Tuesday, November 4, 2014

மகிழ்ச்சியாக உள்ளது....

மகிழ்ச்சியாக உள்ளது.... 
----------------------------------
முகநூலில் நான் எழுதிய குறிப்புகள், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகு, பத்திரிகைகளில் செய்திகளாக வருவதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு இன்றைய (04.11.2014) தினகரன் ஏட்டின், 10ம் பக்கத்தில், கடந்த வாரம் பிரிட்டிஷ் காலத்தில் நடைமுறைக்கு வந்த சட்டங்களில் மொத்தம் 700 சட்டங்கள் நடைமுறைக்கு வராமல் பயனற்ற சட்டங்களாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 258 சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற இருப்பதாக எழுதிய முகநூல் குறிப்பு, இன்றைய தினகரனில் வெளிவந்துள்ளது. சீன - இலங்கைக்கு இடையே, இராணுவம், பொருளாதாரம், வணிகம் குறித்து போடப்பட்ட ஒப்பந்தங்களை பற்றி பல முறை முகநூலில் எழுதப்பட்டது. இன்றைக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில், இதுகுறித்து கட்டுரை வெளிவந்துள்ளது. சேது சமுத்திரத்தை ஆய்வு செய்ய நிதின் கட்கரி வருகிறார் என குறிப்பிட்டது, இன்றைக்கு தான் செய்தியாக வந்துள்ளது. இப்படி பல செய்திகள். இவற்றை பார்க்கும் பொழுது முகநூலில், முன் கூட்டி குறிப்பிடப்பட்ட செய்திகள், பயனுள்ள வகையில் அமைந்துள்ளது என்று நம்புகிறேன்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Sunday, October 26, 2014

ஓமந்தூரார்

ஓமந்தூரார்
--------------------------------------
பொது வாழ்விலும், அரசியலிலும் தகுதியும், தரமும் தடையாக அக்காலத்திலேயே இருந்தது என மறைந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.மாரிசாமி என்னிடம் அடிக்கடி சொல்வார். அதற்கு சாட்சியாக ஒரு சம்பத்தை சொன்னார்.

                       

நேர்மையாளர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை ராஜதானியின் பிரதமராக (அப்போது முதல்வரை பிரதமர் என அழைப்பர்) இருந்த பொழுது நிர்வாகத்தில் நேர்மை, மக்கள் பணி, பொது வாழ்வில் தூய்மை என்பதை பிசகாமல் பின்பற்றினார். காங்கிரஸ் கட்சியினர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை குறை சொல்லி அவரை அவதூறாக பேசியதாகவும், அவரை பதவியிலிருந்து இறக்க வேண்டும் என பலர் மெனக்கெட்டதாகவும், நிலைமைகள் மோசமாகி பிரச்சினைகள் கிளம்பி அவருக்கு சிக்கலை உருவாக்கும் வகையில் பண்டித நேருவிடம் பிரச்சினைகளை எடுத்துச் சென்றனர். பெருந்தலைவர் காமராஜருக்கும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது என்றும் மாரிசாமி சொன்னார்.
                           
                             

