தென் தமிழக மாவட்டங்களின் உரிமைக் குரல்:
-------------------------------------
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வறட்சி, தொழில் வளர்ச்சியில் புறக்கணிப்பு, வேலைவாய்ப்பு இல்லாத திண்டாட்டம், அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத நிலையில் உள்ளது. தமிழர்கள் வரலாறு, குமரிமுனையில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் அனைத்து திட்டங்களிலும் சென்னையிலே அடைக்கப்படுகின்றன.
இப்பகுதிகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய நீண்ட கால திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் கிடப்பில் போட்டுள்ளது.
ஆனால், சுற்றுச்சூழலை பாதிக்கும் கூடன்குளம், அணுஉலை தேனியில் நீயூட்ரீனோ, புதுக்கோட்டை நெடுவாசல், கங்கைகொண்டான் குளிர்பான ஆலைகள் என மக்களை பாதிக்கும் ஆலைகள் மட்டும் மிக ஆர்வத்தோடு தென்மாவட்டத்தில் அமைக்கப்படுகின்றது. 33 நதி தீரங்களின் மணல் கொள்ளை, கடற்கரை தாது மணக் கொள்ளை, கிரானைட் கொள்ளை என தென்கத்தில் வளங்கள் சூரையாடப்படுகின்றன. இந்த ஆலைகளால் பெரும் கேடுகள் தான் வருங்காலத்தில் ஏற்படும். தென் தமிழகம் என்ன....சுற்றுச் சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் அமைய குப்பைக்கூடையா?
சேது கால்வாய்த் திட்டம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், குமரி மாவட்ட குளைச்சல் துறைமுக திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றாமல் உள்ளன.
மீன்பிடி துறைமுகங்களான கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், திருநெல்வேலி மாவட்டம் உவரி தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, புன்னைக்காயல், வேம்பாறு, இராமநாதபுர மாவட்டத்தின் வாலிநோக்கம், பாம்பன் - இராமேஸ்வரம் போன்ற மீன்பிடி துறைமுகத் திட்டங்களும் நிறைவேற்றப்படாமலும் உள்ளது.
நாங்குநேரி சிறப்புப் பொருளாதார தொழில் மையம் அமைக்கப்பட்டும், பயன்படுத்தாமல் பூட்டப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ரயில்வே தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் ரயில் கோட்டத்தில் தான் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை - தென்காசி - செங்கோட்டை - புனலூர் கொள்ளம் அகல ரயில் பாதை ஆமை வேகத்தில் நகர்ந்து நிறைவாகாமல் உள்ளது. மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை நிலுவையிலே நீண்ட காலமாக நிற்கின்றது. திண்டுக்கல் - பழனி சபரிமலை - ரயில் பாதை திட்டமும், பேச்சளவிலே உள்ளன.
மதுரை விமான நிலையமும் மேலும் விரிவாக்கக் கூடிய பணிகளை தொடங்க வேண்டும்
தென் மாவட்டத்தில் கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமான நிலையங்களான கோவில்பட்டி, கயத்தார், செட்டிநாடு, போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்கள் 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததாக இருக்கின்றது. அங்கு விமானப்படை தளங்கள்,விமான பயிற்சி நிலையங்கள், அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கலாம்.
தூத்துக்குடி விமானநிலையமும், பன்னாட்டு விமான நிலையமாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தும், செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாக இருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில், விளையும் பூக்கள் போன்ற பயிர்களை பாதுகாக்க தொழில் பூங்கா அமைக்கப்படவும் இல்லை. அங்கு ரப்பர் தோட்ட தொழிலும் நாளுக்கு நாள் மடிந்துக் கொண்டு வருகிறது.
நீராதார பிரச்னைகளில் குமரி மாவட்ட நெய்யாறு, திருநெல்வேலி மாவட்ட அடவிநயனார், உள்ளாறு, செண்பகவல்லி அணை உடைப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை திட்டம், முல்லை பெரியாறு, போன்ற நீராதார பிரச்னைகளும் தீர்க்கப்படாமல் உள்ளன.
தாமிரபரணி கருமேனியாறு, இணைப்புத் திட்டம் நிறைவேறாமல், நீண்டகாலமாக பணிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதைக் குறித்து உச்சநீதிமன்றத்தில், 34ஆண்டுகாலமாக போராடி, நான் வாங்கிய தீர்ப்பின் அடிப்படையில், இந்த நதி பிரச்னைகள் தீர்வு ஏற்படுமா என்பது கேள்வி குறியாக உள்ளது. கேரளாவில் உள்ள நதி படுகையான அச்சங்கோவில் - பம்பை ஆற்றுப்படுகைகள் தமிழகத்தில் வைப்பாரோடு இணைக்க வேண்டும் என்ற திட்டம் மத்திய அரசு திட்டம் 1975 ஒப்புதல் பெற்றும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
இராமநாதபுர மீனவர்களுக்கு ஆதாரமாக விளங்குகின்ற கச்சத்தீவு, அங்குள்ள மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கடலில் தாக்கப்படுவதால் நித்தமும் நடக்கின்ற நிலை.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள தமிழகத்திற்கு சொந்தமான கண்ணகி கோட்டத்தை கேரளா அரசு ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுத்தளம்
நெல்லை மாவட்டத்தில் மகேந்திர கிரியில் இந்திய விண்வெளி மட்டும் திரவ எரிவாயு, தொழிற்நுட்ப மையம் அமைக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும்.
