Sunday, November 15, 2015

மழை வெள்ளமும் நீர் வீணடிப்பும் - Floods in Tamil Nadu - 1




மழை வெள்ளமும் நீர் வீணடிப்பும் - Floods in Tamil Nadu
______________________________________
எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம்; சென்னை மிதக்கின்றது; கடலூர் மக்கள் தவிக்கின்றனர்; தமிழகம் முழுவதும் நீர் மேலாண்மை சரியான விதத்தில் இல்லாததால் ஒட்டுமொத்த தமிழகமே வெள்ளத்தில் திண்டாடுகின்றது.

தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களான,
· காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம்,
· தாமிரபரணி -கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம், தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டம்,
· வெள்ளநீர் கால்வாய்த் திட்டமான தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோதையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைக்கும் திட்டம் ஆகிய நான்கு திட்டங்களை நிறைவேற்றியிருந்தாலே வெள்ளச் சேதாரங்களையும் தவிர்த்திருக்கலாம். வீணாகக்கடலுக்குப் போகும் நீரையும் சேமித்திருக்கலாம்.

கடந்த 12-11-2015முதல் தொடர்ந்து பருவமழைபொழிந்து வருகிறது. ஆண்டு மழைப்பொழிவான 44.செ.மீட்டரில் சராசரியாக 48சதவீதம் இப்போது பதிவாகியுள்ளது. வழக்கத்தைவிட தாமதமாகத் தொடங்கினாலும் இந்த இருபது நாட்களுக்குள், 35 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. மூன்றுநாட்கள் தொடர்மழையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 7.05டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது.

காவிரி உபரிநீர் மற்றும் மழை நீரைச் சேமிக்க, கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை கட்டியும், 1.05டி.எம்.சி தண்ணீரைத்தான் சேமிக்க முடிந்தது. மீதமுள்ள நீர் அணைத்தும் வீணாகக் கடலுக்குச் செல்கின்றது. திட்டங்களை ஒழுங்குபடுத்தி இந்நீரைச் சேமித்து வைத்திருந்தால் காவிரிநதி தீரத்தில் உள்ள தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதுக்கட்டளை மேட்டுவாய்க்கால் மட்டுமல்லாமல் மேலும் ஏழு தடுப்பணைகள் கட்டி வீணாகக் கடலுக்குச் சென்ற நீரை சேமித்திருக்க முடியும்.

காவிரியில் வரும் உபரி நீரைச்சேமித்து வைத்தால் தான் எதிர்காலத் தேவைகளுக்குப் பிரச்சனைகள் இல்லாமல் விவசாயப் பணிகளைச் செய்ய முடியும். காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புக்கு 5500கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டும், எந்த மேல் முயற்சிகளும் இல்லை.

அரியாறு, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, கிருதுமால் நதி மற்றும் குண்டாறு நதிகளை இணைக்கும்போது, காவிரியில் வரும் வெள்ளத்தையும், உபரி நீரையும் சேமிக்க முடியும். இதற்கு மத்திய அரசும் உதவி செய்யவில்லை, மாநில அரசும் இவ்வளவு தொகையா என்று கையை விரித்துவிட்டது.

இத்திட்டத்தைச் செயல்படுத்தி இருந்தால் குறைந்தபட்சம் 30ஆயிரம் கனஅடி நீரைச் சேமித்திருக்கலாம். இதனால் கரூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் வரையுள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்றிருக்கும். நீர்பெருக்கு சேமிக்கப்பட்டு, நாட்டில் வெள்ள இடர்களும் ஏற்பட்டிருக்காது.

திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட தாமிரபரணி –கருமேனியாறு - நம்பியாறு இணைப்பின் மூலம் 2.765டி.எம்.சி நீர், நான்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டது. இதனால் 42,012.86ஏக்கர் புதிய பாசனப்பரப்பு உட்பட, 56,931.84ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் கிடைக்கும். மேலும் இப்பகுதியில் குடிநீர் வசதியும், நிலத்தடி நீரும் உயர்வதால் ஏறக்குறைய 50கிராமங்களுக்குமேல் பயன்பெறும். இத்திட்டத்திற்காக 369கோடி மதிப்பீடு செய்யப்பட்டது.

இன்றைக்குத் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. குறுக்குத்துறை மிதக்கின்றது. இன்றைய நிலவரப்படி, தாமிரபரணியில் கடனாநதி, ராமநதி ஆகியவை கலக்கும் அரியநாயகிபுரம் அணைக்கட்டுப் பகுதியில் வினாடிக்கு 9ஆயிரம் கனஅடி நீர் வெள்ள நீராக வெளியேறுகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் 4000கன அடி நீர் வீணாகச் சென்று புன்னக்காயல் கழிமுகத்தில் வங்கக்கடலில் கலக்கின்றது.

நிலைமைகள் இப்படி இருக்க, பாபநாசம் அணையை ஏன் இப்போது திறக்க வேண்டும். விவசாயத்திற்குத் தண்ணீர் கேட்டார்களா? வெள்ள அபாயமும் இல்லையே? இச்சமயத்தில் அணையைத் திறக்கவேண்டிய காரணம் என்ன? அணையைத் திறந்து தண்ணீரை வீணடிப்பதன் நோக்கமென்ன?

