அன்றே கேட்டார்
நன்றாக கேட்டார்
அறிஞர் அண்ணா
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?
-----------
இன்றைய சூழலில் ஏற்ற என் பதிவு; பிரிவு 356
“செல்லாப் பிரிவு சொல்லும் வரலாறு”
==================================
கடந்த 21-04-2016ல் தினமணி நாளிதழில் “செல்லாப் பிரிவு சொல்லும் வரலாறு” என்ற தலைப்பில் நான் எழுதிய டெட் லெட்டர் பிரிவு 356 என்ற கட்டுரை தலையங்க பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நண்பர் ஹரிஷ் ராவத் முதல்வராக கொண்ட உத்தரகாண்ட் காங்கிரஸ் மாநில அரசை மத்திய அரசு சமீபத்தில் கலைத்ததையொட்டி எழுதப்பட்ட கட்டுரையாகும்.
“செல்லாப் பிரிவு சொல்லும் வரலாறு”
==================================
உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசை மத்திய அரசு கலைத்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதுவரை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 ஐ, 126 முறை பயன்படுத்தப்பட்டு மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக 1959 ஆம் ஆண்டு காங்கிரஸ் இல்லாத நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த கேரள மாநில அரசு நேரு பிரதமராக இருந்தபோது கலைக்கப்பட்டது. கேரளத்தில் நில சீர்திருத்த சட்டம், புதிய கல்வி கொள்கை என்ற பிரச்சினையால், கேரளாவில் நிலவிய சிறிய போராட்டங்களை காரணம் காட்டி அந்த அரசு கலைக்கப்பட்டது. இதற்கு அன்றைக்கு காங்கிரஸை தலைமை தாங்கிய இந்திரா காந்தியின் தனிப்பட்ட பரிந்துரையும் உண்டு.
பிற்காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த 16 ஆண்டுகளில் 50 மாநில அரசுகளை பிரிவு 356ஐ கொண்டு கலைத்தார். இந்தியாவில் மொத்தத்தில் இதுவரை 126 முறையில் 88 முறை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநில அரசுகளை கலைத்தது. பண்டிதர் நேரு 1947லிருந்து 1964 வரை ஆட்சியில் இருந்தபோது 8 மாநில அரசுகளை கலைத்துள்ளார். அவசர நிலை காலத்திற்கு பின், ஜனதா அரசு மொரார்ஜி தலைமையில் அமைந்தபோது, மூன்று ஆண்டுகளில் (1977 - 1979) காங்கிரஸ் ஆளும் 16 மாநில அரசுகளை கலைத்துள்ளார்.
இந்திரா காந்தி மத்தியில் பிரதமராக இருந்தபோது ஜம்மு - காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா ஆட்சியை கலைத்து, ஷா தலைமையில் ஒரு பொம்மை ஆட்சி அப்போது அங்கு நிறுவப்பட்டது. ஆந்திரத்தில் என்.டி. ராமாராவ் ஆட்சியை கலைத்து பாஸ்கர் ராவ் தலைமையிலும் ஆட்சி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருந்தும் ஜம்மு-காஷ்மீரிலும், ஆந்திரத்திலும், சட்டத்திற்கு புறம்பாக அபத்தமாக கலைத்தபோது இந்தியாவே வெகுண்டு எழுந்தது. அப்போது என்.டி. ராமாராவ் தனக்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது என்று காட்ட, தெலுங்குதேச சட்டமன்ற உறுப்பினர்களோடு, டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கே ராஜ் பாத்தில் பேரணி நடத்தி குடியரசுத் தலைவரை சந்தித்தார். தி.மு.க. ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1991ல் இரண்டு வருடம் ஆண்ட தி.மு.க. ஆட்சியை ஆளுநர் பர்னாலா பரிந்துரை இல்லாமலேயே அன்றைக்கு மத்தியில் இருந்த சந்திரசேகர் அரசு கலைத்தது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1999 லிருந்து 2004 வரை பொறுப்பில் இருந்த அரசு 5 மாநில அரசுகளை கலைத்தது. இந்த காலக்கட்டத்தில்தான் 356ஐ எதிர்த்து கர்நாடகாவில் அரசு கவிழ்க்கப்பட்டதற்காக எஸ்.ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு மகாராஷ்டிராவிலும், ஆந்திராவிலும், ஜார்க்கண்ட்டிலும், சமீபத்தில் அருணாசலப் பிரதேசம், தற்போது உத்தரகண்ட்டிலும் ஆட்சியை கலைக்க 356ஐ பயன்படுத்தி உள்ளது. இப்படி 356 என்பது தலைக்கு மேல் தொங்குகின்ற கத்தியாக இன்றைக்கும் இருக்கின்றது.