ஐ.ஐ.டி. , ஐ. ஐ.எம்., போன்ற உயர்நிலை நிலையங்கள் தென்மாவட்டங்களில் அவசியம் நிலவ வேண்டும்.
சமனர்கள் அமைத்த கழுகுமலை வெட்டுவான் கோவில் வரலாற்று ரீதியாக பராமரிக்க வேண்டும்.
தூத்துக்குடி இராமேஸ்வரத்திலிருந்து கப்பல் போக்குவரத்தை இலங்கைக்கும் அந்தமானுக்கும் துவக்க வேண்டும்.
திருநெல்வேலி அருகே உள்ளஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கை 10 ஆண்டுகால மத்திய அரசின் பரிசீலனையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை உடனே வெளியிட வேண்டும். அந்த பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதுரை அருசே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழராய்ச்சி பணிகள் தொய்வில்லாமல் நடக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சிமலையின் வனபகுதியில் பாதுகாக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றப்பட வேண்டும். கஸ்தூரி ரங்கன், காட்கில் அறிக்கையில் பணிந்துரைக்கப்பட்ட ஏற்புடைய பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.
தென் மாவட்டங்களில் குடிசைத் தொழிலாக விளங்கும் தீப்பெட்டி உற்பத்தி, சிவகாசி பட்டாசு தொழில், அச்சுத் தொழில, திண்டுக்கலில் பூட்டு, பருத்தி அரைவை ஆலைகள் எல்லாம் நசிந்து விட்டன.
சுற்றுலாத்தலங்களாக கொடைக்கானல், குற்றலாம், இராமேஸ்வரம், கன்னியாகுமரி, கிறிஸ்தவர்கள் வணங்கக்கூடிய புனித சவேரியர் உலாவியம், மணப்பாடு, முண்டன்துறை - களக்காடு, புலிகள் சரணாலயம், திருச்செந்தூர், போன்ற இடங்களில் சுற்றுலா வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில், கிராஃபைட் தொழிற்சாலை அமைந்துவிடும் என்று ப. சிதம்பரம் அமைச்சராக இருந்த போது உறுதியளித்தார். அந்த உறுதியும் இன்று காற்றில் பறந்துவிட்டது.
இவ்வாறு பலத் திட்டங்கள் என நீண்ட பட்டியல் இடலாம்.
எதை எடுத்தாலும் சென்னை என்றே தமிழகத்தின் அடையாளம் என்று நினைத்தால், வளர்ச்சி ஒரு இடத்திலேயேதான் தங்கிவிடும்.
எனவே, தென்மாவட்டங்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு, பெருமளவு நிதி உதவியோடு சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட வேண்டும். தென் மாவட்டங்களுக்கு வளர்ச்சிக்கான வளர்ச்சி கவுன்சிலும் நிறுவ வேண்டும். இதைப் போல் மஹாராஷ்டிராவில் விதர்பா, ஒடிசாவில் சில பகுதிகள், பீகார், இந்தியாவில் கிழக்கு மகானங்களான திரிபுரா, மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கப்பட்டுள்ளன. அதை போன்றே தென் மாவட்டங்களுக்கும் மத்திய - மாநில அரசுகள் வழங்க வேண்டிய பொறுப்புகள் உள்ளன.
புறக்கணித்தால் ஆந்திரத்தில் திரும்பவும் தெலுங்கான கோஷம் எழுந்து தனி மாநிலமாக அமைந்துவிட்டதை போல தென்தமிழகம் என்ற தனிமாநில குரல் ஒலிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
சென்னை மட்டும் தமிழகத்தின் அடையாளம் இல்லை. சென்னை என்பது சென்னப்ப நாயக்கர் இடமிருந்து பெற்ற பூமிதான். தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மதுரை தான். தமிழகத்தின் அடையாளம் என்று கருதப்படுபவை தென் குமரி, தமிழ் வளர்த்த, பொதிகை, பொருணை, அடங்கிய நெல்லை பூமி, வேகாத வெய்யிலை தரும் இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள், கலைகள் வளர்த்த தஞ்சை, திருச்சி , கோவையும் தான் பூர்வீக அடையாளங்களான தமிழ் மண்ணாகும்.
இந்தக் கருத்துக்களை பரிசீலணைக்காக பதிவு செய்கின்றேன். விருப்பு வெறுப்பு இல்லாமல் சிந்தித்து பாருங்கள் வேறு எந்த நோக்கமும் கிடையாது. புறக்கணிக்கும் போது இயற்கையாக உரிமைக்குரல் கேட்டத்தான் செய்யும். இதை யாராலும் தடுக்க முடியாது. இயற்கை நீதி என்பது ஒன்று உண்டு.
சமன்பாடுகள் முறையாக இருக்க வேண்டும். விருப்பத்திற்கு ஏற்றவாறு புறக்கணிப்பதோ சீராட்டுவது ஜனநாயகத்தை மீறிய நெறிமுறைகள் ஆகும்.
#tamilnadu
#தென்தமிழகம்
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment