Saturday, December 12, 2015

Chennai rains

சென்னையை அழிவில் இருந்து தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி "தி வயர்" இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் தான் எல்லாம் என்ற கொள்கையை முதலில் மாற்ற வேண்டும். திருச்சிக்கு சட்டசபையை மாற்றலாம். 

அதேபோல கோவையை வர்த்தக தலைநகரமாக மாற்றலாம். 

தமிழகத்தின் ஐகோர்ட் தலைமையிடம் மதுரைக்கு இடம் பெயர்க்க வேண்டும். ஏற்கனவே அங்கு ஐகோர்ட் கிளை உள்ளது. 

முதல்வர், கவர்னர், தலைமைச் செயலகம், அமைச்சர்கள் மட்டுமே சென்னையில் இருக்கும்படி மாற்றியமைக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அங்கு தலைநகராக பிரிட்டோரியா உள்ளது. அங்குதான் அரசு அலுவலகங்கள் உள்ளன. அதேசமயம், நாடாளுமன்றம் கேப்டவுனில் இருக்கிறது. உச்சநீதிமன்றம் புளோம்போன்டனில் உள்ளது. வர்த்தக தலைநகராக ஜோஹன்னஸ்பர்க் விளங்குகிறது. ஆனால் எல்லாமும் ஒருங்கிணைக்கப்பட்டு அருமையாக இயங்குகின்றன. 
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Friday, December 11, 2015

Farmers suicides

அதிர்ச்சித் தகவல் மகாராஷ்டிராவில் 11 மாதத்தில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

மும்பை, டிச. 11 -மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த ஜனவரி 1 முதல் டிசம் பர் 7 வரையி லான 11 மாதத் தில் மட்டும் சுமார் 3 ஆயி ரம் விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக மரத்வாடா பகுதியில் மட்டும் ஆயிரத்து 24 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய ஆட்சியாளர்களால் விவசாயிகள் நலன் முற்றிலுமாக புறந்தள்ளப்பட்டு வருகிறது. வறட்சி மற்றும் பருவம் தவறிய மழை ஒருபக்கமும், வேளாண் விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது, உரம், பூச்சி மருந்துகளின் விலை உயர்வு, விவசாயத்திற்கான மானிய வெட்டு மறுபுறமுமாக விவசாயிகளை துயரத்தின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டு வரு கின்றனர். கர்நாடக மாநிலத்திலும் அண்மைக் காலமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நடப்பு ஆண்டின் 11 மாதங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் மரத்வாடா பகுதியில் மட்டும் 1024 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு இந்த பகுதியில் 569 பேரும், அதற்கு முந்தைய 2013ம் ஆண்டில் 207 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Lr to TN CM....

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,

வணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம் வரவில்லை.உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை ‘அம்மா’ என்று அழைப்பதோடு தமிழகத்தையும் அப்படி அழைக்க வைத்துவிட்டார்கள். நீங்களும் எங்கள் வரிப்பணத்தில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று ஏராளமாக, தாராளமாக ‘அம்மா’ திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டீர்கள். அம்மா என்கிற சொல் தமிழர்களுக்கு உயர்வானது. தாய்மை என்றால் கருணை என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறவர்கள் தமிழர்கள். தன் குஞ்சுகளைக் கொல்ல வரும் பருந்தைக்கூட சாத்தியப்படாத உயரத்தில் பறந்து சண்டையிட்டுக் காப்பாற்ற முயலும் தாய்க்கோழி. ஆனால் நீங்களோ வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைக் கண்கொண்டும் பார்க்கத் தயாராயில்லை. 
    
