Sunday, November 13, 2022

உலக அளவில் நச்சுக் கக்கும் கரியமில வாயு வெளிவந்து கொண்டு இருக்கிறது என்பது பாதுகாப்பற்ற விஷயம்.

உலக அளவில் நச்சுக் கக்கும் கரியமில வாயு வெளிவந்து கொண்டு இருக்கிறது என்பது பாதுகாப்பற்ற விஷயம். 

ஐ.நா.வின் 27 ஆவது பருவநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019 -இல் உலக அளவில் 4900 டன்  கரியமில வாயு வெளி வந்துள்ளது என்ற ஆபத்தான நிலை.  இவ்வாறு தொடர்ந்து வெளிவந்தால் பூமியின் வெப்பநிலை அதிகமாகிவிடும். சீனாவில் 31 சதவீதம், அமெரிக்காவில் 14 சதவீதம், ஐரோப்பாவில் 8 சதவீதம், இந்தியா 7 சதவீதம் என்ற அளவில் இந்த வாயு வெளியேறியுள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது இந்த ஆபத்தான எரிவாயு அதிகமாக வெளியேறுகின்றது. இத்தோடு மீத்தேன் வெளியேற்றத்தைப் பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளின் விண்வெளி சோதனையால் மீத்தேன் வாயு வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saturday, November 12, 2022

#*நூற்றாண்டு காணும்* *நெல்லை மண்ணின் ஆளுமைகள்*

#*நூற்றாண்டு காணும்*
*நெல்லை மண்ணின் ஆளுமைகள்*
! -*கே.எஸ். இராதா கிருஷ்ணன்.பகுதி-1*
————————————
 இந்த ஆண்டு தெற்குச் சீமையில் பிறந்த காருகுறிச்சி அருணாசலம், மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன்,கி.ராஜநாராயணன், வழக்கறிஞர் பாளை சண்முகம், எட்டயபுரம் அருகே சி.துரைசாமிபுரத்தில் பிறந்த நடிகமணி டி.வி.நாராயணசாமிக்கும் இந்த ஆண்டுதான் நூற்றாண்டு. நெல்லைச் சீமையில் இடைசெவல் கிராமத்தில் பிறந்த கு.அழகிரிசாமியும், கி.ராஜநாராயணும், ராஜவள்ளிபுரத்தைச் சேர்ந்த ரா.பி.சேதுப்பிள்ளையும், வள்ளிக்கண்ணனும் சாகித்திய அகாதெமி விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது; நெல்லை மண்ணுக்குப் பெருமை சேர்ப்பது.

https://youtu.be/fkguLPavag4

Friday, November 11, 2022

*இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மகிழ்ச்சி*.

*இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மகிழ்ச்சி*.
 
*இராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்த பிறகு 1991இல்வேலூர் சிறையில் குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். பழ.நெடுமாறன், வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, புதுக்கோட்டை பாவாணன்,கொளத்தூர் மணி, நான் உட்பட என சிலர் அப்போது வாரம் ஒருமுறை அவர்களைப் பார்க்க வேலூர் சிறைக்குச் சென்றதுண்டு*. 

*இது தொடர்பாக பேசவே பலர் அப்போது பயந்த காலம் அது*.
 *இராஜீவ் கொலைக்கான மையப் புள்ளியாக விடுதலைப்புலிகளை கருத்தில் கொண்டு அப்போது விசாரணை நடத்தப்பட்டது என்பதும், முறையான, சரியான விசாரணை நடத்தப்படவி்ல்லை* *என்பதும் எனது கருத்தாக இருந்தது. அதைப் பற்றி ‘இராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்? ’ என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரையை எழுதினேன். அன்றைய காலத்தில் எனது கட்டுரைகளை பிரசுரம் செய்யும் வெளியிட மறுத்து விட்டது. அது  19991இறுதியில் சாணக்கியன் என்ற இதழில் பிரசுரமானது. அதில் ராஜீவ் படுகொலை விசாரணை தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட வினாக்களை நான் எழுப்பியிருந்தேன்*. *அந்த கட்டுரையில் பதில் தெரியா பல விடயங்களை குறிப்பிட்டிருந்தேன்*. *அந்த படுகொலை தொடர்பான  புலன்விசாரணை சரியாக,நியாயமானதாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்தாக இருந்தது*.
  
*இராஜீவ் கொடுங்கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. எந்த கொலைக் குற்றம் செய்த கொடியவரும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்*. *அதேசமயம் அந்த படுகொலை தொடர்பான விசாரணை நியாயமானதாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்தாக இருந்தது*.