தாமிரபரணி- வைகை- காவிரி- தென்பெண்ணை- பாலாறு- போன்ற நதி தீரங்களில் வெள்ளக்காடாக வேடிக்கைதான் பார்க்கின்றோமே ஒழிய அந்த வெள்ளநீரைச் சேமிக்க நம்மால் முடியவில்லையே? பண்டைக்காலத்தில் நமது முன்னோர்கள் திட்டமிட்டு எப்படி நீரைச் சேமித்தார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?

நதிகளை தேசியமயமாக்கி, கங்கை-காவிரி-வைகை-தாமிரபரணி- குமரிமாவட்ட நெய்யாற்றுடன் இணைக்க வேண்டுமென்ற என்னுடைய உச்சநீதிமன்ற வழக்கில் எனது வாதங்களை எடுத்து வைக்கும்போது, மத்திய அரசு வழக்கறிஞர் “தமிழ்நாடு அரசாங்கம் மழை வெள்ள காலத்தில் வீணாகக் கடலுக்குச் செல்லும் தண்ணீரைச் சேமித்து வைக்கலாம். அதற்கான திட்டங்களை அவர்கள் திட்டமிட்டு வகுக்கவில்லை” என்று சுட்டிக்காட்டினார். அவருடைய வாதம் உண்மையாகிவிட்டதோ என்ற நிலை இன்றைக்கு கண்முன்னே தெரிகின்றது.

கேன் நதியின் உபரி நீர் பேத்வா நதியுடன் இணைக்கப்பட்டு மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயனடைகின்றன. ஆந்திரத்தில் கோதாவரி கிருஷ்ணா நதிகளை இணைத்தது மட்டுமில்லாமல், கிருஷ்ணாநதி-பென்னாறு இணைக்கப்பட்டால் 6000கன அடி தண்ணீர் கடலுக்குச் செல்லாமல் சேமிக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெள்ளநீரை சேமித்து வைக்க மேற்சொன்ன நான்கு இணைப்புத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி இருந்தால் இன்றைக்கு மழைவெள்ளத்தால் ஏற்பட்ட தவிப்புகளையும், துயரங்களையும் மக்கள் சந்திக்கவேண்டிய அவசியம் எழுந்திருக்காது.

நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறு ஊரணிகள், குட்டைகள் எனப் பல வகையான நீர் நிலைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, அவை கவனமாக மேலாண்மை செய்து பாதுகாக்கப்பட்டது. சோழர்கள் கட்டிய வீரநாராயண ஏரி, கல்லணை என்பவற்றையெல்லாம் அக்காலத்தில் நிர்மாணித்தார்கள். 

இந்த வீரநாராயணன் ஏரி பராந்தகச் சோழனுடைய ஆட்சிகாலத்தில் அவர்து புதல்வர் ராஜாதித்தனைத் தன் படைப்பரிவாரங்களோடு எதிரிகளைத் தாக்கச் சென்றனர். அப்படைகள் திருமுனைப்பாடி என்ற இடத்தில் சில ஆண்டுகள் தங்கி இருந்தன. அச்சமயத்தில் வேலைகள் இல்லாமல் இருக்கும் தன் படைவீரர்களுக்கு கொடுத்த பணியில் உருவானதுதான் இந்த வீரநாராயணம் ஏரி. 

மதுரையிலுள்ள வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள பொற்றாமரை குளம் என தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குளங்கள், தெப்பங்கள் போன்றவை எப்பொழுதும் நீர் நிறைந்து இருப்பவை. அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்தை கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழினம் அறிந்திருக்கிறது என்பதையே இவையெல்லாம் காட்டுகிறது.

இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இன்றைக்கு 39,202ஆக குறைந்து விட்டது. இதில் 20,040குளங்கள் தமிழகப் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  ஏரி மாவட்டமான ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்துவிட்டன. 

சென்னை போரூர் ஏரியின் பரப்பு 800ஏக்கர்களாக இருந்த்தை இன்றைக்கு 330ஏக்கராகச் சுருங்கிவிட்டது. சென்னை நகரில் மட்டும் 36ஏரிகள் ஒருகாலத்தில் இருந்தது. புறநகர் பகுதிகளில் தற்போது இருக்கும் 15 ஏரிகளின் மொத்தப் பரப்பளவு 2416.51ஹெக்டேர். அதில் 589.02 ஹெக்டேர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் 37 கண்மாய்களில் 30கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாக  “தன்னுடைய கிணற்றைக் காணவில்லை” என்று சொல்லும் கதையாகத்தான் நிலைகள் உள்ளன. இதேப்போலத்தான் மற்ற நகரங்களிலும் ஆக்கிரமிப்புக் காரணங்களால் தமிழக நகரங்கள் மழைக்காலங்களில் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன.

இந்தியாவிலேயே குளங்கள் மற்றும் ஏரிப் பாசனம் தமிழகத்தில் தான் அதிகம். வடக்கே பள்ளிப்பட்டிலிருந்து, தெற்கே பத்மநாபபுரம் வரை இருந்த பல நீர்நிலைகள் இன்றைக்கு சுயநலவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இருக்கின்ற நீர் நிலைகளையாவது பாதுகாக்க வேண்டாமா என்பதுதான் நமது வேதனை.
பழமை என்று நினைக்காமல் காலம் காலமாக தமிழகத்தில் மரபு ரீதியாக அமைந்த நீர்ப்பாசன, நீர் மேலாண்மை பற்றி அறிந்து, நவீன நடைமுறைகளோடு செயல் திட்டங்களை வகுத்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
ஆறுகளில் சமூக விரோதிகள் அள்ளும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். அள்ளும் மணலில் 80 சதவீதம் வேறு மாநிலங்களுக்கு, சுயநலவாதிகள் விற்று விடுகின்ற வேதனையான நிலைப்பாடு தற்போது உள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் தான் தமிழகத்திற்கு பயன்படுகிறது. அப்பாவி விவசாயி, விவசாய நிலத்திற்கு மாட்டு வண்டியில், தற்போது வண்டல் எடுக்க முடியவில்லை. அதற்கு சட்டம் தடை போடுகின்றது. ஆனால், மணல் கொள்ளையர்கள் லாரி லாரியாக அள்ள இன்றைக்கு சட்டம் வழி செய்கின்றது.அதுவும் கொள்ளை லாபத்தில் மணலை விற்கின்றனர்.

நதிகளின் நீரை மாசுபடுத்தும் வகையில் தொழிற்சாலை கழிவுகள் கலந்து நதிநீர் நஞ்சுத்தன்மை அடைந்து பயன்பாட்டுக்கே உதவாத வகையிலும் சில ஆதிக்க சக்திகள் ஆட்டிப்படைக்கின்றன. 

ஏரிகள், வனங்கள் ஆகியவை அவசியம் பாதுகாக்கப்படவேண்டும் என்று இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51ஏ வரையறுக்கப்பட்டும் அதை கவனிக்க மறுக்கின்றோம்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருந்து வரும் காட்டாற்று வெள்ளங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, கோவை மாவட்டம் வரை ஆறுகள் ஓடைகள் ஏரிகள் குளங்கள் ஊரணிகள் என்று சங்கிலித் தொடராக இருந்து தண்ணீரைப் பாதுகாத்தனர். இதனால் வெள்ளங்கள் தவிர்க்கப்பட்டன.

குறிப்பாக, திற்பரப்பு, களக்காடு, பாபநாசம், மணிமுத்தாறு, குற்றாலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்பம் பள்ளத்தாக்கு, பழனி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் அருவியாகக் கொட்டும் நீரை பண்டையகாலத்தில் நம் முன்னோர்கள் நீர் நிலைகளை வெட்டி பாதுகாத்தனர். ஒரு காலத்தில், ஆயக்கட்டு விவசாயிகள் கூட்டுறவோடு, தங்கள் கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை தூர் வாரியதுண்டு. விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதால் குளங்களும், ஏரிகளும் தூர் வாறப்பட்டு நீரின் கொள்ளளவைக் கூட்டி, தேவையற்ற தாவரங்கள் அழிக்கப்பட்டு, தண்ணீரின் அளவு நீர் நிலைகளில் அதிகமாகும். வண்டலும் விவசாயத்திற்கு பயன்படும். இதற்கு அரசின் தடைகள் உள்ளது.

கடலூர் மாவட்டம் வாலாஜா ஏரியை அவ்வட்டார விவசாயிகளே தூர்வாரி மீட்டெடுத்துள்ளனர். நெய்வேலி என்.எல்.சி நிறுவனமும் விவசாயிகளோடு துணை நின்று 50ஆண்டுகளுக்குப் பிறகு வாலாஜா ஏரி உயிர்பெற உழைத்த விவசாயிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.

ஆங்கிலேயர் காலத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் அதன்பின் இதுவரை முழுமையாக தூர்வாரப்படவில்லை. அப்படியே தூர்வாரினாலும் அதில் ஊழலால் சரியான பணிகள் நடப்பதில்லை.

தமிழகத்திற்கு எதிர்காலத்தில் 30லிருந்து 50சதவிகிதம் நீர்பற்றாக்குறை ஏற்படும் கணித்துள்ளனர். எனவே, விவசாயத்திற்கும் தண்ணீருக்கும் தனியாக ஒரு பட்ஜெட்டையே தமிழக அரசு திட்டமிட்டு தயாரிக்க வேண்டும்.

இப்படி நிலைமைகள் இருக்கும்போது, வறட்சியில் மழை இல்லை; மழைவெள்ளத்தில் திக்குத் தெரியாமல் தவிப்பதும் நமது நிலைமையாகிவிட்டது. இதைத் திட்டமிட்டு நீர்மேலாண்மை செய்தால் அண்டை மாநிலங்களை எதிர்பார்க்காமல் நமக்குத் தேவையான நீரை நாமே பெறலாம்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-11-2015. 
#KsRadhakrishnan #KSR_Posts #TamilnaduFloods #WatermanagementinTamilNadu 



             

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...