நவம்பர் மாத இறுதியில் பெருமழை பெய்து கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டும், கூக்குரல்கள் எவையும் உங்கள் காதுகளை எட்டவில்லை. உங்கள் போயஸ் கார்டன் வீட்டைத் தாண்டியும் சென்னை இருக்கிறது. அங்கே உங்களுக்கு வாக்களித்த அப்பாவி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரவேயில்லை. சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் என பாதிப்புகளைப் போதுமான அளவுக்குப் பட்டியலிட்டும் படம் பிடித்தும் காட்டியபிறகு, ஒருவழியாக உங்கள் வீட்டின் கதவுகள் திறந்தன. நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் என்று நினைத்தால், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மட்டும்தான் என்பதுபோல் ஆர்.கே.நகருக்குச் சென்றீர்கள். காரைவிட்டு இறங்காமலே ‘பார்வையிட்டீர்கள்’. மைக் பிடித்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசி இழிவான அரசியலின் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தீர்கள். ‘ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கச்சிதமாக வசனம் பேசினீர்கள். அவ்வளவுதான்!
சரி, அப்போது நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பி.பி.சி. அறிவித்ததே, வானிலை ஆய்வு மையமும் கனமழை பெய்யும் என்று அறிவித்ததே... அந்த மழைக்கும் பெருகப்போகும் வெள்ளத்துக்கும் என்ன செய்தீர்கள்? ‘செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?’ என்று எங்களைப் பார்த்து கேட்ட நீங்கள், பேரிடர் தருணத்தில் கூட ஒன்றுமே செய்யவில்லையே! டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா? இல்லை!

மோடி, ஹெலிகாப்டரில் பார்வையிடப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவருக்கு முன்னால் நீங்கள் ஹெலிகாப்டரில் ‘பார்வையிட்டீர்கள்’. அடுத்த மாநிலத்து முதல்வரோ, பிரதமரோ ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சென்னை முழுக்க வெள்ளப் பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்போது சிலநாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் பார்வையிடுவதற்குப் பெயர்தான் முதல்வரா? பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சந்திப்பதில் இருந்து எது உங்களைத் தடுத்தது? 

பாதிக்கப்பட்டவர்களைத்தான் பார்க்க வரவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே. சென்னையின் பாதிப்பு, அதற்கு அரசு எடுக்கப் போகும் முயற்சிகள் என விலாவாரியாக விளக்கியிருக்கலாமே! ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே... லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? உங்களைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா?
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை; பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இதோ இத்தனை பாதிப்புகளுக்கு இடையில் ஈரநெஞ்சம் கொண்ட சாமான்ய மனிதர்களும்,  சிறுசிறு அமைப்புகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அரசு ஊழியர்களும் நிவாரணப் பணிகளைச் செய்து முடித்தபிறகு, முந்தா நாள் அறிக்கை விடுகிறீர்கள், ‘கனமழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது’ என்று. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாட்களா? ஊரே கதறியபோது, சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தது ஜெயலலிதாவும் ஜெயா டி.வி.யும் மட்டும்தான். 

சாதாரண மக்கள் கொண்டுசேர்த்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். பல இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்போனவர்களை மிரட்டினார்கள். ‘தவறு செய்யும் கட்சிக்காரர்களைத் தண்டிப்பவர் ஜெயலலிதா’ என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். ‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அமைச்சர் பதவி போகுமே தவிர, ‘குற்றவாளி’ என்று குன்ஹா தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்’ என்று புரிந்தவர்களுக்கு இந்தப் பிம்பம் ஒரு மாயை என்று தெரியும். இந்த மாயையை நம்புபவர்கள் சார்பாகவே கேட்கிறேன், அடுத்தவர் பொருட்களில் ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டிய அடாவடிக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஜெயலலிதா? கொடுமையிலும் கொடுமையாக துக்க வீட்டிலும் ’அம்மா துதி’ பாடுகிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். சகிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லாதது, நிவாரணப் பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமா உங்கள் ஆட்சியின் குற்றங்கள்? இதோ, ‘அதிக மழை பெய்ததால் மட்டும் வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைச் சீராகத் திறந்துவிடுவதில் ஏற்படும் தாமதமும் ஒரேடியாகத் திறந்துவிடப்பட்டதும், மக்களுக்கு முறையாக அறிவிக்காததும்கூட காரணங்கள்’ என்று செய்திகள் வெளியாகியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைமையிலான செயல்படாத அரசாங்கம்தானே ஜெயலலிதா அவர்களே..!?

‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கட்சிக்காரர்கள் தொடங்கி கலெக்டர்கள் வரை சொல்ல வைத்திருக்கிறீர்களே, அந்த ‘அம்மாவின் ஆணை’ எப்போது வரும் என்று தெரியாமல் காத்துக்கிடந்ததுதானே இந்த வெள்ளத்துக்குக் காரணம். இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரை தலைமைச் செயலாளரால் உங்களைச் சந்திக்க முடியவில்லையே. பாதிக்கப்பட்ட மக்களையும் பத்திரிகையாளர்களையும், ஏன் பிரதமரையும்கூட சந்திக்காத நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

பதவியில் இல்லாதபோதும் ‘மக்களின் முதல்வர்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்கள். ஆனால், பதவியில் இருக்கும் இப்போதுகூட நீங்கள் மக்களின் முதல்வராக இல்லையே!

உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும்,  நிரந்தர முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். ஜனநாயகத்தின் வாசனை தப்பித் தவறிக்கூட கசிந்துவிடாத உங்கள் கட்சியில் நீங்கள் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்கலாம். நீங்கள் நிரந்தர முதல்வரா இல்லையா என்பதை ஆறுமாதங்களில் வரப்போகும் தேர்தல் சொல்லிவிடும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி - இந்த இயற்கைப் பேரிடரும், அதில் உங்கள் தலைமையிலான அரசு காட்டிய அலட்சியமும், உங்கள் கட்சிக்காரர்கள் காட்டிய அடிமை மோகமும், தமிழகத்துக்கு நிரந்தரக் களங்கம். 
தனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்!

இப்படிக்கு, 
தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான போயஸ் கார்டனுக்கு அப்பால் வசிக்கும் ஒரு சென்னைவாசி!

Wednesday, December 9, 2015

Wat to do....

உலகின் மிக முக்கியமான நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கடல்மட்டம் அதிகரிப்பதால் நியூயார்க், லண்டன், மும்பை போன்ற உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பிரதேசங்கள் ஆகிய தென், வட துருவங்கள் புவி வெப்பமடைந்து வருவதால் மிக வேகமாக உருகி வருகிறது.

இதனால் வரும் அரை நூற்றாண்டுக்குள் இவை முழுவதுமாக உருகிவிடும். மேலும் கடல்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

இவ்விரண்டு துருவங்கள் மட்டுமின்றி கிரீன்லாந்து பனிப்படலங்களும் கூட அதிவேகமாக உருகி வருகின்றன. ஒருவேளை இந்த கிரீன்லாந்து பனிப்படலங்களும் முழுவதுமாக உருகிவிட்டால் உலகின் மிக முக்கியமான நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எட்டு அங்குலம் உயர்ந்துள்ளது :-

ஏற்கனவே, புவி வெப்பமயம் ஆதல் காரணத்தினால், நமது உலகில் கடலின் உயரம் எட்டு அங்குலம் வரை உயர்ந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பல கடலோர பகுதிகள் மற்றும் தீவுகளின் கடற்கரை மட்டம் உயர்ந்து வருகிறது. கிரீன்லாந்து பனிப்படலங்கள் உருகிவிட்டால் ஒருவேளை இப்போது வேகமாக உருகி வரும் கிரீன்லாந்து பனிப்படலங்களும் முழுமையாக உருகிவிட்டால் தற்போது உள்ளதை விட 23 அடி வரை வர கடல் மட்டம் உயரலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் உலகின் முக்கிய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன.