எஸ்.எஸ். மாரிசாமி கூறியது: தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், பிரச்சினைகள் முற்றிவிட்டது. ஓமந்தூரார் பதவி விலக வேண்டும். ஒரிசா கவர்னராக இருக்கும் குமாரசாமி ராஜாவை சென்னை ராஜதானிக்கு பிரதமராக்கி விடலாம் என்று முடிவுகள் மேற்கொள்ளபட்டு, ஓமந்தூராரை டி.எஸ்.சொக்கலிங்கம் சந்தித்த போது, அவரிடம் ஓமாந்தூரார் ‘எனக்கு எந்த கசமுசாவும் பிடிக்காது. தப்பு செய்கிறது யாராக இருந்தாலும் விட மாட்டேன். கட்சி எனக்குப் பெரிதில்லை. ஒழுக்கமும் சத்தியமும் தர்மமும்தான் எனது குறிக்கோள். இதற்கு மேல் ஒரு நிமிடம்கூட இந்த பெரிய பொறுப்பில் இருக்க மாட்டேன்’ என படபடத்தார்.  நேர்மையாளரான ஓமாந்தூராரை பதவியில் இருக்க விடாமல், சில ஆதிக்க சக்திகளால் ஏற்பட்ட பிரச்சினையில், வில்லை முறித்து போட்டுவிட்டு, திருதிராஷ்டிரன் சபையிலிருந்து விதுரர் விலகியதுபோல அசால்டாக விலகினார். இந்த தைரியமும் நடவடிக்கையும் யாருக்கு வரும்? பதவியை விட்டு விலகியவுடன், தன்னுடைய பிரதமர் இல்லமான ராஜாஜி ஹாலுக்கு அருகே உள்ள கூவம் ஹவுசுக்கு வந்தார். அண்ணா சாலையில், தர்பார் ஓட்டலுக்கு எதிரே உள்ள டாக்சி ஸ்டாண்டில் ஒரு காரை பிடித்தார். பிரதமராக இருப்பவர் பதவி விலகினாலும், அரசு வாகனத்தை தன்னுடைய சொந்த ஊர் வரை பயன்படுத்தலாம். ஆனால் பதவி விலகிய அடுத்த நிமிடமே அரசு சலுகைகளை உதறி தள்ளினார். கூவம் ஹவுசிலிருந்த தனது துணிமணிகளையும், தனது புத்தகங்களையும், தனக்கு சொந்தமான பாய், தலையணைகளையும் எடுத்து கொண்டு வடலூருக்கு பயணமானார் என்று எஸ்.எஸ்.மாரிசாமி கூறினார்.

இதைப் பார்க்கும் பொழுது, இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனை பேர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை பற்றி அறிந்திருப்பர். ரஜினியையும், விஜய்யையும் பற்றி பேசும் இளைய சமுதாயம் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒழுக்கத்தின் அடையாளம், நேர்மையின் இலக்கணம், தியாக சுடர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு இந்த தமிழகம் வரலாற்றில் உரிய இடத்தை அளிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.
சென்னை ராஜதானிக்கு பிரதமராக இருந்த ஓ.பி.ஆர், திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை அரசு சின்னமாக்கினார். உண்மைகளை சொல்லத் தயங்கக் கூடாது, உள்ளது உள்ளபடி பதிவுகளை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த பத்தியின் நோக்கம். நான் குறிப்பிட்ட இந்த செய்திகளை மறைந்த எஸ்.எஸ்.மாரிசாமியே, 29.9.1995 அன்றைய தினமணியில் ‘ரெட்டியார் ஒரு கர்மயோகி’ என்ற கட்டுரையில் இதைவிட தெளிவாக எழுதியுள்ளார். விவசாயிகளின் முதல்வர்; கண்ணியமான தலைவர்; உத்தமர் காந்தியின் சீடர்; கிராமத்து பிரஜை; நாட்டுக்கு உழைத்தவர். எஸ்.எஸ்.மாரிசாமி சொன்ன சில செய்திகளை நாகரிகம் கருதி, பலரை புண்படுத்தும் என்பதற்காக இங்கு குறிப்பிடவில்லை. பொது வாழ்வில் நல்லவர்களுக்கு என்றும் தடையும், தடங்கலும்தான். பொது வாழ்வு போராளிகள் இதைக் கண்டு அஞ்சுவது இல்லை.
ஓமந்தூராரின் புகழ் என்றும் ஓங்க வேண்டும்.

 - 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, லீ செஸ்ட்டின் போன்ற நாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தைப் பற்றி டெல்லியிருந்து வெளிவரும் பயணியர் ஏட்டின் தலைப்புச் செய்தி.

தமிழக நீர் நிலைகள்

தமிழக நீர் நிலைகள்
------------------------------------------
நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறு ஊரணிகள், குட்டைகள் என பல வகையான நீர் நிலைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, அவை கவனமாக மேலாண்மை செய்து பாதுகாக்கப்பட்டது. சோழர்கள் கட்டிய வீர நாராயணன் ஏரி, கல்லணை என்பவற்றையெல்லாம் அக்காலத்தில் எப்படி அமைத்தார்கள் என்று நமக்கு தெரியவில்லை. மதுரையிலுள்ள  வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள பொற்றாமரை குளம் என தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குளங்கள், தெப்பங்கள் போன்றவை எப்பொழுதும் நீர் நிறைந்து இருப்பது, அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்தை கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழினம் அறிந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

