Saturday, July 23, 2016

மகாகவி பாரதியாரின் கனவு !

மகாகவி பாரதியாரின் கனவு !

சென்றுடுவீர் எட்டு திக்கும் 
கலைசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!    ( பாரதியார்)

பாரதியாரின் ஆசைக்கேற்ப தமிழர்கள் இன்று  உலகின் எட்டுத் திக்கும் பரந்து வாழ்கிறார்கள். தமிழ்மொழி 30 நாடுகளில் வாழும் 7.8 கோடி மக்களால் பேசப்படுகிறது.

உலகில்  தமிழ்,  சமற்கிருதம், சீனம், கிரேக்கம், இலத்தீன், அரபு, ஹீப்புரு  ஆகிய 7 மொழிகளும் செம்மொழி என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சமற்கிருதம், இலத்தீன் ஆகிய மொழிகள் பேச்சு வழக்கொழிந்துவிட்டன.  ஹீப்ரு மொழி  கிபி 2 ஆம் நூற்றாண்டளவில் பேசுவாரின்றி வழக்கொழிந்து போனது. கடந்த நூற்றாண்டில்தான் அந்த மொழிக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது. 

தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள்  சான்றாக உள்ளன.    செம்மொழித்  தகைமைக்கு வேண்டிய  11  தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும்.   சமற்கிருதத்துக்கு 7,  இலத்தீன், கிரேக்க மொழிகளுக்கு  8 தகுதிப்பாடுகள் மட்டுமே பொருந்துகின்றன.

சமற்கிருதம்  அதன் இலக்கியச் சிறப்புக்காரணமாக அந்த மொழிக்கு மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இருக்கை இருக்கின்றன. மெர்மனி நாட்டின் புகழ்மிக்க 14 பல்கலைக் கழகங்களில் சமற்கிருதமொழி படிப்பிக்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில்  ஒக்ஸ்போட் பல்கலைக் கழகம் உட்பட 4 பல்கலைக் கழகங்களில் சமற்கிருத மொழிக்கு இருக்கை உண்டு.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்மொழிக்கு  அமெரிக்க நாட்டின் பழைமை வாய்ந்த  ஹார்வாட்  பல்கலைக் கழகத்தில் இருக்கை அமைக்க முயற்சிகள் நடக்கின்றன.  இந்த முயற்சிக்கு 1.4 மில்லியன்  அ.டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன.  இரண்டு தமிழ்ப் புரவலர்கள் தலைக்கு 0.5 மில்லியன்   அன்பளிப்பு செய்துள்ளார்கள். மேலும் 4.5  மில்லியன்  அ.டொலர்கள் தேவைப்படுகிறது.

பொதுவாக தமிழர்கள் கோயில் கட்டி குடமுழுக்கு செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள். போற இடத்துக்கு புண்ணியம் கிடைக்கும் என்பது காரணம். கோயிலை ஒத்த கல்விக் கூடங்களை நாட்டுதல்  குறைவு.

ஹாவார்டில் தமிழ் படிக்க இருப்பவர்கள் பெரும்பாலும்  பிறமொழியாளர்கள் ஆகத்தான் இருப்பார்கள். தமிழர்கள்  நூற்றுக் கணக்கில் ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து தமிழ் படிப்பார்கள் என நான் நம்பவில்லை. பெரும்பான்மை  புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ்ப் பற்று  கிடையாது.   தமிழ் சோறுபோடுமா என்ற சிந்தனைதான் காரணம்!

ரொறன்ரோவில் உள்ள 30,000 மாணவர்களில் 10,000 மாணவர்கள்தான் தமிழ் படிக்கிறார்கள். அதிலும் பல்கலைக் கழக நுழைவுக்கு வேண்டிய 4 திறமை சித்திக்குப் படிப்பவர்கள் மிகக் குறைவு.

இந்தப் பணி முழுமையெய்த புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும்.  பாரதியாரின் கனவு மெய்ப்படுகிறது.

No comments:

Post a Comment