———————————————————-
மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, செங்கல்பட்டு – விழுப்புரம் இடையே ஆலம்பரை குப்பத்தில், புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், கானத்தூர், ரெட்டிகுப்பம் – இடையே, ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசிக்கின்றனர்; இவர்களில் 7ஆயிரத்து, 500க்கும் மேற்பட்டோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு, மரக்காணம் இடைப்பட்ட இந்த பகுதிகளில், சாதாரண படகுகளுடன், ஆழ்கடல் விசைப்படகுகளும் பயன்படுத்தப்படுகின்றன. கடலரிப்பு காரணமாக, ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளை அப்பகுதியில் நிறுத்தமுடியாத நிலை உள்ளது.
இவ்வகை படகுகள், அங்கிருந்து, நீண்ட தூரம் பயணித்து, சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், நேரம், எரிபொருள் விரயம் ஏற்படுவதாக, மீனவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். தங்கள் பகுதியிலேயே மீன்பிடித் துறைமுகம் அமைக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, ‘செங்கல்பட்டு, விழுப்புரம் கடலோர எல்லைப் பகுதியான, ஆலம்பரை – அழகன் குப்பங்கள் இடையே, வங்க கடல் – பக்கிங்ஹாம் கால்வாய், கழிமுக பகுதியில், புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்’ என கடந்து ஆண்டு சட்டசபையில், முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். தற்போது அதற்கான பணிகள் வேகமெடுத்து உள்ளன. மீன்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், துறைமுகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
துறைமுகம் அமைய உள்ள இடத்தில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்குவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment