Sunday, November 1, 2015

தமிழ்நாடு-60 | TamilNadu-60 | குமரிஎல்லைமீட்பு செங்கோட்டைஎல்லைமீட்பு, திருத்தணிஎல்லைமீட்பு


குமரிஎல்லைமீட்பு
செங்கோட்டைஎல்லைமீட்பு,
திருத்தணிஎல்லைமீட்பு



என்ன வேதனை; யாருக்கும் இதைக்குறித்து சிந்தனையில்லை. உப்புச்சப்பில்லாத விவாதங்கள் நடத்தும் தொலைக்காட்சிகள்கூட கண்டுகொள்ளவில்லை?
_____________________________________________________________ தமிழ்நாடு தெற்கே கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை, வடக்கே திருத்தணி என்ற எல்லைகள் அமைந்து இன்றோடு 60-ம் ஆண்டு உதயமாகிறது. நவம்பர் 1-1956அன்று இன்றைய எல்லைப்பகுதிகள் அமைந்த தமிழ்நாடாகும். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து, தமிழ்நாட்டோடு இணைந்ததும், நெல்லைமாவட்டம் செங்கோட்டைப் பகுதிகள் அமைய பல்வேறு தியாகங்கள்
செய்த தியாக சீலர்களை இன்றைக்கு நினைத்துப் பார்க்கவேண்டிய நாளாகும். குமரி மாவட்டம் இணைய பல போராட்டங்களை முன்னெடுத்த மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி, பி.சிதம்பரம் பிள்ளை, அப்பாவு, ஜீவா, நத்தானியல், குஞ்சன் நாடார், ரசாக், வேலாயுதப் பெருமாள், வி.தாஸ், ராமசுப்பையர் ஆகியோரை வரலாற்றில் மறக்கமுடியாது.

மார்த்தாண்டம் புதுக்கடையில், 11-08-1954 அன்று, தென் குமரிப் பகுதிகளை கேரளாவிடமிருந்து தமிழகத்தோடு இணைக்க நடந்த போராட்டத்தில் 11 தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டில் மடிந்தனர். 61 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்த குமரி மாவட்டத் தளபதிகளுக்கு வீரவணக்கம்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அதை ஒட்டியப்பகுதிகளைச் சேர்க்க கரையாளர் அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, அவர் திருவனந்தபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவரையும் எண்ணிப்பார்க்கவேண்டும் இந்த சமயத்தில். திருத்தணி மற்றும் வடக்கு எல்லைகள் மீட்புப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய ம.பொ.சி., கே.வினாயகம், மங்கள கிழார், சித்தூர் சி.வி.சீனிவாசன், வழக்கறிஞர் என்.அரங்கநாத முதலியார், திருவாலங்காடு திருமலை பிள்ளை, நா.அ.ரசீத், சடகோபாச்சாரியார், செங்கல்வராயன், திருமதி. சரசுவதி பாண்டுரங்கன், குருபாதம் போன்ற பல தியாகசீலர்கள் திருப்பதி சித்தூர், புத்தூர், திருகாளத்தி, பல்லவநேரி போன்ற வடக்குப்பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டுமென்று எண்ணற்றப் போராட்டங்கள் நடத்தி சிறைசென்றனர். இவர்களின் போராட்டங்களின் விளைவாகத்தான் தமிழகத்தின் வடக்கு எல்லையாக திருத்தணி கிடைத்தது.

இவ்வளவு தியாகங்கள் செய்து பெற்ற மண் இணைந்து 60ஆண்டுகளைக் கொண்டாடுவதைத் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. வேறு யாருக்கும் நினைவும் வரவில்லை. இதே ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை, “தமிழ்நாடு 50” என்று கடந்த 1-11-2006ல் மையிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், பல்வேறு தமிழகத் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் கலந்துகொள்ள நான் தனிமனிதனாக விழா எடுத்தேன். அதற்குப்பிறகுதான் பலர் விழித்துக்கொண்டு விழா எடுத்தார்கள். ஆனந்தவிகடனில் அன்றைக்கு நான் எழுதிய சிறப்புக்கட்டுரைக்குப் பிறகுதான் இந்த செய்தியே அப்போது வெளியே தெரியவந்தது.

