வைணவத்தில் நம்மாழ்வார் நடுநாயகமாக , அனைத்து ஆழ்வார்களுக்கும் தலைமையாகச் சிறப்பிக்கப்படுகிறார். திருவாய்மொழியை ”சகஸ்ரசாகோ உபநிஷத் சமாகமம். நமாம்யஹம் திராவிட வேத சாகரம்” என்கிறார்கள். திராவிட வேதக் கடல் எனப்படுகிறது. எனவே ஆழம் அதிகம், வீச்சும் அதிகம். நான் கரையில் நின்று, அலையில் கால்நனைத்து புளகாங்கிதம் அடையும், ஈரமணலில் வீடு கட்டி, சிப்பி பொறுக்கி, நண்டு பின்னால் ஓடும் சிறுவன்.
”உளனெனில் உளன், அவனுருவம் இவ்வுருவுகள்,
உளனல்லன் எனில் அவனுருவம் இவ்வுருவுகள்.
உளன் என இலன் என இவைகுணம் உடையபின், உளன் இரு தகமையுடன், ஒழிவிலன் பரந்தே”
”உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை”- உள்ளம் என்பது ஆமை பாடல் வரி நினைவுக்கு வருகிறதா? ” யானேயாகி என்னலாற்பிறவாய், யானும் அவையுமாய்,இரண்டிலும் வேறாய், யாதோ பொருளாம் மாயக்கண்ணன்” - பாரதி “கண்ணன் என் சீடன்” இதுவும் நினைவு வந்தால் சிறப்பு.
இறைவனின் இருத்தல், இல்லாமை பற்றி நாம் உணரக்கூடிய விதத்தில் சொன்ன நம்மாழ்வார் மற்றொரு பாசுரத்தில் சொல்கிறார்
“ உளனல்லன், இலன் அல்லன். பேணும்கால் பேணும் உருவாகும்” அல்லனுமாய்” என்ன நினைக்கிறாயோ, அந்த உருவன் படைப்பான் இறைவன். அதுதான் அவன் முடிவுநிலமல்ல. இவ்வாறு இருப்பதும் அவனுக்கு சாத்தியம்... ஒரு வரியில் வேதத்தின் விழுப்பொருளைச் சொல்லிப்போவார் நம்மாழ்வார். இதனால்தானோ என்னவோ திருவாய்மொழியை சாந்தோக்ய உபநிஷத்துடன் ஒப்பிடுவார்கள்.
தருக்கம், தருக்கமிலி , நினைவு, நினைவிலி என்று அகப்பெருள் வடிவில் அவரது வீச்சு அபாரமாக இருக்கும்.
”தாயாய் தந்தையாய், மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு . இவையென்ன நியாயங்களே”
நான் அறியும் தாய், தந்தை, மக்கள், மற்ற அனைத்தும், அறியா முற்றும் அனைத்தும், மட்டுமல்ல, நீயாய் நீ நிற்கிறாய்.. இவையனைத்தும் நீ, மட்டுமல்ல, அவையன்றியும் உனது இருத்தல் சாத்தியம் என்று புரிவது சற்றே கடினம். நினைவிலியில் அனைத்து நனவும் அழிந்தபின்னும், அவனது இருப்பு, எனது நினைவு தாண்டி நிற்கிறது. ரிலேடிவிடி தியரியில் காணும்பொருள், காண்பவரின் நிலை விவரித்துச் சொல்லப்படுகிறது. காண்பவன் இல்லாவிட்டால் காணப்படும் பொருளின் இருத்தல் சாத்தியமா? பல அணுகுமுறைகள் இதற்கு இருக்கின்றன. அவற்றைப் பற்றி அறியத்தூண்டும் ஒரு ட்வீட் போல இவ்வரிகள் அமைந்திருக்கின்றன.
விண், பிரபஞ்சம், அதன் விரிதல், தோற்றம் மறைதல் பற்றி பல புத்தகங்கள் எழுதிப்போகலாம். பிரபஞ்ச வீரிவை,அதன் பரிமாணத்தை, அனைத்தையும் விழுங்கி நிற்கும் தன்மையை நம்மாழ்வார் இரண்டே வரிகளில் சொல்கிறார்.
“சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிற் பெரும்
பாழ்”
தம்மில் சூழ்ந்தது - Universe is encircled by itself. அல்லது தன்னைத்தானே முடிவிற் வைத்துக்கொண்டது. அதன் முடிவிலி நிலையை அதுவே தீர்மானிக்கும். விரிந்துகொண்டே போகும் ஒரு வளையத்தை கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன் எல்லையில் முடிவற்ற வட்டப்பயணம் சாத்தியம். அதன் வடிவம் எப்போதும் விரிந்துகொண்டேயிருக்கும். எல்லையில் தன்னைத்தானே உற்பத்தி செய்துகொள்கிறது என்ற தத்துவத்தை expanding universeக்கு சொல்லுவார்கள். அது முடிவிலி .
பாழ் என்பது காண, அறிய முடியாதது. இருண்டது (காண இயலாதது என்னும் பொருளில்). அதனால்தான் பாழுங்கிணறு, பாழ் மண்டபம் என்ற சொற்கள் வந்தன. நம்மாழ்வார் அறியமுடியாத பிரபஞ்சத்தை முடிவிற் பெரும் பாழ் என்கிறார். இதனை ஒரு கேள்வியாக்கி இறையை, நீதானா அந்த பாழ்? என்று கேட்கிறார்.
’சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்து முடிவிற் பெரும்பாழாயோ? ’
நம்மாழ்வாரை அனுபவிக்க வைணவனாக இருக்கவேண்டாம். தமிழில் சற்றே ஈரப்பசை, ஆர்வம் இருந்தாற் போதும். அவரது சொல்லே அவருக்கு பொருந்தும்.
ஆழ்வாரே, நீவிர் முடிவிற்பெரும்பாழேயோ?- thanks to Sudhakar Kasturi.
No comments:
Post a Comment