவதில்லை. இதுவும் கூட மாறும். ஆனால் அதை மாற்றுவதற்கு நீங்கள் எந்த முயற்சியும் செய்யாதீர்கள். வாழ்க்கையிடமே அதை விட்டு விடுங்கள்.

இதைத்தான் நான் நம்பிக்கை என்கிறேன். வாழ்க்கை உங்களை விட புத்திசாலி. உங்களுடைய வளர்ச்சிக்குத் தேவையான எல்லா வாய்ப்புகளையும் அது தரும்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
27-5-2024.


No comments:

Post a Comment

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர். •••• "வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி" நாடாளுமன்றத்தில் திமுக எம்பி...