*இந்த வழக்கில் 26 தமிழர்கள் கொலை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்*. அவர்கள் மீதான வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டது. சென்னை பூந்தமல்லியிலிருந்த தடா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுக்காலம் நடைபெற்று, 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி 26 தமிழர்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கும் தீர்ப்பைத் தடா நீதிமன்றம் வழங்கியது. இதற்கு எதிராக இந்தியாவிலும் உலக நாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் நீதித்துறையின் படுகொலை என இதைக் கண்டித்தன.

26பேர்களில் 13 பேர் ஈழத் தமிழர்கள். 13பேர் நம்முடைய தமிழ்நாட்டுத் தமிழர்கள். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்குத்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது தடாச் சட்டம் சொன்னது. இந்த வழக்கை நடத்த முன்வந்து, உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் நடந்தது.

தடாச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டதே செல்லாது என உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது ஒரு முக்கியமான திருப்பமாகும். சாதாரண குற்றவியல் சட்டத்தின்கீழ் தொடுக்கப்படவேண்டிய வழக்கே தவிர, கொடிய சட்டத்தின்கீழ் தொடுக்கவேண்டிய வழக்கு அல்ல என்ற அந்த தீர்ப்புதான் இன்று 6பேரின் விடுதலை வரைக்கும் அடிப்படையில் உதவியிருக்கிறது.

1999ஆம் ஆண்டு மே-11ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் நால்வருக்குத் தூக்குத் தண்டனையும், மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 19 பேரைக் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரின் சார்பில் அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி அவர்களிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்து ஆளுநர் தள்ளுபடி செய்துவிட்டார். அப்போது ஆளுநரின் ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஆளுநரின் கருணை மனு ஏற்க மறுத்த ஆணை செல்லாது என்ற தீர்ப்பினை வழங்கியது.

தொடர்ந்து குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு என நடவடிக்கைகள்…… இந்தியா முழுதும் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தை விரிவாக்கினோம். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் உட்படப் பல அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் பங்கேற்றார்கள். இடைவிடாத மக்கள் இயக்கத்தின் விளைவாக அன்றைய அதிமுக அமைச்சரவையிலும், இன்றைய திமுக அமைச்சரவையிலும் 7பேரின் விடுதலைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஆளுநர்கள் இந்த தீர்மானங்களைச் கிடப்பில் போட்டனர்.

பலரும் தொடர்ந்து வற்புறுத்தியதின் விளைவாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. அதன் விளைவாக உச்சநீதிமன்றம் முதலில் ஒருவரையும்; இப்போது, இன்று 6பேரையும் விடுதலை செய்துள்ளது.
https://sivasinnapodi.wordpress.com/2013/12/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/

#KSRPost
11-11-2022.

காந்திகிராமம்- டாக்டர் சௌந்தரம்ம

காந்திகிராமம் என்றால் அது ஒரு கிராமம் அல்ல. ஒரு கிராமிய மேம்பாட்டுக்கான மக்கள் இயக்கத்தை உருவாக்கும் செயற்களம். காந்திகிராமம் ஒரு அறக்கட்டளை, ஒரு நிகா்நிலைப் பல்கலைக்கழகம், மருத்துவமனை, சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் அனைத்தையும் உள்ளடக்கியது. இவை அனைத்தையும் உருவாக்கித் தந்தவா்கள் டி.வி.எஸ். குடும்பத்தைச் சோ்ந்த டாக்டர் சௌந்திரமும் ரவீந்திரநாத் தாகூரின் மாணவா் ராமச்சந்திரனும்தான்.

அந்தக் காலத்தில் அப்படித்தானே செய்தார்கள்.  சௌந்தரம் பனிரெண்டு வயதுக் குழந்தையாக இருந்த போதே முறைப் பையனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் ஆனால் அவள் சுதந்திரமானவளாகவும் அறிவாளியாகவும் திறனாளியாகவும் உருப்பெற அவள் கணவர் டாக்டர் சௌந்தரராஜன் விரும்பினார். கல்வியைத் தொடர வைத்தார். 




