தமிழக அரசியல் சூழலால் கேரளத்தில் வேகமெடுக்கும் தடுப்பணை பணிகள்
தமிழக அரசியல் களத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலை கேரள அரசுக்கு வசதியாகிவிட்டது. பவானிக்கு குறுக்கே கட்டப்படும் முதல் தடுப்பணையின் பணிகள் பெருமளவு முடிந்த நிலையில், 2-வது தடுப்பணை பணிகள் தொடங்கியுள்ளன.
முடிவுறும் நிலையில் தேக்குவட்டை; ஆரம்பமாகும் மஞ்சிக்கண்டி...
தமிழகத்தின் நீலகிரி காடுகளில் உருவாகும் பவானி நதி நீர் கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு வழியே பயணித்து பல்வேறு கிராமங்கள் வழியே தமிழ்நாட்டை அடைகிறது. அதேபோல, கோவை குற்றாலம் மலைகளுக்கு அப்பால் முத்திக்குளம் அருவியிலிருந்து புறப்படும் சிறுவாணி ஆறு, சிறுவாணி அணையை நிறைத்து, பின்னர் பல்வேறு பகுதிகள் வழியாகப் பாய்ந்து தமிழகத்துக்கு வருகிறது.
சிறுவாணிக்கு குறுக்கே அணை கட்ட கேரள அரசு பலமுறை முயற்சி மேற்கொண்டது. எனினும், தமிழகத்தின் தொடர் எதிர்ப்பால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதலே பவானி முக்காலிக்கு கீழே வீட்டியூர், பாடவயல், மஞ்சிக்கண்டி, தேக்குவட்டை, கீரைக்கடவு, ரங்கநாதபுரம் ஆகிய 6 இடங்களில் பவானிக்கு குறுக்கே தடுப்பணை கட்டும் பணியைத் தொடங்கியது கேரள அரசு.
தேக்குவட்டை கிராமத்தில் முதல் அணையின் பணிகள் தொடங்கப்பட்ட பின்னரே, தமிழகப் பகுதியில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரியவந்து, போராட்டங்கள் நடைபெற்றன. கேரளத்தைச் சேர்ந்தவர்கள் “காவிரி தீர்ப்பாயத் தீர்ப்பின்படி 6 டிஎம்சி நீரை பவானி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து எடுக்க கேரளத்துக்கு உரிமையுள்ளது. இங்கே நீர் எடுப்பதன் மூலம் தமிழகத்துக்கு வரும் பவானிக்கு பாதிப்பு இருக்காது” என்று தெரிவிக்கின்றனர்.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் “அட்டப்பாடி பகுதியில் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மோட்டார் பம்ப்செட்டுகள் மூலம் பவானியில் தண்ணீர் எடுக்கின்றனர். தற்போது அணை கட்டி மோட்டார் பம்ப்செட் வைத்து நீர் எடுப்பதன் மூலம், 6 மடங்கு தண்ணீர் உறிஞ்சப்படும். அதனால் தமிழகப் பகுதியில் பவானியில் தண்ணீரே வராது. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கான 20-க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்களும், லட்சக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களும் பாழாகும்” என்று தெரிவிக்கின்றனர்.
அணை கட்டுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அணை கட்டுவதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதாகவும் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால், கேரளத்தில் அணை கட்டும் பணி தடையின்றி நடைபெறுகிறது.
தற்போது தேக்குவட்டை அணைப் பணிகள் பெருமளவு முடிந்து, இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஞ்சிக்கண்டி என்ற இடத்தில் அணைப் பணிகள் தொடங்கியுள்ளன.
கடந்த 4 நாட்களாக நடைபெறும் இந்தப் பணியில் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு ஆற்றின் கரைகள் சுத்தப்படுத்தப்பட்டு, அளவிடும் பணிகள் நடந்துள்ளன. இதுதவிர, குறிப்பிட்ட அளவு அஸ்திவாரமும் தோண்டப்பட்டு, பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணி நடந்து வருகிறது.
அதேசமயம், தேக்குவட்டையில் 75 மீட்டர் (அணையின் நீளம் மொத்தம் 100 மீட்டர்) தொலைவுக்கான தடுப்பணை தடுப்புச் சுவர் பணி முழுமையாக நடந்து, பூச்சு வேலையும் முடிந்துவிட்டது. இதையடுத்து, நீர் சென்று கொண்டிருந்த எஞ்சிய 25 மீட்டர் தொலைவு தடுப்புச் சுவர் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பகுதியில் சென்ற தண்ணீர், கட்டி முடிக்கப்பட்ட 75 மீட்டர் தடுப்புச் சுவர் ஷட்டர் கதவுகளுக்கான இடைவெளி வழியே திருப்பி விடப்பட்டுள்ளது.
தேங்கியுள்ள தண்ணீர்
இதுகுறித்து தேக்குவட்டை பகுதி மக்கள் கூறியதாவது: தேக்குவட்டை தடுப்பணை அமைந்திருக்கும் பகுதி ஏற்கெனவே மேட்டுப்பாங்கான பகுதி. எனவே, சாதாரணமாகவே தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கும். இப்போது 5 அடி உயரத்துக்கு அணை கட்டப்பட்டுள்ளது. இதில் 4 ஷட்டர்களுக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 25 மீட்டர் தடுப்புச் சுவர் பணி முடிந்ததும், அதில் ஒரு ஷட்டர் அமைக்கப்படும். தற்போதே தடுப்பணையில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது.
மஞ்சிக்கண்டி தடுப்பணைக்காக சமன்படுத்தப்படும் நிலம்.
மஞ்சிக்கண்டியில் தடுப்பணை அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம்.
இதுகுறித்து தேக்குவட்டை பகுதி மக்கள் கூறியதாவது: தேக்குவட்டை தடுப்பணை அமைந்திருக்கும் பகுதி ஏற்கெனவே மேட்டுப்பாங்கான பகுதி. எனவே, சாதாரணமாகவே தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கும். இப்போது 5 அடி உயரத்துக்கு அணை கட்டப்பட்டுள்ளது. இதில் 4 ஷட்டர்களுக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 25 மீட்டர் தடுப்புச் சுவர் பணி முடிந்ததும், அதில் ஒரு ஷட்டர் அமைக்கப்படும். தற்போதே தடுப்பணையில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது.
முன்பு, இங்குள்ள கிணறுகளில் 20 அடி ஆழத்தில் இருந்த தண்ணீர், தற்போது 12 அடி முதல் 10 அடி ஆழம் வரை உயர்ந்துள்ளது. அணைப் பணிகள் முடிந்தால் இன்னமும் அதிக அளவில் தண்ணீர் உயர வாய்ப்பு உள்ளது என்றனர்.
இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஞ்சிக்கண்டி கிராம மக்கள் கூறும்போது, “இங்கு ஏற்கெனவே மோட்டார் பம்ப்செட்டுகள் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் எடுத்து வருகிறோம். இப்போது கட்டப்படும் அணையால் மோட்டார் பம்ப்செட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. மேலும், அணையின் ஷட்டர் சாவிகளை விவசாயிகளிடமே ஒப்படைப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், இங்குள்ள 150 ஏக்கரில் ஆண்டு முழுவதும் சிறப்பாக சாகுபடி மேற்கொள்ள முடியும். 50 விவசாயக் குடும்பங்கள் பயனடையும். லாரியில் தண்ணீர் வாங்கும் கஷ்டம் தீரும்” என்றனர்.
புதூர் விவசாயிகள் கூறும்போது, “தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களால் அணை பணிகள் நின்றுவிடுமோ என்று கருதினோம். அணை கட்டும் பணியை ஏலம் எடுத்தவர்களும் அச்சமடைந்தனர். தேக்குவட்டை அணைப் பணிக்கு டென்டர் எடுத்தவர், ‘அணைப் பணிக்காக அதிகம் செலவிட்டுள்ளேன். பாதியில் பணிகள் நின்றால் பணம் கிடைக்காது’ என்று கூறி, அணைப் பணிகளை வேகமாக மேற்கொண்டார். அதனால், பணிகள் பெருமளவு முடிந்துவிட்டன. ஷட்டர் அமைப்பது போன்ற சிறிய பணிகள்தான் மீதம் உள்ளன. 4 ஷட்டர்களை பொருத்துவதற்குள் மீதமுள்ள 25 மீட்டர் தடுப்புச் சுவர் பணிகளும் நிறைவடைந்துவிடும்.
அச்சம் நீங்கியது!
மஞ்சிக்கண்டி அணைப் பணிக்காக டென்டர் எடுத்தவர் நிலத்தை சுத்தம் செய்வதுடன் நிறுத்திக் கொண்டார். வேலை தொடங்கிய பின்னர், தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தால் பணிகள் பாதியில் நின்றுவிடுமோ என்ற அச்சத்தால், பொறுமையாக இருந்தார். தமிழகத்தில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைப் பார்த்து, தற்போது தைரியமாகப் பணிகளைத் தொடங்கிவிட்டார். கடந்த 4 நாட்களாக அணை பணிகள் நடக்கின்றன.
இதேபோல, மற்ற 4 தடுப்பணைகள் கட்டவும் ஒப்பந்ததாரர்கள் தயாராக உள்ளதாகவும் கூறுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு அரசியல் குழப்பம் இருக்கும் என்று இங்குள்ளவர்கள் கருதுகின்றனர். இதனால், அணை பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன” என்றனர்.
No comments:
Post a Comment