Thursday, September 19, 2024

அவ்வையின் காதல்

 அவ்வையின் காதல்


சங்ககால தமிழகத்தில் தலைவனும், தலைவியும் பிரிவதும் பிரிவுத்துயரில் இருவரும் பாடல்களை பாடுவதும் வழக்கமாக காணலாம். 


பொருள் தேட, வணிகம் செய்ய, போரிட என பல காரணங்களுக்காக ஆண்கள் தம் காதலியை விட்டு செல்வது வழக்கம். அவர்கள் திரும்பி வர ஆண்டுகள் கூட ஆகலாம். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, காதலியை மறந்துவிட்டு வேறு வாழ்வை அமைத்துக்கொண்டார்களா, கள்வர் கூட்டத்தால் கொலை செய்யபட்டார்களா என எந்த தகவலும் தெரியாது ஆற்றாமையிலும், பிரிவுத்துயரிலும் தவிக்கும் தலைவிகள் பாடிய பாடல்கள் சங்க இலக்கியமெங்கும் நிரம்பி வழிகின்றன


அவ்வையின் காதலனும் இதே போல அவ்வையை விட்டு பிரிகிறான். பல ஆண்டுகள் கடக்கின்றன. எந்த தகவலும் இல்லை.  தன் காமம் வானளவு மிகுதியானது என்றும்,அதை புரிந்துகொள்ளும் அளவுக்கு தன் தலைவனுக்கு அறிவு இல்லை என்றும் பாடுகிறாள் அவ்வை.


இந்தச் மன உளைச்சலைத் தான் அவளது அகநானூற்றுப் பாடலும் சித்தரிக்கிறது.


முலையின்கண்ணே தோன்றிய வேட்கைநோய் விருட்சமாகி வளர்ந்தது.

அப்போதும் என் தலைவர் வரவில்லை. 

என் அழகை கவர்ந்த பசலை எனும்

பிரிவுநோய் என்னை துன்புறுத்துவதை அறியாரோ நம் தலைவர்? அல்லது அறிந்திருந்தும் பெண்மனம் போன்ற மென்மையான மனம் அவரிடத்தில் இல்லாததால் வரவில்லையா

என அவ்வை பாடும் பாடலை கேட்டால் கல்லும் கரையும்.


அதன்பின் காதலன் திரும்பி வராததால் ஊரில் அனைவரின் பழிச்சொல்லுக்கும் ஆளாகிறாள் அவ்வை. பாணர்குழுவுடன் கிளம்பி ஊர் ஊராக சென்று கவிபாடுகிறாள். கொங்கு மண்டலத்தில் அவளது பல பாடல்கள் பிறக்கின்றன. அங்கிருந்து கிளம்பி அதியமானை சந்திக்கிறார்.


அவரது மேன்மையை துவக்கத்தில் அறியாத அதியமான் அவரை அலட்சியப்படுத்த "எத்திசை செல்லினு அத்திசைச் சோறே" என சினந்து எழுகிறாள் அவ்வை.


அதன்பின் அந்த அதிசயம் நிகழ்கிறது


இருவருக்கும் இடையே ஒரு இனிய நட்பு பூக்கிறது. குடும்பம் மொத்தத்தையும் இழந்த அவ்வை அதியமானை தன் தந்தையாக காண்கிறார்.


"உன் அன்பால் என்சொல் தந்தையர்க்குப் புதல்வர் சொல்லும் சொல் போல் அருள் சுரக்கும் தன்மையன" என பாடி நெகிழ்கிறார் அவ்வை


அதியமான் அவருக்கு கள்ளும் கறிச்சோறும் ஊட்டி மகிழ்கிறார். அதிலும் சோற்றில் இருந்த கறியை எல்லாம் எடுத்து அவ்வைக்கு கொடுத்துவிட்டு வெறும் சோற்றை உண்பார் அதியமான். சிறு கள் எனப்படும் சிறிய அளவிலான கள் கிடைத்தால் முழுவதையும் தான் அருந்தாமல் அவ்வைக்கே கொடுத்துவிடுவார். பெரிய கள் எனப்படும் நிறைய கள் கிடைத்தால் இருவரும் குடித்து மகிழ்வர்


அதியமான் இறந்த சமயம் அவ்வை பாடும் பாடலில் அவனுடன் கள் குடித்தது, அவன் தனக்கு சோற்றில் இருக்கும் கறித்துண்டுகளை எல்லாம் எடுத்துபோட்டு ஆதுரத்துடன் தன் தலையை தடவிக்கொடுத்தது எல்லாவற்றையும் சொல்லி "நரந்தம்பூ மணம் நாறும் தன் கையால் புலவு நாறும் என் தலையை அவன் தடவிக் கொடுப்பான். அந்தக் காலம் எல்லாம் மறைந்து விட்டது." என கதறி அழுகிறார் அவ்வை


காதலனை இழந்து, அதில் இருந்து விடுபட தமிழை கைக்கொண்டு, தந்தை ஸ்தானத்தில் மாமன்னர் ஒருவரை அடைந்து அவரது தூதுவர் அளவுக்கு உயர்ந்து, இறுதியில் அவரையும் இழந்த சோகவடிவான அவ்வையை சங்க இலக்கியத்தில் நாம் காண இயல்கிறது.

No comments:

Post a Comment

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...