1925-ல் மதுரையில் பிளேக் நோய் பரவி இருந்தபோது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சௌந்தர்ராஜன் 30 வயதை அடையும் முன்பே இறந்து விடுகிறார். அதற்கு முன்பாக மனைவி சௌந்தரம் டாக்டராக வேண்டும் என்றும் மறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை சொல்கிறார். முற்போக்கு சிந்தனை உடைய சவுந்தரத்தின் பெற்றோர்களும் அவளை மேலே படிக்க அனுமதிக்கிறார்கள் தனது 32 ஆம் வயதில் புதுடெல்லியில் உள்ள லேடி ஹர்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில்கிறார். அங்கே டாக்டர் சுசீலா நய்யார் அறிமுகமாகவும் அவர் மூலமாக மகாத்மா காந்தியை சந்திக்கிறார். காந்திஜியின் சீடர்களில் ஒருவரான ராமச்சந்திரன் அறிமுகமாகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ய, கஸ்தூரிபாய் தன் கையால் நெய்து தந்த சேலை ஒன்றே கல்யாணப் புடவையாக,  காந்திஜி தன் கையால் மஞ்சளில் நனைத்தெடுத்த சரடு மாங்கல்யமாக திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு 35 வயது. மகள் கலப்புத் திருமணம் செய்து விட்டதால் பெற்றோருக்கும் மிகவும் வருத்தம்.

மருத்துவப் படிப்பை முடித்து 1942-ல் சென்னை வந்து டாக்டராக பணிபுரிகிறார். மகப்பேறு சிகிச்சை என்றால் எந்த ராத்திரியிலும் எந்த இடத்துக்கும் மாட்டு வண்டியிலோ படகிலேறியோ சென்று வைத்தியம் பார்ப்பார் என்ற நற்பெயர் பெறுகிறார். தம்பதியர் இருவரும் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

டாக்டர் சௌந்தரத்தை கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு நிதியின் தென்னிந்திய பிரதிநிதியாக காந்திஜி நியமிக்கிறார். பெண்கள் குழந்தைகள் நலத்தில் தீவிர அக்கறை கொண்ட டாக்டர் சவுந்தரம் ஔவை ஆசிரமத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவசைலத்தில் ஆரம்பிக்கிறார். 

1947-ல் தன் கணவருடன் இணைந்து காந்திகிராமம் டிரஸ்ட்டை உருவாக்குகிறார். அதற்கு நிதி தேடி தன் குடும்ப உறவினர்களை அணுகிய போது அவர்கள் எப்படி விலகி ஓடினார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்லுவார். கதர் கிராம கைத்தொழில்களுக்கான பயிற்சி அமைப்புகளை உருவாக்கிய அந்த காந்தி கிராம் நிதி 1978ல் நிகர் நிலை பல்கலைக்கழகம் ஆகிறது.
டாக்டர் சௌந்தரம் சின்னாளபட்டியில் ஓலை குடிசையில் ஆரம்பித்த ஒரு கிளினிக் இன்று 230 படுக்கையுள்ள கஸ்தூரிபா ஆஸ்பத்திரியாக வளர்ந்திருக்கிறது. எந்த நேரமும் காந்திகிராம் பற்றிய சிந்தனையுடனேயே இருந்திருக்கிறார்  உறவினர்கள் வீட்டுக்கு வரும்பொழுது விருந்து உண்பாரெனில் அப்பொழுதும் துயரப்படுபவர்களை பற்றி பேசி அவர்களுக்கு இந்த உணவு கிடைக்காது இருப்பது குறித்தும் பேசுவாராம்.
1977-ல் மதுரையில் வெள்ளம் வந்த பொழுது அரசின் நிவாரண கேம்ப அமைக்கப்படும் முன்பு டாக்டர் சௌந்தரம் நிவாரண முகாம் அமைத்து விட்டார்  வீட்டில் இருந்த எல்லோருடைய துணிமணிகள் அரிசி மளிகை சாமான்கள் அந்த முகாமுக்கு போய் விட்டனவாம்.

இரண்டு தடவை ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் இருந்து,  சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும் ஒரு தடவை திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார் 1962ல் டாக்டர் சௌந்தரத்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது அதே ஆண்டு அவரை மத்திய கல்வி இணை அமைச்சராக்குகிறார் நேரு. அமைச்சராக இருந்தபோது கட்டாயக் கல்வியையும் பள்ளிகளில் என்.எஸ்.எஸ் சேவை அமைப்பையும் அறிமுகம் செய்கிறார். 1967 பாராளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலேயே தோல்வி அடைந்த பிறகு அரசியலில் இருந்து விலகி சமூகப் பணிகளில் ஈடுபட்டார் 

கலாக்ஷேத்திராவில் முறைப்படி நடனம் பயின்றிருந்த டாக்டர் சௌந்தரம் வீணை வாசிப்பதில் தேர்ந்தவர்.  டாக்டர் சௌந்தரம் தான் அணிந்த கதர் சேலைகளுக்கான வடிவமைப்பையும் தானே செய்யக்கூடியவர் அவ்வாறு இவர் வடிவமைத்த புடவையை இந்திராகாந்திக்கு பரிசளிக்கிறார்.

