————————————-
"To be a patriot, one had to say, and keep on saying, 'Our country, right or wrong,' and urge on the little war. Have you not perceived that that phrase is an insult to the nation."
- "#Glances_at_History," 1906
டில்லியில் வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களாக விவசாய சங்க அமைப்புகள் போராடுகின்றனர். மத்திய அரசோடு 41 அமைப்புகளும் இது குறித்து 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் குடியரசு நாளன்று விவசாய போராட்டத்தில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. போராட்டக்களம் அமைதியாகவும் வீரியமாகவும் இருக்கவேண்டும். இன்றைக்கு போராட்டக்களங்களில் வன்முறைகள் ஏற்படுவதும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதும் நடக்கின்றன. போராட்டம் என்பது அடிப்படை உரிமை.
தமிழ்நாட்டில் விவசாய சங்க போராட்டங்கள் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்தது, அதில் அடியேனும் பங்கேற்றது உண்டு. என் கிராமதில் 8 பேர் துப்பாக்கி சூடால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் விவசாய போராட்டத்தில் 47 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியிருக்கிறார்கள் என்பது வரலாற்று செய்திகள். போராட்டங்கள் வேகமெடுத்து போராடி அதன் நோக்கங்கள் நிறைவேறி போராடியவர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டிய நிலையில் போராட்டங்கள் இருக்கவேண்டும். போராட்டங்கள் வன்முறைக்கான தளமாகவோ களமாகவோ இருக்கக்கூடாது, போராடும் விவசாயிகளுக்கு நியாயங்கள் கிடைக்கக்கூடிய அளவில் அமைந்திட வேண்டும், ஆனால் டில்லியில் விவசாயிகள் மீது போலீஸார் தடியடி, புகை குண்டுகள் வீசுதல் போன்ற வன்முறைகளை நடத்தியுள்ளனர், இதெல்லாம் வேதனையான விடயங்கள். இந்த நிலையில் அங்கு போராடிய விவசாய சங்கங்களான பாரதிய கிசான் யூனியன்(BANU), இந்திய கிஷான் சங்கர்ஷ் ஆகிய இரண்டு அமைப்புகளும் விலகுவதாக அறிவித்துள்ளது. போராடுவதும், போராடுவதில் உள்ள நியாயங்களை முன்னெடுக்க வேண்டும். அதே போல போராடுபவர்கள் மீது காவல்துறையும் அத்துமீறக் கூடாது. எல்லா போராட்டக் களங்களிலும் பொதுமக்களுக்கும் பொது சொத்துகளுக்கும் சேதாரம் இல்லாத போராட்டக் களம் அமைந்தால் தான் அது நேர்மையான போராட்டக்களமாக இருக்கும் என்பது என்னுடைய பார்வை.
பல போராட்டங்களில் வெளியாட்கள் உள்ளே புகுந்து போராட்டக்குழு பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் சமூக விரோதிகள் புகுந்து சிக்கல்களை உருவாக்கின்றனர். சமீபத்தில் பல போராட்டக்களங்களில் இச்சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. இந்தியாவில் சுதந்திர போராட்டக்காலத்தில் காந்தி வன்முறையற்ற போராட்டத்தையும், வன்முறையற்ற சத்தியாகிரகத்தையும் நடத்தினார், நேதாஜி போஸ் திவீரமாக ஐஎன்ஏ படையைக் கட்டமைத்தார். இந்த இருவரும் தங்கள் போராட்டங்களில் சமூக விரோதிகளை அனுமதித்தது கிடையாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

No comments:
Post a Comment