                     

இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இன்றைக்கு 39,202ஆக குறைந்து விட்டது. ஏரி மாவட்டமான ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்துவிட்டன. இந்தியாவிலேயே குளங்கள், ஏரிப் பாசனம் தமிழகத்தில் தான் அதிகம். வடக்கே பள்ளிப்பட்டிலிருந்து, தெற்கே பத்மநாபபுரம் வரை இருந்த பல நீர் நிலைகள், சில சுயநலவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.  இப்போது இருக்கின்ற நீர் நிலைகளையாவது பாதுகாக்க வேண்டாமா என்பதுதான் இன்றைய கேள்வி. ஆம்;  அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியவை:

பழமை என்று நினைக்காமல் காலம் காலமாக தமிழகத்தில் மரபு ரீதியாக அமைந்த நீர் பாசன, நீர் மேலாண்மை பற்றி அறிந்து, நவீன நடைமுறைகளோடு இணைத்து செயல் திட்டங்களை வகுத்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
ஆறுகளில் சமூக விரோதிகள் அள்ளும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். அள்ளும் மணலில் 80 சதவீதம் வேறு மாநிலங்களுக்கு, சுயநலவாதிகள் விற்று விடுகின்ற வேதனையான நிலைப்பாடு தற்போது உள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் தான் தமிழகத்திற்கு பயன்படுகிறது. அதுவும் கொள்ளை லாபத்தில் மணலை விற்கின்றனர்.

மழைக் காலங்களில் வரும் வெள்ளத்தை தடுக்க, தடுப்பு அணைகள் கட்டி நீரை சேமிக்கலாம். காவிரியில் மட்டும் 60 தடுப்பு அணைகள் கட்டலாம்.

கிராமங்களில் ஆயக்கட்டு விவசாயிகள் கூட்டுறவோடு, ஒரு காலத்தில், தங்கள் கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை தூர் வாறியதுண்டு. அப்பாவி விவசாயி, விவசாய நிலத்திற்கு மாட்டு வண்டியில், தற்போது வண்டல் எடுக்க முடியவில்லை. அதற்கு சட்டம் தடை போடுகின்றது. ஆனால், மணல் கொள்ளையர்கள் லாரி லாரியாக அள்ள இன்றைக்கு சட்டம் வழி செய்கின்றது. விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதால் குளங்களும், ஏரிகளும் தூர் வாறப்பட்டு நீரின் கொள்ளளவைக் கூட்டி, தேவையற்ற தாவரங்கள் அழிக்கப்பட்டு, தண்ணீரின் அளவு நீர் நிலைகளில் அதிகமாகும். வண்டலும் விவசாயத்திற்கு பயன்படும். இதற்கு அரசின் தடைகள் உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் தூர் வாறப்பட்ட குளங்களும், ஏரிகளும் அதற்கு பின் இதுவரை முழுமையாக தூர் வாறப்படவில்லை. அப்படியே தூர் வாறினாலும் அதில் ஊழலால் சரியான பணிகள் நடப்பதில்லை. அதிலும், அரசு பல தடைகளை போட்டுள்ளது.

           

அய்.நா. மன்றம், எதிர்காலத்தில் உலகில் 1.8 பில்லியன் மக்கள் சுகாதாரமான தண்ணீர் இல்லாமல், வறட்சியில் தவிப்பார்கள் என்று ஒரு அறிக்கையில் சொல்லி உள்ளது. குறிப்பாக தமிழக பகுதிகளும் இதில் அடங்கியுள்ளது.
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவி நயினாறு, உள்ளாறு, செண்பகத்தோப்பு; முல்லைப் பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, சிறுவாணி, காவிரி, ஒக்கேனக்கல், பாலாறு, பொன்னியாறு என்று கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுடன் பல நதி நீர் பிரச்சினைகள் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு, எப்பொழுது தீர்வு கிடைக்குமோ என்று தெரியவில்லை. தமிழகத்தில் பொதிகை மலையில் உற்பத்தியாகி, புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணி மட்டும்தான் நமக்கு முழுமையாக பயன் அளிக்கிறது.  மழை வெள்ளத்தால் வருகின்ற தண்ணீரை பாதுகாத்து பயன்படுத்த கூடிய நிலையில் நம்முடைய நீர் நிலைகள் தயாராக இல்லை. இதனை நாம் சரியாக கவனிக்க தவறுவோமானால் தண்ணீர் பற்றாக்குறையால் ஆபத்தான நிலையை தமிழகம் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.

மழை நீர் 40 சதவீதம் கடலுக்கும், 35 சதவீதம்  பூமி வெப்பத்தினால் ஈர்க்கப்படுகிறது. 10 சதவீதம் நிலத்தடி நீராகிறது. இப்படி ஒரு புள்ளி விவரம் இன்றைக்கு உள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் குறைவது மட்டுமல்லாது சுவை தன்மை மாறி, சவர் தண்ணீராகிறது.

பிரம்மபுத்திராவிலிருந்து 18,437 கன மீட்டர் தண்ணீர் வீணாகிறது. அதேபோல், கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் படுகையிலிருந்து 3,640 கன மீட்டரும், மகாநதியில் 2,546 கன மீட்டரும், காவிரியில் 660 கன மீட்டர் தண்ணீர் கடலுக்கு செல்கின்றது. இந்தியாவில் கடலுக்கு செல்லும் நதி நீரில் பாதியை, நீர் நிலைகளில் சேமித்தால் எதிர்காலத்தில் விவசாயத் தொழில், மற்றைய தேவைகளுக்கு பயன்படும். நீர் மேலாண்மையும் அதன் பயன்பாட்டிலும் விவசாயம் மற்றும் குடிநீர், தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில்  ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு, முறையான நீர் மேலாண்மை உத்திகளை வகுக்க வேண்டும். இச்சிக்கலில் கவனம் செலுத்தாமல் இருந்தால் நமக்கு பெரும் கேடு விளையும் என்பதை உணர வேண்டும். மக்கள் தொகை பெருக்கமும், தேவைகளும் அதிகரிக்கின்ற நிலையில் இப்பிரச்சினையில் இதயசுத்தியோடு கடமைகளை ஆற்ற வேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
இது அவசியம்! அவசரமும்கூட.. ..

 -
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

அம்ரிதா ப்ரீதம்

அம்ரிதா ப்ரீதம்
----------------------------------
சாகித்திய அகடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம்.  பஞ்சாப் மாநிலம் குஜ்ரன்வாலாவில் (இப்போது பாகிஸ்தான்), 1919ஆம் ஆண்டு கர்தார் சிங் ஹித்காரியின் மகளாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியர் பணியோடு இலக்கியம், படைப்பாற்றல்வாதியாக திகழ்ந்தார். 1948ஆம் ஆண்டு டெஹ்ராடூனிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணித்தார் நிறைமாத கர்ப்பிணியான அம்ரிதா ப்ரீதம். ரயிலின் வேகமும், சப்தமும் அவரை எரிமலையாய் குமுறச் செய்தது. காரணம் இதற்கு முந்தைய ஆண்டுதான் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு, அவர் பாகிஸ்தானிலிருந்து டில்லிக்கு பயணம் செய்ய வைத்தது. இந்த பிரிவினைக்கு சாட்சியாக உணரப்பட்ட அவர், இதற்கு முன் அகதியாய் லாகூரிலிருந்து டில்லிக்கு உயிர் தப்பி ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

                           

டெஹ்ராடூன் - டில்லி ரயில் பயணத்தின் போது, ‘அஜ் அகான் வாரிஸ் ஷா’  என்ற வரிகளில் தொடங்கும் கவிதையை எழுதினார். அந்த பஞ்சாபி கவிதை, இந்திய பிரிவினையின் கோரத்தை கடுமையாக கூறியது. 1943ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தில், ஆயிரகணக்கானோர் மாண்டதை கேள்விப்பட்ட அம்ரிதா ப்ரீதம், ‘லோக் பித்’ (மக்கள் கோபம்) என்ற படைப்பை வெளியிட்டார். அனைத்திந்திய வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்த அவர், 1960ல் தனது கணவரிடமிருந்து பிரிந்து, தனது திருமண வாழ்வின் கசப்பை கதைகளாக எழுதினார். புகழ்பெற்ற ஓவியரான இம்ராஸோடு இறுதிவரை இணைந்து வாழ்ந்தார்.

இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஷ், ஜப்பானிய மொழிகளில் வந்துள்ளது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாக டாக்டர் தேவ், கோரே ககாஸ், உன்சாஸ்தின், சாகர் அவுர் சீபியான், ரங் கா பட்டா, தில்லி கி காலியான், தேராவன் சூரஸ், யாத்ரி, ஜில்லாவதன் போன்றவற்றை கூறலாம். காலா குலாப், ராசிதி டிக்கெட், அக்ஷரான் கோ சாயீ ஆகியவை அவரது சுயசரிதைகளாக கருதப்படுகின்றன. கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள இவர் நாக்மணி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பஞ்சாப் ரத்தன் விருது, 1956இல் சாகித்திய அகடமி, 1969இல் பத்மஸ்ரீ, 1973இல் டில்லி மற்றும் பஞ்சாப் பல்கலை கழகங்கள் வழங்கிய இலக்கிய விருது, 1979இல் பல்கேரிய அரசின் உயர்ந்த விருது, 1982இல் ஞானபீடம், 1987இல் விஸ்வபாரதி, பிரெஞ்சு அரசின் உயர்ந்த விருது, பத்ம விபூஷண், 2004இல் சாகிதிய அகடமியின் பெல்லோஷிப்  என இவரின் இலக்கியத்திற்கு கிடைத்த விருதுகள் ஏராளம். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1986-92 கால கட்டத்தில் இருந்தார்.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கால் ‘இலக்கியத்தின் ராணி’ என்று அழைக்கப்பட்ட அம்ரிதா ப்ரீதம், தனது 86ஆவது வயதில் 2005ஆம் ஆண்டு காலமானார். இலக்கியத்தில் சாதித்த பெண். வாழ்க்கையில் சோகமும், மகிழ்ச்சியும் இல்லாத நிலையில், நல்ல இலக்கிய வரவுகளை நாட்டிற்கு அளித்த இந்த பெண் ஆளுமையை நாம் அனைவரும் அறிய வேண்டும். இரண்டு வரிகளில் கவிதை எழுதி விட்டாலே, சிலர் மேலுக்கும் கீழுக்கும் குதிக்கும் இந்த உலகில், பல அற்புதங்களை படைத்த அம்ரிதா ப்ரீதம் ஒரு அமைதியான நதி!

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு
--------------------
தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, குமரி போன்ற மாவட்டங்களில் வில்லுப்பாட்டு, திருவிழாக் காலங்களில் கோவில்களில் நடத்தப்படுகிறது. இதில் சாதாரண மக்களுக்கு புரியும் வகையில், பேச்சு மொழியில் கடவுள்களின் வரலாற்றை இசைப்பார்கள். கிராமங்களில் சிறு தெய்வங்களுக்கு நடத்தப்படும் கொடை விழாக்களில் வில்லுப்பாட்டே பிரதானமாக இருக்கும். 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரசப் புலவர் இதனை உருவாக்கியவர் என்றும், அருதக்குட்டிப் புலவரே வில்லிசையை தருவித்தவர் என்றும் இரு கருத்து நிலவுகிறது. வில்லுப்பாட்டின் எளிமை, இனிமை போன்றவை நம்மை ஈர்க்கும். வில்லிசைக் குழுவில் வலது பக்கப் பாட்டுக்காரர், பின்பாட்டுக்காரர், குடம் அடிப்பவர், ஆர்மோனியம் வாசிப்பவர், தபேலா இசைப்பவர், ஜால்ரா அடிப்பவர், ஒடுக்கு அடிப்பவர் என ஏழு பேர் அங்கம் வகிப்பர்.

வில்லை வளைச்சு
அம்பை மாட்டினா
சொல்லும் செயலாகும் - தம்பி
சொல்லும் செயலாகும்
என்ற நாட்டார் பாடல், இக்கலைக்கு வில்லுப்பாட்டு என்று பெயர் வர காரணமாக கூறுகிறது.