உத்தரகண்ட்டில் ஆட்சி கலைக்கப்பட்டபின் அம்மாநில உயர்நீதிமன்றம், இது தவறு என்று சொல்லி முதல்வராக இருந்த ஹரிஸ் ராவத், தனது பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்று உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவர் 356ஐ பயன்படுத்தும்போது அமைச்சரவையின் பரிந்துரை இருந்தால் நீதித்துறை தலையிட முடியாது என்ற கருத்தை வெளியிட்டது.
பிரிவு 356 என்ன சொல்கிறது என்றால்; மத்திய அரசுக்கு மாநில அரசுகளைக் கலைத்து குடியரசுத் தலைவரின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் உரிமையை அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றப் பட்டபோது, இப்பிரிவு அடிக்கடி பயன்படுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர் அம்பேத்கர் இப்பிரிவினை ஒரு செல்லாப் பிரிவு (Dead Letter) என்று கூறினார். இப்பிரிவு மாநிலங்களில் சட்டஒழுங்கு மிகவும் சீர்குலையும் போதோ அல்லது மாநில அரசால் கையாள முடியாத நெருக்கடி நிகழும் போது மட்டும் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் அரசியல் நிர்ணய சபையின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நடைமுறையில் இச்சட்டம், மத்திய அரசால், தனது அரசியல் எதிராளிகளைப் பழிவாங்கவும், தங்களுக்கு சாதகமான அரசை மாநிலங்களில் அமைக்கவுமே பயன்படுத்தப்பட்டது.
ஜனதா கட்சியின் தலைவர் எஸ் ஆர் பொம்மை ஆகஸ்ட் 1988 இல் கர்நாடக மாநிலத்தின் முதல்வரானார். செப்டம்பர் 1988 இல் ஜனதா கட்சியும், லோக் தளம் கட்சியும் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கின. ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த பொம்மைக்கு மேலும் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். சில நாட்கள் கழித்து கே. ஆர். மொலகேரி என்னும் ஜனதா தள உறுப்பினர் மாநில ஆளுனரை சந்தித்து, தன்னை 19 உறுப்பினர்கள் ஆதரிப்பதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனக் கூறினார். அதனை ஏற்ற ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு, பொம்மை, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்து விட்டதால், அவரது ஆட்சியை கலைத்து விடலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால் மொலகேரி குறிப்பிட்ட உறுப்பினர்கள் தாங்கள் கட்சி மாறவில்லை என மறுத்தனர்; பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பை வழங்காமல், 1989 ஏப்ரல் 19 ஆம் நாள், பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இதனை எதிர்த்து எஸ்.ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டபின், பொம்மை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
1994 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட பெஞ்சு விசாரித்தது. பொம்மையின் அரசைக் கலைத்தது செல்லாது என்று அறிவித்த நீதிபதிகளின் தீர்ப்பில் (S. R. Bommai V. Union of India, AIR 1994 Page 1918) பின்வரும் முக்கிய சட்ட விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன:
1. குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவது, நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதாகும். தீய உள்நோக்குடன் (malafide) ஆட்சி கலைக்கப் பட்டிருக்குமெனில் நீதிமன்றங்களுக்கு கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் நடைமுறைப்படுத்த அதிகாரம் உண்டு.
2. பிரிவு 356 இல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டதே. நிபந்தனைகளுக்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டதே.
3. மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டலும், அப்பரிந்துரை எந்தச் சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அவற்றை நீதிமன்றங்கள் பரிசீலித்து ஆய்வு செய்யலாம்.
4. மாநில அரசுகளை கலைக்கும்போது காரண காரியங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை கலைக்கப்பட்டபின் அவசியம் பெறவேண்டும்.
5. ஆட்சி கலைப்பு அரசியலமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றங்கள் கருதினால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியிலமர்த்தும் நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு.
6. இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு.
இத்தீர்ப்பின் பயனாக, பிரிவு 356 னை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்படும் சம்பவங்கள் வெகுவாக குறைந்து விட்டன. இத்தீர்ப்பு, மத்திய-மாநில அரசுகள் உறவில், மாநில அரசுகளின் நிலையை பலப்படுத்தியதன் மூலம் இந்தியக் குடியரசில் கூட்டாட்சியை (federalism) பலப்படுத்தியுள்ளது.
பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், அரசியல் சூழல்கள் உள்ள இந்தியாவில் பன்மையில் ஒருமை என்ற தத்துவத்தில் கடந்த 69 ஆண்டுகளாக பல சிக்கல்களை சந்தித்து அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் சேதாரம் இல்லாமல் மக்களாட்சி நடைபெறுவது என்பது கீர்த்தி மட்டுமல்லாமல் பன்னாட்டு அளவில் ஒவ்வொரு இந்தியனுக்கும் சுய பெருமையான கர்வமாகும்.
1977 ல் ராஜஸ்தான் அரசு கலைக்கப்பட்டபோது, உச்சநீதிமன்றத்தை அணுகியபோது, நீதிபதி பகவதி பிரிட்டிஷ் ஆட்சியைப் போல் அல்லவா இந்த 356 இருக்கிறது என்று வினா எழுப்பினார். இது இந்திய அரசியலில் அப்புறப்படுத்தவேண்டிய சூழல் ஆகும் என்று கூறினார். (The State of Rajasthan vs. Union of India1977)
உச்சநீதிமன்றத்தில் பொம்மை வழக்குக்கு பிறகு, Kihoto hollohan vs Zachillhu and other & Rameshwar Prasad and others vs Union of India 2005 என்ற இரண்டு வழக்குகள் பிரிவு 356ஐ எதிர்த்து விசாரணைக்கு வந்தன. அப்போது இந்தியா ஒற்றையாட்சி என்பதை விட கூட்டாட்சி என்று சொல்லாவிட்டாலும் ஒற்றையாட்சி-கூட்டாட்சியின் கலவை என்று கருதிக்கொண்டு 356ஐ மூத்த அண்ணன் மாதிரி விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரயோகிப்பது குடியாட்சி இல்லை என்ற கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
செல்லா காசு என்று சொல்வதைப் போல இந்திய அரசியல் சட்டத்தில் செல்லாப் பிரிவு என்று சொல்லப்பட்ட பிரிவு 356ஐக் கொண்டு பழிவாங்கல் நடந்தது எல்லாம் நமக்கு வரலாறு சொல்கின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தஞ்சாவூர் பொம்மையைப் போல ஆட்டி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இருப்பினும் மத்திய அரசு ஆணவத்தோடு கடந்த 69 ஆண்டுகளாக பிரிவு 356 ஐ கொடுமையாக பயன்படுத்திக்கொண்டுதான் வருகின்றது. இந்த நிலையில் கூட்டாட்சி என்ற நிலைப்பாடு காட்சிப் பிழையாகிவிடக் கூடாது.
#ksrposting #ksradhakrishnanposting #பிரிவு356 #article356 #மாநிலஅரசுகள்கலைப்பு
No comments:
Post a Comment