இந்த ஊர்களுக்கெல்லாம் கடந்த இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு வந்ததில் சில நினைவுகள்.
1.கழுகுமலை
_____________________
கழுகுமலை வெட்டுவான் கோயில் மேலும் புனரமைக்க மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்திலிருந்து நிதிகளைப் பெற பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் சகோதரர் மோகன்ராஜூலு அவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றார்கள். அவரிடம் இதுகுறித்தான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கள் கிழமை (09-11-2015) கழுகுமலைக்குச் சென்றபோது சமண சமயப்பள்ளிகள் கி.பி750-850வரை நடந்ததாக வரலாற்றுச் செய்திகள். இத்தகைய பள்ளிகள் மதுரை, அருப்புக்கோட்டை, நாகர்கோவிலிலும் இயங்கியதாகவும், கழுகுமலைப் பள்ளியுடன் நெருங்கிய தொடர்புகளுடன் இருந்து, ஒரு பள்ளி மாணவர்கள் மற்றொரு பள்ளிக்குச் சென்று படிப்பது வாடிக்கையாக இருந்ததாகவும் செய்திகள். ஆண் பெண் ஆசிரியர்கள் அங்கு பணியில் இருந்தனர். கழுகுமலை சமணப்பள்ளி பிரதானமானதாக இருந்தது.
கழுகுமலை மலையில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதும் முக்கிய துக்கமான செய்தியாகும்.
விரைவில் மத்திய அரசின் நிதி வெட்டுவான் கோயிலைப் புனரமைக்கும் பணிகளுக்குக் கிடைக்குமென்று நம்புகின்றோம்.
2. வீரிருப்பு
_____________________
சங்கரன்கோவிலை அடுத்த 4 கி.மீ தூரத்தில் உள்ள வீரிருப்பில் கட்டப்பட்டுள்ள உலக சமாதானத்திற்கான புத்தர் கோவில். மதம் மொழி, இனம், நாடு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, சமாதானம் ஒன்றையே கொள்கையாக கொண்டு இயங்குகிறது. இங்கு புத்தருடைய காலடி பட்டு போதனைகள் நடந்ததாகவும் சில செய்திகள். அவருடைய அஸ்தி இந்த மண்ணில் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை. புத்தர் இங்கும் கழுகுமலைக்கும் வந்ததாகவும் செவிவழியாகச் செய்திகள்.
இப்படிப்பட்ட இடம் நாம் பிறந்த மண்ணிலே இருக்கின்றது என்பது பெருமையும் கூட. இதைப்பற்றி இந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் இன்னும் அறியாமல் இருப்பதுதான் வியப்பாக உள்ளது. இங்கு அமைந்துள்ள 125அடி உயரமுள்ள அமைதி ஸ்தூபி சாஞ்சியைப் போல் உள்ளே போகமுடியாத ஸ்தூபியாகும். இங்குள்ள அரசமரம் தான் போதிமரம். இது புத்தர் பிறந்த லும்பினியிலிருந்து கொண்டுவரப்பட்டது.
3. அய்யனார் அருவி
_____________________
மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் இராஜபாளையம் அருகில் அய்யனார் அருவி அமைந்துள்ளது. இங்கு அய்யனார் கோவில் ஒன்றும் உள்ளது. இவ்விடம் மலையேறும் விளையாட்டுகளுக்கு தகுந்தது. செல்லும் வழியில் உள்ள அணையிலிருந்து நகரின் குடிநீர்த்தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
அடர்ந்த காட்டின் இயற்கை அழகும், பதினைந்து அடி உயரத்திலிருந்து விழும் சிறு அருவியும் இதை புகழப்பெற்ற சுற்றுலாத்தாலமாக மாற்றுகிறது.
ஜெமினி கணேசன், நிர்மலா நடித்த சக்கரம் என்ற திரைப்படம் எடுக்கும்பொழுது 1970 காலகட்டங்களில் படப்பிடிப்பைப் பார்க்க
இந்த அருவிக்குச் சென்றதுண்டு. பச்சைப்பசேல் என்று நடுவில் நீர்வீழ்ச்சியோடு அழகுற காட்சியளிக்கின்ற அருவிதான் அய்யனார் அருவி. அய்யனார் கோவிலில் இருந்து சபரிமலை
அய்யப்பன் கோயிலும் ஒரே நேர்கோட்டில் பூகோள ரீதியாக அமைந்துள்ளது. பக்கத்தில் சதுரகிரி மலை, தானிப்பாறை அருவி அமைந்துள்ளது. சதம்பு தரையில் மேல் பக்கம் போகும் பாதையில் அம்பு விழும் தூரத்தில் யானை படுத்திருப்பதை போல் ஒரு பெரிய பாறை இருக்கும் அதன் தென்புறமாக அம்பு விழும் தூரத்தில் சரளை தரை இருக்கிறது.