சென்னை 

கடும் மழை வெள்ளப்பெருக்குக்கே நிலைக்குலைந்து போன சென்னையும் இதற்கு தப்பாது. இயற்கையை சீர்குலைத்த நமது செயல்பாடுகளின் விளைவு தான் இது. இயற்கை இனி வரும் நாட்களில் அதற்கான தக்க பதிலடிகளை தரத்தான் போகிறது என்பது மட்டுமே உண்மை.

மும்பை 

இந்தியாவின் மான்செஸ்டர் நகரான மும்பை வர்த்தக ரீதியாக மாபெரும் நகராக விளங்கி வருகிறது. கடலோர பகுதியான மும்பையும் அபாயத்தில் இருக்கிறது. இங்கு ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சம் பேர் இங்கு குடிப்பெயர்ந்து வந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

துபாய் 

உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து வரும் துபாய். அதிவேகமாக வளர்ச்சி கண்ட பகுதி. உலக பணக்காரர்கள் இங்கு கோடிகளை கோடி வீடுகளை வாங்கி வருகிறார்கள். ஆனால், துபாயும் கடலில் மூழ்கும் அபாயத்தில் முதன்மை பகுதியாக இருக்கிறது.

சிங்கப்பூர் 

எழுச்சியின் இலச்சினை என்று புகழப்படும் சிங்கப்பூரும் கூட கடலில் மூழ்கும் அபாயத்தில் தான் இருக்கிறது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான சிங்கப்பூரில் ஐம்பது லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். 

ஷாங்காய்

சீனாவின் மிக முக்கியமான நகராக திகழ்ந்து வருகிறது ஷாங்காய். ஏறத்தாழ இரண்டு கோடியே நாற்பத்தி ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்து வரும் உலகின் பெரும் நகரம். வர்த்தக ரீதியாக உலகின் முக்கிய நகராக விளங்கிவரும் இந்த நகரம் கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது.

நியூயார்க் 

வர்த்தக ரீதியில் உலகின் மற்றொரு முக்கிய நகரமாக திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க். ஏறத்தாழ இந்த நகரில் 90 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். கிரீன்லாந்து பனிப்படலம் முற்றிலுமாக உருகினால் இந்நகரமும் கடலில் முற்றிலுமாக மூழ்கிவிடும்.

சிட்னி 

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத்வேல்ஸ் பகுதியின் தலைமையிடமாக கொண்டது சிட்னி. இங்கு ஏறத்தாழ 50 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். உலக சந்தை பொருளாதாரத்தில் முக்கியமான நகராக திகழ்ந்து வரும் சிட்னியும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது.

இஸ்தான்புல் 

துருக்கியின் மிக முக்கியமான நகர். வர்த்தக ரீதியில் மட்டுமின்றி, கலாச்சாரம், வரலாறு, நாட்டின் பொருளாதாரம் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் நகர் தான் இஸ்தான்புல். இந்நகரமும் கடலில் மூழ்கிவிடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். இந்த நகரில் ஏறத்தாழ 1.5 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

லண்டன் 

இங்கிலாந்தின் மிகமுக்கியமான நகர் என்று லண்டனை குறிப்பிடலாம். இது மாபெரும் வரலாற்று பின்னணி கொண்ட நகரும் கூட. இங்கு ஏறத்தாழ 80 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டவுன் 

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க்கிற்கு அடுத்து முக்கியமான நகராக விளங்கிவரும் கேப்டவுன் பகுதியும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது என ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ 

ஜப்பானின் தலைநகர் மற்றும் பெரிய நகர் டோக்கியோ விளங்குகிறது. இது ஒரு மாபெரும் தொழில்நுட்ப நகரம் என்று தான் குறிப்பிட வேண்டும். மக்கள் தொகை அதிகமாக இருக்கும் உலகின் பெரிய மெட்ரோபொலிட்டன் நகர் இது. இங்கு ஏறத்தாழ 1.3 கோடி பேர் வாழ்ந்து வருகிறார்கள். டோக்கியோவும் கடலில் மூழ்கும் அச்சத்தில் உள்ளது.

Tuesday, December 8, 2015

Pls read and think over...... Don Ashok · @thedonashok 8th Dec 2015 from TwitLonger அன்புள்ள தமிழக ஊடகங்களுக்கு, அதிமுக அரசு பதவியேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எனக்குத் தெரிந்து நீங்கள் அதிமுக அரசை விமர்சித்து இலேசாக சிணுங்க ஆரம்பித்ததே இந்த வெள்ளம் வந்த பின்புதான். அதுவும் இப்போதும் சிணுங்கவில்லை என்றால் மக்களின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பயத்திலும், நடுநிலை வேடம் அப்பட்டமாக கலைந்துவிடும் என்ற பயத்திலும் சிணுங்கியிருக்கிறீர்கள். முதன்முறையாக சென்னைக்கு அரசு பிரஸ்மீட்டில் பங்கேற்க வந்த இந்திய ஊடகவியளார்களுக்கு சென்னையை ஆட்டுவித்த வெள்ளத்தை விட அமைச்சர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் எழுதிக் கொண்டுவந்ததை, "அம்மா, அம்மா," என ஒப்புவிக்கும் பாங்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்பதை ஆங்கில ஊடகங்கள் எதைப் படித்தாலும் அறிந்துகொள்ளலாம். எந்த ஒரு ஜனநாயகத்திலுமே அதிகார அடுக்கு என்பது அவசியம். நாம் ஓட்டுப் போட்டு மன்னர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை, மக்கள் பிரதிநிதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறோம். முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரின் அதிகாரமும் இணைந்து இயங்குவதுதான் அரசு. அந்த அதிகார அடுக்கு சரியாக இருந்தால்தான் அரசு இயந்திரம் என்பது சரியாக வேலை செய்யும். இதெல்லாம் ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகள். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் அப்படியா நடக்கிறது? அமைச்சர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்றால் அது அவர்களது தவறு இல்லை. புதிதாக ஒரு அலுவலகத்தில் சேரும் ஒரு பியூன் கூட அந்த அலுவலகத்தின் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள சில வாரங்கள் ஆகும். அப்படியிருக்க, மாநில அமைச்சர்கள் தங்கள் துறையைச் சேர்ந்த செயல்பாடுகளை அறிந்துகொள்ள எத்தனை நாட்கள் ஆகும்? அந்த அவகாசம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதா? அல்லது அமாவசைக்கு ஒருமுறை சுழற்றியடிக்கப்படும் அமைச்சரவையில் இது சாத்தியம் தானா? ஒருமுறை, ஒரே ஒருமுறையாவது பொறுப்புள்ள ஊடகமாக, "ஏன் இந்த அமைச்சரை மாற்றினீர்கள்? காரணத்தைச் சொல்லுங்கள்" என உங்களில் ஒரு பத்திரிக்கையாவது முதல்வரைப் பார்த்து கேள்வி கேட்டிருக்கிறீர்களா? மாறாக அதை எதோ ஹீரோயிசம் போல அல்லவா சித்தரித்தீர்கள்! அமைச்சர்கள் படித்தவர்களாக இருக்கவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. அதை ஈடுசெய்யத்தான் அதிகாரிகள் இருக்கிறார்கள். சரியான ஆலோசனைகளைக் கேட்டு முடிவெடுக்கும் அதிகாரம் மட்டும் தான் அவர்களுக்குத் தேவை. அந்த அதிகாரம் தான் தமிழக அமைச்சர்களிடம் முற்றிலும் கிடையாதே! திமுக ஆட்சியில் அந்தந்த துறையின் ஆணை அந்தந்த அமைச்சரின் பெயரில் வெளிவரும். திமுக மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே அதுதான் மரபு. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கொட்டாம்பட்டியில் ஒரு பொதுக்கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கினால் கூட அதுவும் முதல்வர் பேரில் தான் வெளிவரும். பிறகு எதற்கு அமைச்சரவை, அமைச்சர்கள்? ஒரு கல்லூரியின் ப்ரின்சிபலே எல்லா வகுப்புகளையும் நடத்தும் அளவுக்கு மகா-வல்லமை பொருந்தியவராக இருந்தால் எதற்கு மற்ற ஆசிரியர்கள்? எதற்கு அவர்களுக்கு சம்பளம்? இந்தக் கேள்விகளை எல்லாம் நான்கரை ஆண்டுகளாக நீங்கள் கேட்டிருந்தால் ஒருவேளை நமக்கு முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பார்கள். சென்னையில் அரசு சார்பிலும் வெள்ள நிவாரணப் பணிகள் நடந்திருக்கும்! தமிழ்நாட்டில் எதில் எப்போது அம்மா படம் ஒட்டப்படவில்லை? வாட்டர் பாட்டிலில் இருந்து, மிக்ஸி, ஃபேன், என எல்லாவற்றிலும் அம்மா படமும், இரட்டை இலை சின்னமும் தானே! என்ன ஆச்சரியம் என்றால் இவ்வளவு கலவரத்திலும் இவ்வளவு மோசமான சூழலிலும் இத்தனை லட்சம் ஸ்டிக்கர்களை இந்த அரசு எப்படி இவ்வளவு துரிதமாக அச்சடித்தது என்பதுதான். கடைசியாக வீட்டில் இருக்கும் 'தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சியில்' தமிழக அரசின் லட்சிணையைப் பார்த்தேன். அதன்பிறகு எங்கு பார்த்தேன் என முற்றிலும் மறந்துவிட்டது."ஏன் எல்லா திட்டங்களிலும் உங்கள் படத்தையும், இரட்டை இலையையும் பதிப்பிக்கிறீர்கள்? தமிழக அரசு லட்சிணை என்று ஒன்று இருந்ததே அது என்ன ஆனது?" என உங்களில் யாராவது கேள்வி கேட்டிருந்தால் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் போது ஆறஅமர ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்திருக்காது! தவறு அவர்கள்மீது அல்ல. முழுக்க முழுக்க உங்கள் மீது! நான்கரை ஆண்டுகளாக இந்த அரசின் அத்தனை செயல்பாடுகளையும் கேள்விக்கு உள்ளாகாதபடி, மக்களுக்கு தெரியாதபடி மறைத்து, மறைத்து காப்பாற்றியது நீங்கள். மன்னராட்சியில் ஒரு குறை என்றால் முழுப்பழியையும் மன்னன் மீது போட்டுவிடலாம். ஆனால் மக்களாட்சியில் மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டிய ஊடகங்களுக்கு சரிநிகர்பங்கு இருக்கிறது. தமிழக ஊடகங்களான நீங்கள் நான்கரை ஆண்டுகளாக கேள்வியே கேட்காமல் ஒத்து ஊதும் பணியை மட்டுமே செய்து முற்றிலும் செயலிழந்ததன் விளைவைதான் இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள். அரசின் மீதான விமர்சனங்களை அரசு பதவியேற்ற அடுத்த நாளில் இருந்தே நீங்கள் ஆரம்பித்திருக்க வேண்டாமா? அட மற்ற எல்லாவற்றையும் விடுங்கள். உங்களையெல்லாம் வாரம் ஒருமுறை சந்திக்கப்போவதாக பதவியேற்ற நாளில் ஜெயலலிதா அறிவித்தாரே. உடனே, "அட ஜெயலலிதா திருந்திவிட்டார்," என எழுதி மகிழ்ந்து குதித்தீர்களே, அந்த வாக்குறுதி என்ன ஆனது என கேட்கவாவது உங்களில் ஒருவருக்கேணும் துப்பிருந்ததா? இந்த நான்கரை ஆண்டுகளையும் நீங்கள் எப்படி ஒப்பேத்தினீர்கள்? திமுக விமர்சனம், விஜயகாந்த்தை கிண்டல், வைகோவை கேலி, ராமதாசை நக்கல்! கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழக அச்சு ஊடகங்களில் வெளியான அட்டைப்படங்களையும், தமிழக காட்சி ஊடகங்களின் விவாதத் தலைப்புகளையும் பார்த்தாலே இந்த அவலத்தை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் மீதான விமர்சனங்களை