#அமெரிக்காவின்_ஊழ்_இவ்வளவு_மோசமாகப்_போகும் என்று நான் நினைக்கவில்லை. ஜனவரி ஆறாம் தேதி நாடளுமன்றக் கட்டடத்தில் நடந்த அராஜகச் செயல்களுக்குப் பிறகு அப்போதைய மேலவைப் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானலும் கீழவை சிறுபான்மைத் தலைவர் கெவின் மெக்கார்த்தியும் ட்ரம்ப் தூண்டிவிட்டுத்தான் அவருடைய ஆதரவாளர்கள் அராஜகங்களில் ஈடுபட்டார்கள் என்றும் ட்ரம்ப்பைப் பதவியிறக்கம் செய்வதற்கு அது போதுமான காரணம் என்றும் சொன்னார்கள். குடியரசுக் கட்சியின் பெரிய புள்ளிகளுக்கு மனத்தெளிவு பிறந்துவிட்டது என்று நினைத்தால் இப்போது இவர்களே ட்ரம்ப்பைப் பதவியிறக்கம் செய்வதற்கு ஓட்டுப் போட மறுக்கிறார்கள். இனி எதுவும் இவர்களுடைய மனதை மாற்றாது. இதில் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் குடியரசுக் கட்சியே அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதா அல்லது அமெரிக்கா என்று இதுவரை அறியப்பட்ட ஒரு நாட்டின் தலைவிதியையும் இக்கட்சி முற்றிலுமாக மாற்றப் போகிறதா.
ட்ரம்ப் ஜனாதிபதி ஆவதற்கு முன்பே பொய்யுரைப்பதும் பித்தலாட்டம் புரிவதும் குடியரசுக் கட்சியில் இருந்து வந்தாலும் ட்ரம்ப் கூறிய பொய்களும் அவர் செய்த ஊழல்களும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாததும் அவற்றைத் தகாத வழிகளில் மாற்ற முயற்சித்ததும் குடியரசுக் கட்சியின் உருவையே குலைத்துவிட்டன. இப்போது அவர் செய்த எந்தத் தவறையும் அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கண்டுகொள்ளாதது அமெரிக்காவின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியை உண்மை, தர்மம், நியாயம், ஜனநாயகம் என்ற எல்லா நல்ல கொள்கைகளிலிருந்தும் விலகிப் போகச்செய்துவிட்டது. இனி அந்தக் கட்சி இந்த நிலையிலிருந்து திரும்பி வருமா என்பது சந்தேகமே.
அமெரிக்க அரசியல் சாசனப்படி பெரும்பான்மை ஓட்டுக்களைப் பெறாத வேட்பாளரும் ஜனாதிபதியாக வரலாம். electoral college என்ற ஒன்று இருப்பதால் இது சத்தியமாகிறது. 1988-க்குப் பிறகு ஒரே ஒரு முறைதான் குடியரசுக் கட்சி வேட்பாளர் பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்று ஜெயித்திருக்கிறார். குடியரசுக் கட்சியினரின் கை ஓங்கியிருக்கும் மாநிலங்களில் ஓட்டுப் போடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள். அதிலும் அதிகம் விபரம் தெரியாத நிறைய கருப்பர்களை ஓட்டுப் போடாமல் செய்வது எளிது என்று நினைக்கிறார்கள். இப்போதைக்கு குடியரசுக் கட்சியின் தாக்கம் அமெரிக்க அரசியலில் அவ்வளவு இல்லாமல் இருப்பதுபோல் இருந்தாலும் இத்தனை குற்றங்கள் புரிந்த ட்ரம்பை இன்னும் அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் அடுத்த தேர்தலில் மறுபடி இவர்கள் பதவிக்கு வந்து அமெரிக்காவின் தோற்றத்தையே முழுவதுமாக மாற்றிவிடலாம். ஜனநாயகத்தின் ஒரு தூணாக விளங்கும் அமெரிக்காவைக் இயற்க்கை காப்பாற்றட்டும்.....
Nageswari Annamalai
No comments:
Post a Comment