கன்னிமார் கோவில், மகாலிங்கம் சந்நிதி , குளிப்பட்டி பொய்கை, எல்லை குட்டம், பால்பட்டை மரம், திருக்கை பாறை, யாகோபு சித்தர் ஆசிரமம், கடுவெளி சித்தர் குகை, கருங்கானல், தேடிக் கானல், அழுக்காணி சித்தர் குகை, சிவவாக்கியரின் குகை ஆகியவை இம்மலைப்பகுதிகளில் காண்பதற்குரிய இடங்கள்.
இப்படிப்பட்ட இயற்கைச் சூழலை மத்திய மாநில அரசுகள் இன்னும் சிறப்பாக கவனிக்கவேண்டும். பல்வேறு திட்டங்களை இங்கு நடமுறைப்படுத்தவேண்டும்.
4.சிவகாசி
_____________________
கடந்த நூற்றாண்டில் சிவகாசி, கழுகுமலை, கமுதி கலவரங்கள் பல சேதங்களை ஏற்படுத்தி பெரும் இழப்புகளுக்கு உள்ளானது வரலாற்றில் என்றைக்கும் மறக்க முடியாத செய்திகள். பூமணி அவருடைய அஞ்ஞாடி நாவலில் இதுகுறித்தான தரவுகள் உள்ளன. கழுகுமலையில் அருட்தந்தை கௌசானல் அவருடைய பணி மாபெரும் பணியாகும்.
அன்றைக்குப் பாதிக்கபட்டவர்களுக்குத் துயர் துடைக்க ஆங்கிலேய அரசுகூட அக்கறையோடு நடந்துகொள்ளவில்லை. இந்த இடங்களில் நடந்த கலவரங்கள் குறித்து ஆய்வுகளும், பதிவுகளும் மேலும் செய்யவேண்டும்.
5. வள்ளியூர்
_____________________
நெல்லை மாவட்டம் வள்ளியூரின் அடையாளமாகத் திகழும் குன்றுகள் தான் இடிந்தகரை , கூத்தன்குழி மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து கரை திரும்புவதற்கு மிகச்சிறந்த வழிகாட்டிகளாக காலாகாலமாய் இருந்து வருகின்றது. மீனவ மக்கள் இம்மலைகளுக்கு இரணமலை, கரைமரி என பெயரிட்டு அழைக்கின்றனர். தொழில்நுட்ப அடையாளங்கள் இல்லாத காலத்தில் அடையாளங்களாக இருந்த பெயர்கள் தற்போது அர்த்தமில்லாமல் போகிறது என்பதை பதிவுசெய்ய வேண்டும்.
6. மணப்பாடு
_____________________
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரை ஒட்டிய குகையில் புனித சவேரியர் தவம் இருந்தார். திருச்செந்தூரில் அமைந்துள்ள நாழிக்கிணறு போல இந்த குகைக்குள் ஒரு கிணறு அமைந்துள்ளது. கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தாலும் அந்த கிணற்றின் நீர் தேங்காய் நீர் போல தனிச்சுவையோடு உள்ளது.
புனித சவேரியர் இப்பகுதியில் மதப்பணி ஆற்றும் போது இங்குள்ள மக்களைப்போல வேட்டியைக் கட்டிக்கொண்டு, காலில் செருப்பு இல்லாமல், மேல்சட்டையும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்தார். அதற்குமுன் காலணிகளோடு திரிந்த அவருக்கு செருப்பில்லாமல் நடக்கும்போது முட்கள் தைத்து ரத்தவெளிவந்து காலில் புண்களோடு தன்னுடைய பணிக்காக நடந்து சென்றதும் உண்டு
மதங்கள் வேறுவேறாக இருக்கலாம்; பெரியாரின் கொள்கையின் படி மதம் மறுப்புக் கொள்கைகள் இருக்கலாம்; ஆனால், புனித சவேரியார் நல்லிணக்கத்தோடும், மனிதநேயத்தோடும் வேறு தேசத்திலிருந்து வந்தாலும் தமிழ் மண்ணில் நல்லொழுக்கத்தை போதித்த இடம் தான் மணப்பாடு. அந்த மணப்பாடு குகையை தொன்மை வாய்ந்த இடமாகப் பாதுகாக்கவேண்டிய அவசியம் உள்ளது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-11-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #கழுகுமலை #வீரிருப்பு #சிவகாசி #அய்யனார்கோவில்அருவி #வள்ளியூர் #மணப்பாடு
No comments:
Post a Comment