சென்னை நகரில் மழைக் கொட்டித் தீர்த்துவிட்டது. இன்றைக்கு நெல்லையிலும் கடும் மழை.
கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்ட பாலாறு கரைபுரண்டு ஓடுகிறது. கடலூர் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளிலிருந்து 35டி.எம்.சிக்கு மேலாக தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்றுகொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரி இன்று மாலை (19-11-2015) கொள்ளளவை மீறியதால் திறந்துவிடப்பட்டுள்ளது. சாலிகிராமம், சூளைமேடு, வேளச்சேரி மற்றும் வடசென்னை பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளன. படகுகளில் மக்களை மீட்டு மேடான பகுதிகளுக்கு இடம்பெயர்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் இயல்புவாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 178கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை நகரில் மட்டும் 800 இடங்களில் கடுமையாக மழைநீர் தேங்கியுள்ளது.
கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, ஐம்பதிற்கும் மேற்பட்டோர் மரணமும் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இப்போது பெய்த மழைநீர்130டி.எம்.சிக்கு மேலாக கடலில் வீணாகக் கலந்துள்ளது. அவற்றைத் தேக்கிைக்கும் கட்டுமானத்தோடு நம் நீர்நிலைகள் இல்லை.
இதைக்குறித்து கடந்த 15-11-2015 அன்றைய தினம் விவரமான பதிவு எழுதியிருந்தேன்.
( http://ksr1956blog.blogspot.in/2015/11/floods-in-tamil-nadu.html )
130டி.எம்.சி நீரைக் கடலில் வீணடித்துள்ளது பற்றி இன்னும் பலருக்குத் தெரியவில்லை. இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு ஒரு வருடத்திற்குத் தரவேண்டியது 192டி.எம்.சி நீர் என்று தெரிவித்துள்ள நிலையில் கிட்டத்தட்ட அதில் 75சதவீதம் அளவுக்கு மழை வெள்ளநீரை வீணடித்திருக்கிறோம்.
மிகநுட்பமாகக் கவனித்தால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களான கோலா குளிர்பான நிறுவனங்கள் முன்வைக்கும் முக்கிய காரணமே இந்த “நீர் வீணாகக் கடலில் கலப்பதைத்தான்”. ஆண்டுக்கு இவ்வளவு நீர் வீணாக கடலில் கலக்கிறது என்று கணக்கு காட்டி அவற்றை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம் என்றே அவர்கள் வலைவிரிக்கிறார்கள்.
ஒருபக்கம் விவசாய பாசானத்திற்கும், குடிநீருக்கும் நமக்குத் தட்டுப்பாடு. அரசுகளும் கார்பரேட் நிறுவனங்களும் கைகோர்த்துக்கொண்டு மக்களை வாட்டி எடுக்கின்றார்கள். என்ன ஏமாற்றுவேலை பாருங்கள்.
இன்றைக்கு மாலை நெல்லையிலிருந்து கடுமையான மழை பெய்துகொண்டிருக்கின்றது என்று செய்தி வந்தது. நன்றாக நினைவு இருக்கின்றது. 1992கட்டத்தில் மழைப்பொழிவில் குற்றாலம், பாபநாசம், அம்பாசமுத்திரம் பகுதிகள் எல்லாம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. மலைப்பகுதியிலிருந்து பாம்புகளின் முட்டைகள் எல்லாம் ஆற்றுவெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்து இந்த வட்டாரத்தில் மலைப்பாம்புகளின் நடமாட்டம் பெருகியது.
அப்போது திருநெல்வேலி நகராட்சியாக இருந்தது. இந்த நகராட்சி அலுவலகத்தில் மலைப்பாம்புக்குட்டிகள் பிடிபடும் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. இப்படி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கடும் மழையால் தமிழகம் சொல்லமுடியாத துயர்களை அனுபவித்துக்கொண்டு வருகின்றது. இதற்கு என்ன காரணம்?
நம்முடைய நீர்நிலைகளையும், காடுகளையும் அழித்துவிட்டோம். இயற்கையோடு மோதுகின்றோம். முன்னர் இருந்த குளங்கள், ஏரிகள் காணாமல் போய்விட்டன. இப்படி தமிழகத்தில் கடும் மழையாலும், வெள்ளத்தாலும் ஏற்பட்ட பாதிப்புகளைப் பெரும் பட்டியலே போடலாம்.
இனி நாம் என்ன செய்யவேண்டும்? சென்னை நகரத்தில் இருக்கின்ற இடங்களில் இயற்கையாகத் தண்ணீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து புதிய நீர் நிலைகளை அமைக்கவேண்டும். ஏற்கனவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குக் கையகப் படுத்திய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பொறுத்தமான இடங்களில் நீர்நிலைகள் வெட்டிதான் தீரவேண்டும். பழைய நீர் நிலைகளைத் தூர்வாரப்பட வேண்டும்.
குடிநீர் வழங்குகின்ற குழாய்களை எல்லாம் கழிவு நீர் கலக்காதவாறு, திட்டமிட்டு குடிநீர் குழாய்கள் சரிசெய்யவேண்டும். காடுகளிலும் மலைகளிலும் உள்ள மரங்களை வெட்டக்கூடாது. நதி தீரங்களில் மணல்களை அள்ளி இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய அனுமதிக்கக்கூடாது.
மழை நீர் சேகரிப்பிலும் கவனத்தைச் செலுத்தவேண்டும். சென்னை மாநகரில் இருந்த பல கிணறுகள் மூடப்பட்டுவிட்டன. இயற்கையாகவே மழைநீரைச் சேகரிக்க கிணறுகள் முக்கிய காரணியாகப் பயன்பட்டுவந்தன. இன்றைக்கு அவற்றின் பயன்பாடுகள் வழக்கொழிந்துவிட்டன. அவற்றை புனரமைக்கத் திட்டமிடவேண்டும்.
சீனா போன்ற நாடுகளில் வீணாகும் வெள்ள நீரை நிலத்தடியில் சேமித்துவைக்க நிலத்தடி நீர்த்தேக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். நீண்டகால கட்டுமானப் பணியில் முடிவடைந்த இத்திட்டத்தைக்கொண்டு வறட்சிகாலங்களில் சேமித்த நீரைப் பயன்படுத்துகிறார்கள்.
ரஷ்யாவில் “கேரிகம் கால்வாய்” மூலமாக கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரைச் சேமித்துப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த நடவடிக்கைகளையும், சரியான நீர்மேலாண்மைத் திட்டங்களையும் மேற்கொண்டால் தான் பெருமழையினையும், வெள்ளத்தையும் எதிர்கொள்ளமுடியும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-11-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #TamilnaduFloods #WatermanagementinTamilNadu
No comments:
Post a Comment