வைக்கக் கூடாது என இங்கே யாரும் சொல்லவில்லை, ஆனால் அதில் காட்டிய அக்கறையில் ஒரு சதவிகிதத்தையாவது அரசின் மீது வைத்திருக்கலாமே! சரி. இப்போதாவது திருந்தினீர்களா என்றால் அதுவும் இல்லை. ஒரு அதிமுக அரசியல்வாதி, தன்னார்வலர் ஒருவரிடம் நிவாரணப் பொருட்களைக் கேட்டு சண்டை போடுகிறார். அதை வீடியோவுடன் வெளியிடுகிறது பாலிமர் டிவி. ஆனால் அந்த நபரைக் குறிப்பிடும் போது, 'ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த நபர்' எனச் சொல்கிறது!! அதிமுகவைச் சேர்ந்தவர் எனச் சொன்னால் குடிமூழ்கிவிடுமா? இதுதான் ஊடக அறமா? இந்தப் பக்கம் தந்திடிவியில் பாண்டே, "வெள்ளத்துக்கு விதிதான் காரணமா?" என விவாதித்துக் கொண்டிருக்கிறார். விதிதான் காரணம் என்றால் எதுக்கு தந்திடிவி? எதற்கு ஊடகம்? எல்லாமே விதிதான் எனப் போக வேண்டியதுதானே! தினமலரோ, "ஹெலிகாப்டரில் போனால் எங்கள் பாடு தெரியுமா?" என ஒரு பதிப்பிலும், "ராணுவத்தளபதி ஜெயலிதா," என இன்னொரு பதிப்பிலும் வெளியிடுகிறது. அதன் குடும்பத்திற்குள்ளேயே ஆயிரம் குழப்பம்! எந்தப் பதிப்பு சொல்வதை நம்புவது? ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அப்படியென்றால் பொய் சொல்லும் மற்றவருக்கு என்ன தண்டனை? இதைவைத்து ஒரு விவாதம் நடத்த வேண்டியதுதானே? சென்னையின் பல பகுதிகளில் ஏரிகள் திறந்துவிடப்படுவதைப் பற்றி அறிவிப்பே இல்லை. தன் சிறுவயது மகள்களுடன் ஒவ்வொரு படியாக வெள்ள நீர் மூழ்கடித்துக்கொண்டே தங்களை நோக்கி முன்னேறியதை பீதியுடன் பார்த்ததாக நண்பர் ஒருவர் பயத்துடன் விவரித்தார். மழையே பெய்யாத ஐந்து நாட்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஏரிகளை திறந்துவிட்டிருந்தால் இப்படி ஊருக்குள் சுனாமி போல வெள்ள நீர் புகுந்திருக்காது. இவ்வளவு சேதமும் ஏற்பட்டிருக்கிறாது. "கனமழை பெய்யும் என 15நாளுக்கு முன்பே அரசிடம் தெரிவித்தோம் ஆனால் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை," என இஸ்ரோ இயக்குனர் சிவன் கூறியுள்ளாரே இதைப் பற்றி விவாதம் நடத்தினீர்களா? உங்களுக்கு எப்படி இதற்கெல்லாம் நேரமிருக்கும். ஐகோர்ட் ஆலோசனையின்படி பேருந்துகளை இலவசமாக்கி இருக்கிறது தமிழக அரசு. ஆனால் அதை ஜெயலலிதாவின் தாயுள்ளம் போல சித்தரிக்கவே உங்களுக்கு நேரம் போதவில்லையே! இந்த நியாயத்தை எல்லாம் உங்களிடம் எதிர்பார்க்க முடியுமா! அரசியல்வாதிகளை விட மோசமானவர்களாக அல்லவா நீங்கள் இருக்கிறீர்கள்! அரசியல்வாதிகளையாவது மக்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றி பழிதீர்த்துக் கொள்கிறார்கள். மக்களை பச்சையாக ஏமாற்றி பிழைப்பு நடத்தும் உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை? ஊடகங்களான நீங்கள் ஆளுங்கட்சியின் ப்ரோக்கர்களாக செயல்படும்வரை எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவே முடியாது. ஆளுங்கட்சியை உங்களின் எஜமானர்களாக நினைக்காமல், மக்களை உங்கள் நண்பர்களாக நினைத்து அவர்களிடம் உண்மையாக இருந்தால் மட்டுமே மாற்றம் என்பது சாத்தியம். அதுவரை தயவுசெய்து டிவிக்களில் கோட்சூட் போட்டுக்கொண்டு உலக நியாயம் பேசாதீர்கள். கசாப்புக்கடைக்காரன் ஜீவகாருண்யம் பேசுவதைப் போல......

