தமிழக நீர்நிலைகள்
நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947 ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றனர்.
மதுரை, சென்னை மாநகர்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன.
இன்றைக்கு தமிழகத்தில் 18789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்து விட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல், நிலத்தடி நீரும் குறைந்து விட்ட்தால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய் விட்டனர். இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல், மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்து விட்டது.
மணல் திருடர்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்த்தனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்து விட்டன. இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும், ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.
ஜன நாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் அரசுகளால் தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன. மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும் நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம். இன்றைக்கு நாம் ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்கார்ர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். தாது மணல் ஆற்று மணல் யார் வீட்டு சொத்து மாதிரி மலை முழுங்கி மகாதேவர்கள் அள்ளிச் செல்வதை மக்கள் சக்தி பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. ஏனென்றால் ஓட்டுக்குப் பணம் வாங்கி விட்டோமே….வெற்றிப் பெற்றவர்களெல்லாம் மணல் கொள்ளைக்கார்ர்கள், ரியல் எஸ்டேட்காரர்களிடம் தானே காசை வாங்கி ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். வேறு என்ன செய்ய முடியும்?
விதியே விதியே தமிழ் சாதியே….
#தமிழக_நீர்நிலைகள்
#ஆறுகள்_குளங்கள்
#ஏரிகள்
#KSRPOSTING
#KSRADHAKRISHNAN_POSTING
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
03.02.2017
No comments:
Post a Comment