                       

வில்லுப்பாட்டுக் கலைக்குத் தேவைப்படும் கருவிகளில் மூலக்கருவியாக கருதப்படுவது விற்கதிராகும். இது பனங்கம்பு, பிரம்பு அல்லது முங்கில் வகைகளால் செய்யப்படுகிறது. இதன் இரண்டு முனைகளிலும் வண்ணத் துணிகள் கட்டப் பட்டிருக்கும். இந்த இரண்டு முனைகளைவும் இழுத்து நாண் கட்டப்பட்டு, இரு பக்கமும் பக்கத்திற்கு நான்கு என இரும்பு வளையம் பொறுத்தப் பட்டிருக்கும். கதைகளை ஆவேசமாக வெளிப்படுத்த உதவுவது உடுக்கு கருவி.
சிறு தெய்வக் கதைகளே பெரும்பாலும் பாடப்படுகிறது. அய்யனார், நீலி, சுடலைமாடன்; மேலும் சீதா கல்யாணம், கிருஷ்ணன் கதை; கலப்பு மணம், சாதி தீங்கை  சொல்லும் முத்துப்பட்டன், தோட்டுக்காரியம்மன், வன்னியடி மறவன் போன்ற சமுதாயக் கதைகளும்; ராஜாக்கள் கால கதைகளில் ஐவர் ராஜாக்கள் கதை, இரவிக் குட்டிப் பிள்ளை போர் போன்றவை அதிகமாக பாடப்படுகின்றன. கோவில்களில் மட்டுமே பாடப்பட்டு வந்த இக்கலை, பின்பு பொது மேடைகளிலும் பாடப்பட்டது. பொதுவுடைமை மேடைகளில் பிரசார சாதனமாக இக்கலை பயன்படுத்தப்பட்டது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தோவானை சுந்தரம் பிள்ளை, புன்னார்குளம் கோலப் பிள்ளை போன்றவர்களால் வில்லுப்பாட்டு திரைப்படத் துறையிலும் தன் தடம் பதித்தது. கலைவாணர் தனது வில்லுப்பாட்டில் பழைய உடுக்கு, குடம் போன்றவற்றை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக ஆர்மோனியம், டோலக், பம்பை, கிளாரினட் பயன்படுத்தியதுடன், வில்லுப்பாட்டுக்கே உரிய சோக ரசத்தை மாற்றி, தன்னியல்பான நகைச்சுவையாக பாடினார். சாத்தூர் பிச்சைக் குட்டியின் வில்லிசைக்கு தனி மவுசு உண்டு. நட்சத்திரக் கலைஞர் அவர். பழைய பாரம்பரியத்துடன் நவீன உத்திகளை வில்லுப்பாட்டில் புகுத்தியவர் செவல்குளம் தங்கையா புலவர் ஆவார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சீடர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டு குழு, தற்பொழுது நவீன வில்லுப்பாட்டுக் குழுவாக திகழ்கின்றது. கலைமாமணி ராஜலட்சுமி, நெல்லை பாக்கிய லட்சுமி, சுப்பராயபுரம் வேல்கனி போன்ற பெண் கலைஞர்களும் புகழ்பெற்று விளங்குகிறார்கள். வில்லிசையில் இன்னும் பல கலைஞர்களை நினைவு கூறவேண்டும்.

 -
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

Saturday, October 25, 2014

கலாசேத்ரா

கலாசேத்ரா
--------------------------
                         

இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான திரு. என்.கோபால்சாமி தலைமையில் கலாசேத்ரா நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ருக்மணி அருண்டேலின் முயற்சியாலும், உழைப்பாலும் நிறுவப்பட்டது இந்த ஒப்பற்ற நிறுவனம். உலக அளவில் சென்னை மாநகருக்கு கலாசேத்ரா ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. இதன் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் சமீப காலங்களில் நடந்தன. திரு. என்.கோபால்சாமி தற்போது பொறுப்பேற்றுள்ளார். நேர்மையான அதிகாரி. இவர் தலைமையில் கலாசேத்ராவிற்கு நல்ல நிர்வாகமும், அதன் கலைப் பணிகள் நல்லபடியாக அமையும் என்றும் நம்புகிறோம்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

AUG 27