Monday, December 7, 2015

டர்பன் மாநாட்டு பரிந்துரைகள்: 
---------------------------------
Durban Recommendations: Outcome document of the Conference on Peace and Justice in Sri Lanka, 6 & 7 November, 2015
------------------------------------
கடந்த நவம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதி டர்பன், தென்னாப்பிரிக்காவில் தென்னபிரிக்காவை தளமாகக் கொண்ட Solidarity Group for Peace and Justice in Sri Lanka எனும் அமைப்பின் ஏற்பாட்டில் தாயகத்தை தளமாகக் கொண்ட அமைப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ்நாட்டு அமைப்புக்கள் கூட்டமொன்றில் கலந்து கொண்டன. தமிழ் சிவில் சமூக அமையமும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது.  கூட்ட நிறைவில் பொறுப்புக் கூறல் மற்றும் அரசியல் தீர்வுக்கான செயன்முறைக்கு முன்னோடியாக செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துடனான ஊடாட்டத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கி இவ்வமைப்புக்கள் வெளியிட்ட பரிந்துரைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். 

https://www.scribd.com/doc/290158531/Durban-Recommendations

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அரசாங்கம் தீர்க்கமாக முன் வைக்க வேண்டும், இராணுவத்தை விலக்கி கொள்ள வேண்டும், பயங்கரவாதத் தடை சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், புலம் பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட 07 விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடில் பொறுப்புக் கூறல் தொடர்பாகவோ அரசியல் தீர்வு தொடர்பிலோ பேசுவதற்கான சூழல் உருவாகப் போவதில்லை என இவ்வாவணம் சுட்டிக் காட்டுகின்றது. இவ்வாவணம் சர்வதேச சமூகத்தை விழித்து  விடுக்கப்பட்டுள்ளதுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட தென்னாபிரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காணாமல் போன ஏரிகள்



1.நுங்கம்பாக்கம் ஏரி,
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
26.செம்பாக்கம் ஏரி,
27.சிட்லபாக்கம் ஏரி
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
32.செம்மஞ்"ஏரி"
33.பொத்"ஏரி"
34.கூடுவாஞ்"ஏரி"
35. அடை"ஆறு"
36."அணை"காபுத்தூர்
37.பள்ளிக்கர"அணை"
38.காட்டாங்"குளத்தூர்"
39.கொடுங்கையூர் ஏரி (பழைய உயிரியல் பூங்கா)
40.மீனம்பாக்கம் ஏரி
41.ராமாவரம் ஏரி
42.மதுரவாயல் ஏரி

- இப்ப புரியுதா? ஏரி, குளம், ஆறு, அணை-ல தண்ணீர் நிற்காம வேறு எங்க நிற்கும்..

நாம்தான் நீர் நிலைகளை கபளீகரம் செய்துவிட்டோமே.

‪

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...