அந்த விழாவில், தியாக சீலர்களான ம.பொ.சி, நேசமணி, பி.எஸ்.மணி, கரையாளர், தமிழ்நாடு என்று பெயர் வைக்க தன்னையே வருத்திக்கொண்டு மாண்ட சங்கரலிங்கனார் போன்றோருடைய படங்களும் திறந்து வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அமைந்த வரலாற்றை, “தமிழ்நாடு 50” என்ற நூலையும், நான் எழுதி அந்த விழாவில் வெளியிட்டேன்.

இப்படியான தமிழக வரலாற்றின் முக்கியமான நிகழ்வு யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையான விடயம். மானமுள்ள தமிழர்கள் இதை ஒருகணம் நினைத்துப்பாருங்கள். ஏற்கனவே கேரளாவில் நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு பகுதியில் சிலகிராமங்கள், கர்நாடகாவில் மாண்டியா, கொள்ளேகால், கோலார், ஆந்திரத்தில் திருப்பதி, சித்தூர், காளகத்தி போன்றவைகளை இழந்துள்ளோம். இழப்பும் வேதனைக்குரியதுதான்.
குறைந்தபட்சம் தமிழ்நாடு அமைந்த 60 ஆண்டு நிறைவில் சாதித்தவைகளையும், சாதிக்கத் தவறியவைகளைப் பற்றிய நிகழ்வுகளை நடத்தக்கூடத் தவறிவிட்டோம். பிறகு எப்படி காவிரி, முல்லைப்பெரியார், கச்சத்தீவு, சேதுக்கால்வாய், நதிநீர் சிக்கல்கள் என்ற தமிழகத்தின் பல உரிமைகளை மீட்டெடுக்கப் போகின்றோம். நம்முடைய அடையாளங்களைப் பற்றிப் பேசவே தயாரில்லாத நேரத்தில் பம்மாத்து வேலைகளைப் பார்த்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வருகிறோம்.

தினமும் அவருக்குத் தலைவலி, இவருக்குக் கால்வலி என்று விவாதிக்கும் தொலைக்காட்சிகள் கூட, தமிழ் நாடு 60-ஐக் கண்டுகொள்ளவில்லை. பத்திரிகைகளிலும் இதைக்குறித்தான ஈர்க்கக்கூடிய அளவில் செய்திகளும் வரவில்லை. இதேப்போல ஐ.நா. மன்றம் அமைந்த 70வது ஆண்டு (October 24th 1945. ) நிறைவை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தேன்.

நான் சொன்ன இந்தக் கருத்துகளைப் பரிசீலனை செய்யுங்கள். நியாயங்கள் இருந்தால் தமிழக மக்களே ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். இப்படி நமது உரிமைகளையும், நிகழ்வுகளையும் எண்ணிப்பார்க்காமல் இருந்தால் நாம் எப்படி விழிப்புணர்வு பெறுவோம்.

அறுபதாண்டு நிறைவு விழாவில், இதுகுறித்து உரிய ஆய்வுகளோடு கட்டுரைகளடங்கிய நூலும், ஆவணப்படமும் குசேலன் பானியில் வெளியிட்டு ஒரு கருத்தரங்கத்தை அடுத்த ஆண்டு 2016ல் இதே நாளில் நடத்த திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.  பொதிகை- பொருநை-கரிசல் சார்பில் இந்த வரலாற்று ஆவணங்கள் வெளியிடப்படும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன் .
01-11-2015.


தமிழநாடு 50 நூலில் இருந்து சில பகுதிகள்:
____________________________________________

ஆந்திராவிலிருந்த வடக்கு எல்லை மீட்புப்போராட்டம் : http://ksr1956blog.blogspot.in/2015/11/blog-post.html

கேரளாவிலிருந்த தெற்கு எல்லை மீட்புப்போராட்டம் :
http://ksr1956blog.blogspot.in/2015/08/kanyakumari-annexation.html

http://ksr1956blog.blogspot.in/2015/10/kanyakumari-annexation.html

http://ksr1956blog.blogspot.in/2014/09/blog-post.html


#KSR_Posts‬ ‪#KsRadhakrishnan#TamilNadu60

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...