தன்னலம் கருதாது ஏழைகளுக்காக இந்தியா முழுவதும் மண்ணளந்த வினோபா,
ஜனநாயகத்தைக் காக்க குரல் கொடுத்த எளிமையின் நேர்மையின் அடையாளம் ஜெயபிரகாஷ் நாராயணன்.
தன்னலம் கருதாத கம்யூனிஸ்ட் தலைவர்கள் தியாகச் சுடர்கள் சுந்தரய்யா, ஏ.கே. கோபாலன் போன்றவர்களை இன்றைக்கு உள்ளவர்களுக்கு இவர்களை பற்றி சொன்னால் தெரியாது.
அமைச்சர் பதவியே வேண்டாம் என்று புறந்தள்ளிய நாட்டுப் பணிக்காக திருமணம் செய்துக் கொள்ளாத அச்சுத பட்டவர்த்தன் மற்றும் கிருபளானி, ஆச்சாரியா நரேந்தர தேவ், ராம் மனோகர் லோகியா போன்ற பல அகில இந்தியத் தலைவர்கள்...
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தமிழ் கலை களஞ்சியம்(Tamil Encyclopedia ) , தமிழை ஆட்சி மொழியாக்கியது, தமிழுக்கு மதிப்பளித்தது, சமூக நீதி, விவசாய முதல்வர், தமிழகத்தில்நீர்ப்பாசனத்திற்கு அணைகள் என்று பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த சென்னை ராஜதானியின் அன்றைய முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓ.பி. இராமசாமி ரெட்டியார்,
நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக போராடி கடைசி காலத்தில் சீமான் வீட்டுப் பிள்ளை கோவில்பட்டியில் வக்கீல் தொழில் நடத்தும்போது கிழிந்த அங்கியோடு வறுமையில் வாடிய வ.உ.சி,
இப்படிப்பட்ட ஓமாந்தூராருக்கும், குமாரசாமி ராஜாவுக்கும் தமிழக சட்டப்பேரவையில் படங்களே வைக்கவில்லை. ஓமாந்தூராருக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த வருடம் சட்டமன்றத்தில் படம் வைக்கப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது. குமாரசாமி ராஜாவுக்கு முன்னாள் முதல்வர் என்ற முறையில் சட்டமன்றத்தில் இதுவரை திறக்கவேயில்லை என்பது வேதனையான விடயம். இதையும் கடந்து சென்றால் அமைச்சர்கல் குடியிருக்கும் கிரீன்வேஸ் சாலை (அன்றைய பசுமைவழிச்சாலை) குமாரசாமி ராஜா பெயரினை தமிழக அரசு அறிவித்தும் பத்திரிக்கை, ஊடகம் மற்றும் பொதுவானவர்கள் பி. எஸ். குமாரசாமி ராஜா சாலை என்று அழைக்காமல் கிரீன்வேஸ் சாலை மற்றும் பசுமைவழிச்சாலை என்றே அழைக்கிறார்கள்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கில இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்நாடு, ஏடுகளை நிறுவி வ.உ.சி வழக்கில் அவருக்கு உதவியாக, பெரியாருக்கு நண்பனாக, காமராஜர் முதலமைச்சர் பதவிக்கு சி.சுப்பிரமணியத்தோடு போட்டியிட்ட பொழுது அதற்கு தேர்தல் பார்வையாளராக இருந்து காமராஜரை முதலமைச்சராக்கிய, பிரிட்டிஷாருக்கு வரி கட்ட மறுத்ததன் விளைவாக ராசிபுரத்தில் தன்னுடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், பேருந்து உரிமங்களையும் ஜப்தி நடவடிக்கையினால் இழந்த சேலம் வரதராஜுலு நாயுடு
உத்தமர் காந்தியின் உற்ற தோழர் கல்லுப்பட்டி காந்தி நிகோதன ஆசிரமத்தின் நிறுவனர் ஜோசப் குமரப்பா,
தமிழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவர் ஜீவானந்தம்,
ஆலயப் பிரவேசத்திற்கு முன்னெடுத்த மதுரை வைத்தியநாத ஐயர்,
எளிமையின் சின்னம் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என்று பல தமிழக ஆளுமைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களையெல்லாம் நாம் சரியாக கொண்டாடுவதில்லை. இது தான் நமது புரிதலும், நமது அணுகுமுறையும்.....
சிலருக்கு உத்தமர் காந்தியை ஒப்ப புகழாரங்கள் நினைவிடங்கள், போக்கிடங்கள் என்று பாசாங்குத்தனமான கிறுக்குத்தனமான அணுகுமுறைகளிலிருந்து எப்போது விடுபடப் போகிறோமோ?
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலாக ஆளுயர போஸ்டர், வானத்தைத் தொடும் கட்-அவுட்டுகள், வாக்குக்கு காசு,பாலாபிஷேகம், அவர் மண், இவர் மண், ஆண்ட இனம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன அர்த்தமிருக்கின்றது என்று தெரியவில்லை.
நாம் என்றைக்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் துணை போவத்தில்லை.ஒதுக்கப்படவேண்டிய
வர்களை தூக்கி வைத்து ஆடினால் வேறு என்ன புரிதல் வரும்.
இங்கே நியாயங்கள் அநியாயங்களாக தெரிகின்றன. அநியாயங்களை நியாயங்களாக கொண்டாடுகிறார்கள். பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் பிரச்சினைகள் அல்லாதவற்றை கையிலெடுத்துக் கொண்டு டான் குவிக்ஷாட் மாதிரி ஆடுவதும் இங்கே நிலை. தகுதியே தடையாக எல்லா நிலையிலிருந்தால் என்ன செய்ய முடியும்.
பைத்தியக்காரத்தனங்களிலிருந்து தெளிவு பெறவில்லையென்றால் கோமா நிலை தான். யார் எக்கேடு கெட்டால் என்ன?
மெய்ப்பொருள் காண வேண்டும் என்று தமிழக அரசின் இலச்சினைக்கு கீழே பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எப்பொழுது மெய்ப்பொருள் காணப் போகிறோமோ?
கனவு கூடிய நித்திரையில் இருந்தால் எழுப்பி விடலாம். ஆனால் இங்கே காட்சிப் பிழைகள், இடமாறு தோற்றப் பிழைகள் தான் சரி என்று விதண்டாவாதம் செய்பவர்களிடம் சொல்லத்தான் செய்யலாம். அவ்வளவு தான். வேறென்ன சொல்ல....

No comments:
Post a Comment