மென்மையான வழிமுறைகளில் இந்த உலகத்தையே நாம் அசைத்து விடலாம்  என்கிற மகாத்மா காந்தியின் கொள்கையைத் தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்.
 தன் தாயையும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியையும் மகாத்மா காந்தியையும் தன் வாழ்வின் மூன்று குருக்களாக மதித்தவர் இவர்.
 
அனாதைக் குழந்தைகளையும் கஷ்டப்படும் பெண் குழந்தைகளையும் கண்டு விட்டால் உருகி விடுவார். ஒரு மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்த தன் கைக்கடிகாரத்தையே விற்று விட்டார். அந்தக் குழந்தைகளைப் பார்க்க வரும் பொழுது தன் கையால் முறுக்கு செய்து கொண்டு வருவார். தன்னைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வந்து தரும் பழ வகைகளை அந்தக்  குழந்தைகளுக்கு அனுப்பி விடுவார். இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட கிடைக்காமல் அந்த குழந்தைகள் ஏக்கத்துடன் இருப்பார்கள் என்று சொல்வார். 
மிகவும் ஆசைப்பட்டு அவர் உறவினர்களோ மகள்களோ எடுத்துக் கொடுக்கும் சேலைகள் எல்லாம் அடுத்த நாளே ஆசிரமத்துக்குப் போய்விடுமாம். யாரை சந்திக்கும் பொழுதும் தயக்கம் ஏதும் இன்றி ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுப்பாராம்.

சுமித்ரா, கனகா என்று இரு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார். மிகுந்த மன உறுதியுடைய டாக்டர் சவுந்தரம் மனம் உடைந்து அழுதது வளர்ப்பு மகள் சுமித்ரா இறந்தபோது என்பார்கள்.. 

சுமித்ராவின் மகன் ஸ்ரீராம் டாக்டர் சவுந்தரத்தின் பிரியமான பேரனாக இருந்திருக்கிறான் பட்டம் பெறும் வரை நிச்சயம் உயிரோடு இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தவர் பேரனின் கடைசி செமஸ்டர் சமயத்தில் தனது எண்பதாவது வயதில் உயிர் பிரிய நேர்கிறது. "என்னை மன்னித்துவிடு என்னால் வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் நீ சிறப்பாக தேர்வெழுத வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார் தன்னுடைய கடைசி ஆசையாக தன்னை மதுரை நகரை சுற்றி காரில் ஒரு ரவுண்டு அழைத்துச் செல்ல சொல்லி இருக்கிறார்.

எந்த நேரத்திலும் மூன்று செட் உடைகளை மட்டுமே அவர் வைத்திருப்பார். 
ஒன்றை உடுத்தியிருப்பார் ஒன்றைத் துவைத்து காய போட்டு இருப்பார் கூடுதலாக ஒரு செட் வைத்திருப்பார் ஆக மொத்தம் மூன்று செட்டுகள் துணி மட்டுமே எப்பொழுதும் வைத்திருந்தார்.



Thursday, November 10, 2022

வள்ளுவர்



#நண்பர்_இளசை_அருணா..!

#நண்பர்_இளசை_அருணா..!

தெற்கு சீமை, கரிசல் கந்தக பூமியின் கவிஞன். படைப்பு, ஆழ்ந்த வாசிப்பு என்று வாழ்ந்தவர். கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அழகான குண்டு குண்டான தன்வசம் பெற்ற எழுத்துக்காரர்.  அப்போது எட்டயபுரம் பாரதி விழா இவர்  இல்லாமல் நடக்காது. கரிசல் படைப்பாளிகளை கொண்டடிய



மனிதர்.  சோ.அழகர்சாமி, தொமுசி போன்றவர்களின் உற்ற தோழர். இன்று நம்மிடம் அவர் இல்லை.



"யமுனைக்கரையில் மும்தாஜ்க்காய்ப்
பளிங்குப் பதவுரைகள்/ யாசிக்கின்ற ஷாஷகான்கள்
காதலின் தொடர்கதைகள்..."
இசைச்சித்தர் குரலெடுத்தே..
-#இளசை_அருணா

#ksrpost
10-11-2022.

Wednesday, November 9, 2022

சிக்கல்களை கேரள அரசு உருவாக்கிவிடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்று நாம் சொன்னபோதிலும், “அவர் மண்... இவர் மண்” என்று போலித்தனமாகப் பேசும் இங்குள்ள ‘கனவான்கள்’ யாரும் இதைப் பற்றி வாயே திறக்கவில்லை, வாழ்க தமிழகம்*!

#*வாழ்கதமிழகம்….*
————————————
*கடந்த 1.11.2022 அன்றிலிருந்து கேரள அரசு தான் கொண்டாடும் ‘நவகேரளம் – ஐக்கிய கேரளம் ’ என்ற நாளில் தமிழக கேரள எல்லையை டிஜிட்டல் ரீ சர்வே செய்து வருகிறது. கடந்த 9 நாட்களாக இது குறித்து என் பதிவுகளையும்-காணொலியையும் என்னுடைய சமூக ஊடகத்தில் பதிவு செய்து வருகிறேன்* 

*தமிழகத்திலிருந்து மரியாதைக்குரிய பழ.நெடுமாறன் அவர்கள் மட்டுமே கேரள அரசின் டிஜிட்டல் ரீ சர்வே குறித்தான கண்டனத்தைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்*. 
 
*தற்போது கேரளா நடத்தும் இந்த  டிஜிட்டல் ரீ சர்வேயால் கண்ணகிக் கோவிலைப் போல நம்முடைய  எல்லைப் பகுதிகளை அபகரித்துக் கொள்வதற்கும், முல்லை பெரியாறு மாதிரி நீராதாரச் சிக்கல்களை கேரள அரசு உருவாக்கிவிடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்று நாம் சொன்னபோதிலும், “அவர் மண்... இவர் மண்” என்று போலித்தனமாகப் பேசும் இங்குள்ள ‘கனவான்கள்’  யாரும் இதைப் பற்றி வாயே திறக்கவில்லை, வாழ்க தமிழகம்*!
*****
தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்கக் கேரளத்தின் திட்டம்

*தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரிக்கை*

தமிழ்நாடு – கேரளம் ஆகியவற்றின் எல்லை நெடுகிலும் இருக்கும் கிராமங்களில் கணினி முறையில் மறு சர்வே செய்யும் திட்டத்தைக் கேரள அரசு நவம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. 1956ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினையின் போது இரு மாநிலங்களுக்கும் இடையேயுள்ள எல்லைப் பகுதியில் 230 கி.மீ. தூரம் அளவுக்கே இரு மாநிலங்களின் கூட்டு சர்வே முயற்சியால் அளவிடப்பட்டுள்ளன. ஆனால், மீதம் இருக்கக்கூடிய 627 கி.மீ. அளவுக்குக் கூட்டு சர்வே நடத்துவதற்குக் கேரள அரசு ஒத்துழைக்காததினால் அந்த வேலை கடந்த 56 ஆண்டுக் காலமாக அப்படியே கிடக்கிறது. இரு மாநிலங்களின் பெரும்பகுதியின் எல்லை வரையறுக்கப்படாமல் உள்ளது. ஆனால், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கேரளம் இந்த முயற்சியில் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.

கடந்த 56 ஆண்டுக் காலத்தில் எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய தமிழக கிராமங்களில் அத்துமீறி உள்புகுந்து பல பகுதிகளை மலையாளிகள் ஆக்கிரமித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் தாலுக்காவில் ஏறத்தாழ 30,000 ஏக்கர் கொண்ட காட்டுப் பகுதியில் மலையாளிகள் உள்புகுந்து காடுகளையும் வெட்டி, மரங்களைத் திருடிக் கொண்டு சென்றதோடு, அப்பகுதியில் ஏராளமாகக் குடியேறிவிட்டனர். இதன் விளைவாகக் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் மலையாளிகள் பெரும்பான்மையினராகி அவர்களில் ஒருவரே தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி வருகின்றனர். இதைப்போல குமரி, நெல்லை, விருதுநகர், தேனி மாவட்டம் முதல் கோவை மாவட்டம் வரை இரு மாநில எல்லை நெடுகிலும் மலையாளிகள் ஊடுருவி காட்டு நிலங்களில் குடியேறி வருவது தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு ஆக்கிரமித்தப் பகுதிகளை தனக்குச் சொந்தமானது என்று காட்டுவதற்கே புதிய சர்வேயை கேரள அரசு நடத்துகிறது. உடனடியாக இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு இதை நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் நமக்குச் சொந்தமான ஏராளமான நிலப்பகுதிகளை நாம் இழக்க வேண்டிவரும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அன்புள்ள,

(பழ.நெடுமாறன்)
தலைவர்.


OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...