தென் மாவட்ட மக்களின் கனவுத் திட்டம் எனக் கருதப்படும் கன்னியாகுமரி-மதுரை வரையிலான இரட்டை ரயில் பாதைத் திட்டமானது கனவாகவே நீண்டு வருவது கவலையளிக்கிறது.
தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு தமிழகத்தில் இருந்து அதிக வருவாயை அள்ளித் தருவது, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான பிரதான வழித்தடம் மட்டுமே.
இந்த வழித்தடத்தில்தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் என பிரதான மாவட்டங்களை இணைக்கும் இந்த வழித்தடத்தில் சென்றுதான் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு ரயில் சேவையைப் பெற முடியும்.
இத்தகைய சிறப்பு மிக்க இந்த வழித்தடத்தை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து ஆமை வேகத்திலேயே பணிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில் பாதைத் திட்டம் என்பது ஆண்டுதோறும் வெளியிடப்படும் அறிவிப்பாகவே உள்ளது. பணிகள் முடிந்தபாடில்லை.
கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வரையில் சுமார் 738 கி.மீ. தொலைவுக்கு இந்த இரட்டை ரயில் பாதைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. இதில், சென்னை - செங்கல்பட்டு, திண்டுக்கல்-மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது. செங்கல்பட்டு - விழுப்புரம் பாதையும் தயாராக உள்ளது. விழுப்புரம்- திண்டுக்கல் இடையிலான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மதுரை - கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில் பாதைப் பணிகள் மட்டும் தொடங்கப்படவில்லை.
2012-13-ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்துக்கு ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரி - மதுரை இடையே இருவழிப் பாதை அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆய்வு நடத்தியது. இதன்படி, 245 கி.மீ. தொலைவுக்கு சர்வே பணிகள் முடிந்து, திட்ட மதிப்பீடு ரூ. 2,100 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்துக்காக இறுதிக் கட்ட ஆய்வு நடத்த நிதி ஒதுக்கப்பட்டது.
இப்போது, இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகள் முடிந்து, புது தில்லியில் உள்ள ரயில்வே நிதிக் குழுவிடம் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ஒப்புதலும் அளிக்கப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை.
கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு இருவழிப் பாதைப் பணிகள் நிறைவு பெற்றால், கன்னியாகுமரியில் இருந்து 2 மணி நேரத்துக்குள் மதுரையை வந்தடையலாம். சென்னைக்கு 8 மணி நேரத்தில் செல்ல முடியும்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக வட மாநில நகரங்களுக்கு புதிய ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. மேலும், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, விழுப்புரம் போன்ற இடங்களிலிருந்து வட மாநில நகரங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து ரயில்களையும் கன்னியாகுமரி வரை நீட்டிப்புச் செய்ய இயலும். கேரள மாநிலத்தைப் போன்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என்ற அடிப்படையில், அனைத்துத் தடங்களிலும் தமிழகத்திலும் இயக்கும் வாய்ப்புகள் உருவாகும். ராஜதானி, சதாப்தி, ஜனசதாப்தி, டபுள்டெக்கர், கரீப் ரதம் போன்ற ரயில்களை தென் மாவட்டங்களுக்கும் அறிவிக்க பெரிதும் உதவியாக அமையும். சென்னைக்கு கூடுதல் புதிய ரயில்கள் அறிவிக்கப்படும். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். சரக்குப் போக்குவரத்து எளிதாகி, தொழில் வளர்ச்சியும் மேம்படும். இவ்வளவு பயன்களைத் தரும் இந்தத் திட்டப் பணிகள் இன்னும் தொய்வில் இருப்பது அனைத்துத் தரப்பினரையும் கவலையடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கச் செயலர் பி. எட்வர்டு ஜெனி கூறியதாவது:
தென் தமிழகத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கி வந்த ரயில் பாதைகளை அகல ரயில் பாதையாக மாற்றவே 100 ஆண்டுகளைக் கடக்க நேரிட்டது. இப்போது, மின்வழிப் பாதை முடிந்து இரட்டை ரயில் பாதை என்ற கோரிக்கை வலுத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆய்வுகள் முடிந்து ரயில்வே நிதிக் குழுவின் அனுமதிக்காக கோப்புகள் காத்திருக்கின்றன. உடனடியாக அனுமதியளித்தாலும் ஒப்பந்தப்புள்ளி கோரி, நிலம் கையகப்படுத்தி பணிகளைத் தொடங்கி முடிக்கவே 10 ஆண்டுகளாகும். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே இந்தத் திட்டத்துக்கான செலவுத் தொகை உயர்ந்துவிடும். மீண்டும் கூடுதல் நிதிக்காகப் போராட வேண்டிய நிலை வரும். எனவே, இந்தத் திட்டத்துக்கு ஒரே தவணையாக நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்றார் அவர்.
மதுரைக் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ். சந்திரமௌலி கூறியதாவது:
இரட்டை ரயில் பாதைத் திட்டத்தில் திண்டுக்கல் வரையிலான பணிகள் மட்டுமே விரைவு பெற்றுள்ளன. கன்னியாகுமரி - மதுரை திட்டப் பணிகள் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. அடுத்த ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. எனவே, வருகிற ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கலின் போதாவது தென் மாவட்ட மக்களுக்கு விடிவு பிறக்குமோ என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
தூத்துக்குடி - மதுரை இரட்டைப் பாதை...
கன்னியாகுமரி - மதுரை போன்று பல ஆண்டுகளாக தூத்துக்குடி-மதுரை இரட்டை ரயில் பாதையும் நிலுவையில் இருந்தது. ஆனால், கடந்த பிப்ரவரி மாத ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. மதுரை - மணியாச்சி, மணியாச்சி, தூத்துக்குடி, மணியாச்சி - நாகர்கோவில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் என 4 கட்டங்களாக பணிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்போது, பணிகளைச் செயல்படுவதற்காக இறுதிக் கட்ட ஆய்வு நடைபெறுகிறது. இதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 1 லட்சம் என்ற அடிப்படையில் ரூ. 3.35 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment