——————————————————-
இன்றைய (27.01.2021) தினமணி நாளிதழில் “கிருஷ்ண மேனன் எனும் நிறுவனம்” எனும் தலைப்பில் நான் எழுதிய பத்தி வெளியாகியுள்ளது.
இன்றைய தலைமுறைக்கு மேனன் போன்ற ஆளுமைகள் குறித்தெல்லாம் தெரியாது. போகிற போக்கில் ஏதோ கடந்த 10-15 ஆண்டுகள் தான் வரலாறு என்று பேசிக் கொண்டு திரிகின்றார்கள். அது அவர்கள் பாடு.
ஐநா அவையில் காஷ்மீரை குறித்து கிருஷ்ண மேனன் நீண்ட உரையாற்றி மயக்கமடைந்ததெல்லாம் உண்டு. அவர் அறிவைக் கண்டு சிலர் போற்றியதுண்டு. பலர் விரோதம் காட்டியதுண்டு. இது தான் பொதுத் தளம். இந்த நிலைமை இன்றைக்கு மட்டுமல்ல அன்றைக்கும் இருந்தது. கவிஞர் கண்ணதாசன் இவர் மறைந்த நேரத்தில் ஒரு அரிய பாடலே எழுதினார். இப்படியான கிருஷ்ண மேனன்கள் பலர் உண்டு. இன்றைய இளைய தலைமுறையினர் இது போன்றோரைக் குறித்து வாசிக்கவில்லையென்றாலும் கேட்டாவது தெரிந்துக் கொள்ள வேண்டும்.
•••
-வழக்கறிஞர், கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
வி.கே.கிருஷ்ணமேனன் குறித்த செய்திகளை பழ நெடுமாறன் நடத்திய, மதுரையிலிருந்து 1960களில் வெளிவந்த குறிஞ்சி இதழில் கட்டுரைகளாக அடிக்கடி படித்தது முதல் எனக்கு அறிமுகம். முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கிருஷ்ணமேனனை குறித்து எழுதிய “A Chequered brilliance”, The Indian Society of International Law சிறப்பு வெளியீடாக வெளியிட்ட "V.K.Krishnamenon Remembered" ஆகிய இரண்டு நூல்களும் இவரைக் குறித்து இங்கே எழுத என்னைத் தூண்டியது.
கோவைக்கு சென்றால், காந்திபுரம் அருகேயுள்ள எனக்கு வேண்டப்பட்டவரின் ஆர்.வி ஓட்டலில் தங்குவது வாடிக்கை. அங்கு, காலையில் நடைபயிற்சிக்கு செல்லும்போது ‘வி.கே.மேனன் சாலை’ என்ற நீலக் கலர் பெயர் பலகை கண்ணில் படும். ஒரு ஆளுமையின் பெயரைக் கூட சரியாக குறிப்பிடாமல் வி.கே.மேனன் என்று பெயர் பலகை வைத்துள்ளார்கள். கோவை பகுதியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், மற்றும் கோவை மாவட்டத்தின் சர்வகட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நண்பர்களை சந்திக்கின்றபோது, இவர் யார் என்று தெரியுமா என்று கேட்டால், அவர்களுக்கு தெரியவில்லை. இதுதான் இன்றைய அரசியல் நிலை. என்னங்க, வி.கே.கிருஷ்ணமேனன் என்ற பெயரை சரியாக குறிப்பிடாமலும், அவரை பற்றி தெரியாமலும் என்ன அரசியலில் இருக்கீங்க. அவர் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியப் புள்ளி. கோவை நகரோடு சம்பந்தப்பட்டவர். அவரின் பெயரை சுருக்கிப் போட்டு அவரை அவமானபடுத்தலாமா என்று கேட்டேன். அதுவும் சாதி பெயர் நீக்கப்பட்ட பின், மேனன் மட்டும் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
கேரள அரசியல் தலைவர்கள் ஏ.கே. கோபாலன், நம்பூதிரிபாட், அச்சுதமேனன், கருணாகரன், ஏ.கே.அந்தோணி, அச்சுதானந்தன், உம்மன்சாண்டி வரை எளிமையான பகட்டு இல்லாத தலைவர்களாக இருப்பார்கள். வி.கே கிருஷ்ணமேனனும், கே.பி.உன்னிகிருஷ்ணனும் எளிமையாக இருந்தாலும். தங்கள் உடைகள் விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். வேங்களில் கிருஷ்ணன், கிருஷ்ணமேனன் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டு பகுதியில் அன்றைய பிரிட்டிஷ் மலபார் என்று அழைக்கப்பட்ட பகுதியில் பிறந்தார். இவருடைய குடும்பமே வழக்கறிஞர் குடும்பம். கோழிக்கோட்டில் பள்ளி படிப்பை முடித்து, அங்குள்ள சாமுத்திரி கல்லூரியில் பயின்று, பின் சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றையும், பொருளாதாரத்தையும் கற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றார். அன்னிபெசன்ட்டின் ஹோம்ரூல் இயக்கம் மற்றும் பிரதர்ஸ் ஆப் சர்வீஸில் முக்கிய அங்கம் வகித்தவர்.
ஆற்றலும், தைரியமும் மிக்கவர் வி.கே.கிருஷ்ணமேனன். இங்கிலாந்து சென்று படித்தவர். உளவியலில் முதுகலை பட்டம் பெற்றார். அரசியல் அறிவியலிலும் முதுகலை பட்டம், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். இங்கிலாந்து பார் கவுன்சிலர் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். லண்டனில் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். பிரிட்டன் தொழில் கட்சியில் இருந்தார். லண்டனில் உள்ள லீக் அமைப்பில் செயலராக இருந்து இந்திய விடுதலைக்கு பிரிட்டனில் ஆதரவு திரட்டினார். இங்கிலாந்து முழுவதும் சென்று ஆதரவு திரட்டினார். பின் லண்டன் இந்திய தேசிய காங்கிரஸின் இங்கிலாந்து கிளையில் நிர்வாகியாக செயல்பட்டபோது, நேருவை சந்தித்தார். நாட்டு விடுதலைக்கு பின், நேருவின் சிறப்பு தூதராக வெளியுறவு கொள்கைகளை நெறிப்படுத்தவும், ஐ.நா.சபையில் இந்தியா பிரதிநிதியாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டார். வி.கே.கிருஷ்ண மேனன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1953-இருந்து 1956 வரையிலும், மக்களவையில் 1957 முதல் 1967 வரை, திரும்பவும் இரண்டாண்டுகள் கழித்து 1969 முதல் 71 வரை, மேலும் 1971 முதல் 74 வரை தேர்தெடுக்கப்பட்டார். 1969-ல் மேற்குவங்கம் மிட்னாபூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும், 1971-ல் திருவனந்தபுரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிராக தேர்ந்தெடுக்கபட்டார். இவருடைய அதிரடி நடவடிக்கைகள் அவ்வப்போது சர்ச்சையை கிளம்பும். பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கினார். பாதுகாப்பு துறையின் சார்பில் சைனிக் பள்ளிகளை உருவாக்கினார். இவரால் தமிழகத்தில் கோவை அருகே உடுமலையில் அமராவதியில் சைனிக் பள்ளி நிறுவப்பட்டது. இவருக்கு கடமையில் கண்டிப்பு உண்டு.
சில நேரங்களில் கோட் சூட், சிலசமயங்களில் துல்லியமான நீண்ட கதர் ஜிப்பா, கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரம், கையில் நீண்ட தடி, கிண்டலான பொன்சிரிப்பு. சரளமான பேச்சு, இடையிடையே வேடிக்கையான வார்த்தைகள் எனும் நடமாடும் பல்கலைக்கழகம்தான் வி.கே.கிருஷ்ணமேனன். இவருடைய ஆங்கில புலமை அபரிவிதமானது.
காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா மன்றத்தில் இந்தியாவின் குரலை உரக்க உரிமை குரலிட்டார். வி.கே.கிருஷ்ணமேனன் 1957ல் ஐ.நா.மன்றத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து இரண்டு நாட்களில் மொத்தம் 8 (5+3) மணிநேரம் தெள்ள தெளிவாக தரவுகளோடு பேசியது உலகத்தை கவர்ந்தது. இதுவரை ஐ.நா.வில் ஆற்றிய உரையில் கிருஷ்ணமேனனின் உரைதான் நீண்ட உரையாகும்.
பிரபல டைம் பத்திரிகை இவரை “இந்தியாவின் இரண்டாவது சக்திமிகுந்த மனிதர்” என்று புகழாரம் சூட்டியது. இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது. ‘காஷ்மீர் நாயகன்’ என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட இவர் மேற்கத்திய உலகில் இந்தியாவின் அதிசய மனிதராகவே கருதப்பட்டார். நுண்மான் நுழைபுலம் கொண்டவர். உலக சர்வதேச அரசியலை, உன்னிப்பாக கவனித்து அதுகுறித்த சரியான கருத்துகளை வெளியிடுவார்.
ஒருமுறை லண்டனில் பத்திரிகை நிருபர் கூட்டத்தில் காமன்வெல்த் பற்றி சொன்னபோது, ”There is nothing common in Common Wealth, certainly not wealth” என்று கூறினார். அரசியல் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் முகப்புரை இவரால் தயாரிக்கப்பட்டது. அதில் நேரு சில திருத்தங்கள் செய்து, அரசியல் நிர்ணய சபையில் ஒப்புதல் பெற்றது. அந்த முகப்புரை நேருக்கு பெருமை சேர்த்தது. பம்பாயில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். சிறந்த ராஜதந்திரி. நேருவின் மனசாட்சியாக திகழ்ந்தவர்.
சீனப் போரின்போது, நமக்கு ஏற்பட்ட பின்னடைவால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அதனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
சீனப் போரை சரியாக கையாளவில்லை என நேரு மீது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் தீர்மானமாக கொண்டு வந்தார்கள். ஆனால் தமிழகத்தைச் சார்ந்த குரல் ஒன்று கிருஷ்ணமேனனுக்கு ஆதரவாக பேசியது. அது நாஞ்சிலார்(திமுக). அவர் பேசியது பின்வருமாறு;
“இந்த படுதோல்விக்கு கிருஷ்ணமேனனை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறீர்கள். இதை நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன். முடிந்தால், மொத்த அமைச்சரவையையும் இதற்கு பொறுப்பேற்க வையுங்கள் அல்லது, குறைந்தபட்சம் நேரு அவர்களையும், கிருஷ்ணமேனன் அவர்களையும் இந்தத் தோல்விக்குக் காரணம் காட்டி, ராஜினாமா செய்ய வற்புறுத்தித் தீர்மானம் போடுங்கள். இல்லாவிட்டால், இதை நான் ஏற்கமாட்டேன். ஒரு தனிப்பட்ட கிருஷ்ணமேனனை இந்தத் தோல்விக்கு காரணம் காட்டுவது, பாரதப் பிரதமரை அவமானப்படுத்துவது ஆகும். ஆக, பொதுவாக அரசின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வாருங்கள், அதன் அடிப்படையில் தீர்மானம் போடுங்கள்” என்று சொன்னதற்குப் பிறகு, இதை எதிர்த்து நான் வெளிநடப்பு செய்வேன் என்று தெரிந்து கொண்டதற்கு பிறகு, பொதுவாக அரசின்மீது நம்பிக்கை இல்லை என்ற தீர்மானம் வடித்தெடுக்கப்பட்டது”.
சாஸ்திரி மறைவுக்கு பின் இவருக்கான இடம் பொதுவாழ்வில், இல்லாமலும், எந்த வெளிச்சமும் இவர்மேல் படாமலும் இருந்தது. அந்த கட்டத்தில் 1967ல் தமிழகத்திலிருந்து திமுக சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு அண்ணாவிடம் இரண்டு மூன்று தடவை கேட்டார். இதுகுறித்து மூதறிஞர் ராஜாஜியின் உதவியும் நாடினார். ஏனோ அந்த நேரத்தில் அவருக்கு திமுகவிடமிருந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இந்திரா காந்தி அவர்கள் பிரதமர் ஆனவுடன், இவர் சற்று ஒதுக்கப்பட்டார். ஏனெனில், பண்டித நேரு வசித்த தீன்மூர்த்தி பவனில், நடந்த கிச்சன் அரசியல்தான் காரணம். நேருக்கு நெருக்கமான, பிடித்த சிலரை இந்திரா காந்தி தள்ளி வைத்தார். அப்படிதான் கிருஷ்ணமேனனும். இதேநிலைதான் விடுதலை போராட்ட காலத்தில் கவிக்குயில் சரோஜினி நாயுடுக்கும் நடந்தது என்று சொல்வார்கள். அது வேறு விடயம்.
அதுபோல பம்பாயில் கிருஷ்ணமேனன் போட்டியிட்டபோது, தமிழர்கள் வாழும் பகுதியான தராவி, செம்பூர் போன்ற பகுதிகளில் அண்ணா, எம்.ஜி.ஆர் நாஞ்சிலார் போன்றவர்களை பிரச்சாரத்துக்கு அழைத்துண்டு, ஆனால் இவர்கள் அங்கே செல்ல முடியாத சூழ்நிலையாக தேர்தல் களம் தமிழகத்தில் அமைந்தது என்பது நினைவுக்கு வருகின்றது. தான் முன்பு வெற்றி பெற்ற பம்பாயில் சுயேட்சையாக போட்டியிட்டார். இவ்வளவு தகுதியிருந்தும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. கடைசி காலத்தில் டெல்லியில் வாழ்ந்தார். இறுதிகாலத்தில் எழுத்து, கருத்தரங்குகள் என்று இருந்துவிட்டார்.
டெல்லியில் The Indian Society Of International Law என்ற அமைப்பு உருவாக காரணமாக இருந்தார். இன்றைக்கும் அந்த அமைப்பின் கட்டிடம் உச்ச நீதிமன்றத்திற்கு எதிரில் கம்பீரமாக உள்ளது. அந்த அமைப்பில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறேன். டெல்லி செல்லும்போதெல்லாம் அந்த கட்டிடத்திற்குள் நுழையும்போது கிருஷ்ணமேனனை நினைக்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட கிருஷ்ணமேனனை பற்றி சமீபகாலமாக, ஒரு 25 வருடங்களாக நாடாளுமன்றம் செல்பவர்களிடம் கேட்பேன், அவரை தெரியாது என்று அவர்கள் சொல்வார்கள். இதுதான் இந்தியா அரசியல். இதுதான் இன்றைய பொதுவாழ்வில் உள்ள அர்த்தமற்ற அணுகுமுறைகள். என்ன செய்ய.
இன்னொரு வேடிக்கையான செய்தி, மொராக்கோ, செனான், அல்ஜீரியா,, துனிசியா போன்ற ஆப்பிரிக்கா நாடுகளுக்கு 1960களில் பயணித்தவர்களுக்கு தெரியும். குறிப்பாக அல்ஜீரியா நாட்டிற்கு சென்றால், இரண்டு இந்தியர்களை சொல்வார்கள். ஒருவர் திரையுலக நாயகர் திலீப்குமார், மற்றொருவர் வி.கே.கிருஷ்ணமேனன், அதன்பின் மூன்றாவதாக நேருவை சொல்வார்கள். அப்படி வளர்ச்சியற்ற நாடுகளில் கூட வி.கே.கிருஷ்ணமேனனை அறிந்தவர்கள் இருந்தனர். ஏனெனில் ஐ.நா மன்றத்தில் ஐரோப்பா நாடுகளின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கு வாதாடியவர் வி.கே.கிருஷ்ணமேனன்.
தலைசிறந்த ஒரு அறிவாளி, தியாகி, இறுதிமூச்சு விடுகின்ற காலத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமலேயே காலமானார் ஒரு தனி அறையிலேயே வசித்து வந்தார், பொது பேருந்துகளிலே அதிகமாக பயணிப்பார், பிரிட்டன் ஹைகமிஷ்னராக இருந்தபொழுது தனக்கு ஊதியம் வேண்டாமென்று மறுத்துவிட்டார். தன்னுடைய 78-ஆவது வயதில் 1974-ல் காலமானார்.
அதேபோன்றுதான், அரசியலுக்கு இலக்கணம் வகுத்த, சோஷலிச சித்தாந்தத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பேராசிரியர் ஹரால்ட் லாஸ்கி(Harold Laski), “திறமையிருந்தும், ஆற்றலிருந்தும், கூரான சிந்தனையிருந்தும், சிலர் பொறுப்புகளில் வரமுடியவில்லை. ஒருவேளை, இது ஜனநாயகத்தின் பலவீனமோ அல்லது மக்கள் மந்தைக் கூட்டம் என்பதற்கு ஏற்ற எடுத்துக்காட்டா- விளங்கி கொள்ள முடியவில்லை” என்பார்.
இப்படிப்பட்ட மேனன் ஒரு தனிமனிதரல்ல, ஒரு நிறுவனம், He himself is a institution. இப்படியான ஆளுமையான அரசியல்வாதிகளை இந்தியா பார்த்து கடந்துள்ளது. நான் அடிக்கடி கூறும் தகுதியே தடை என்ற நிலையில், இன்றைக்கு சில தகுதியற்ற, தாங்களே தங்களை அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை பார்க்க வேண்டிய துர்நிலை ஏற்பட்டுள்ளது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அரசியலாளர்,
வழக்கறிஞர்,
இணை ஆசிரியர், கதைசொல்லி (பொதிகை – பொருநை - கரிசல்)

No comments:
Post a Comment