Saturday, July 23, 2016

காஷ்மீர்.,,

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒலிக்கும்  டுகளில் டோக்ரா அரச வம்சத்துக்கு எதிராக ஒலிக்க ஆரம்பித்தது முதலாக அங்கு சுதந்திர கோஷம் கேட்டுக்கொண்டிருக்கிறது. 1942-ல் இந்தியா ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) இயக்கம் நடத்தியதுபோலவே, 1946-ல் ‘அரசனே வெளியேறு’ (Quit Kashmir) இயக்கம் நடத்தியது காஷ்மீர். 1947-ல் இந்திய ஒன்றியத்துடனான காஷ்மீர் அரசர் ஹரிசிங்கின் இணைப்பும் ‘காஷ்மீர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் பொதுக் கருத்துக்கேட்பின் முடிவே தீர்மானிக்கும்’ எனும் நிபந்தனைக்குட்பட்டே நடந்தது. ஆக, காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்தை இன்றைய இந்தியாவுக்கான எதிர்ப்புப் போராட்டமாக, இனப் போராட்டமாக, போராட்டக்காரர்களைத் தேச விரோதிகளாக அணுகும் பார்வை வரலாற்று அடிப்படையற்றது.
இந்திய ஒன்றியத்திடம் இணைந்தபோது, ‘பாதுகாப்பு, வெளியுறவு, மக்கள் தொடர்பு, நாணயப் பரிமாற்றம்’ ஆகிய நான்கு அம்சங்களை மட்டுமே காஷ்மீர் அரசு இந்திய அரசு வசம் ஒப்படைத்தது. இந்திய - காஷ்மீர் இணைப்பின் உயிர்நாடியான இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவோ ஏனைய எந்த மாநிலங்களுக்கும் இல்லாத சிறப்பு அந்தஸ்தையும் தன்னாட்சியையும் காஷ்மீருக்கு அளித்தது. அந்த நாட்களில் காஷ்மீரின் முதல் ‘முதல்வர்’ ஷேக் அப்துல்லாவும் அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த பக்ஷி குலாம் முஹம்மதுவும் ‘பிரதமர்’ என்றே அழைக்கப்பட்டார்கள். இன்றைய நிலை என்ன? உண்மையில் காஷ்மீர் டெல்லியால் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலமாகவே ஆளப்படுகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இன்றைக்கு எதிரொலிக்கும் ‘சுதந்திரம்’ (ஆசாதி) எனும் சொல் பள்ளத்தாக்குக்கு வெளியே இருக்கும் நாட்டுப்பற்று மிக்க ஒரு குடிமகரைச் சங்கடப்படுத்தலாம். கால் நூற்றாண்டுக்கும் மேலாக காலனியாதிக்கக் காலக் கருப்புச் சட்டமான ‘ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்ட’த்தின் கொடுங்கோன்மையையே அன்றாட ஆட்சிமுறையாக எதிர்கொள்பவர்களிடமிருந்து வேறு எந்தச் சொல்லை எதிர்பார்க்க முடியும்?

ஜனவரி 1989 முதல் 2016 ஜூன் வரை 94,391 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்; 22,816 பெண்கள் விதவைகள்ஆக்கப்பட்டிருக்கின்றனர்; 1,07,569 குழந்தைகள் அநாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்; 10,193 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது காஷ்மீர் ஊடக சேவையகம். இது சற்று மிகையானது என்று நாம் நினைக்கலாம். அரசுத் தரப்பு எப்போதும் எண்ணிக்கையைக் குறைத்தே சொல்லிவந்திருக்கிறது. 2011-ல் காஷ்மீர் மனித உரிமை ஆணையம் வெளியிட்ட ஒரு செய்தி காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் ஆயுதப் படைகளின் ரத்த வெறியாட்டத்தை வெளியே கொண்டுவந்தது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபூர், குப்வாரா மாவட்டங்களில் 38 இடங்களில் 2,730 அடையாளம் தெரியாத சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியது மனித உரிமைகள் ஆணையம். இந்தச் சடலங்கள் அனைத்தும் அடையாளம் காணப்படாத பயங்கரவாதிகள் என்ற பெயரில் பாதுகாப்புப் படையினரால் அழுத்தம் தரப்பட்டுப் புதைக்கப்பட்டவை.

பல்லாண்டு காலமாகத் தங்களுடைய பிள்ளைகளைக் காணவில்லை என்று புகைப்படத்துடன் சாலைகளில் நின்று போராடிக்கொண்டிருந்த பெற்றோர் பலர் அப்படியே உருக்குலைந்து உடைந்தழுதார்கள். ஒரு பெரிய படுகொலை. இதே சம்பவம் இன்னொரு நாட்டில் நடந்திருந்தால் ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்திருக்கும். காஷ்மீர் என்பதாலேயே இந்தியா சகஜமாகக் கடந்து செல்ல முடிந்தது. பதினைந்து காஷ்மீரிகளுக்கு ஒருவர், சாலைகளில் நூறு மீட்டருக்கு ஒருவர் என்கிற அளவில் பள்ளத்தாக்கில் படைகளைக் குவித்து நிறுத்தியிருக்கிறது இந்திய அரசு. கூடவே, தாம் நினைக்கும் எவர் வீட்டினுள்ளும் புகுந்து எவரையும் விசாரணை என்ற பெயரில் தூக்கிச் செல்லும், எவரையும் சுட்டுத்தள்ளும், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லா அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறது. இப்படியாக மனித உரிமைகளின் குரல்வளை கொடூரமாக நெரிக்கப்படும் சூழலில், ஒரு சமூகம் எழுப்பும் சொல் சுதந்திரம் என்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?


No comments:

Post a Comment