Thursday, November 19, 2015

பழைய புகை வண்டிகளும் சில நினைவுகளும்... - Steam Locomotive Trains



பழைய புகை வண்டிகளும் சில நினைவுகளும்... - Steam Locomotive Trains ________________________________________________ அந்தக்காலத்துப் புகைவண்டி, இதில் திருநெல்வேலியில் முதல்நாள் மாலை மூன்று நாலு மணிக்கு ஏறினால் மறுநாள் காலை பத்து பதினோருமணிக்கு சென்னைக்கு வந்துசேரும். அப்பொழுது ஏ.சி வகுப்புகளெல்லாம் கிடையாது. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாவது வகுப்பு என்றும் பதிவு செய்யாத பொதுப்பெட்டியும் இருக்கும். இதில் டிக்கெட் வாங்கிக்கொண்டு ஏறிக்கொள்ளலாம். பொதுப்பெட்டியில் ஜன நெருக்கடி முட்டிமோதும். நிலக்கரியில் இயக்கும் இந்த நீராவி எஞ்சின் ரயிலில் ஏறினால் உடுத்தின உடைகள் மட்டுமில்லாமல், உடலே புகைக்கரியாக அப்பியிருக்கும். நன்கு குளித்தால்தான் இந்த புகைக்கரியை உடலில் இருந்து அப்புறப்படுத்தமுடியும். இப்படியான பயணங்கள் அப்போது. 1964 தனுஷ்கோடி புயலுக்குமுன்னால், ராமேஸ்வரம் துரித வண்டியில் இலங்கை தலைமன்னார் வரை புகைவண்டி டிக்கெட்டை எழும்பூர் ரயில்வே நிலையத்தில் எடுத்துக்கொண்டு இலங்கை வரை பயணிக்கமுடியும். இரயில்வே கால அட்டவணை தமிழிலும், ஆங்கிலத்திலும் கனத்த புஸ்தகமாக மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு இருக்கும். ஒரு சிலர் அதை விலைகொடுத்துவாங்கி கடலை விற்பவர்களிடம் வித்துவிட்டு அந்தக்காசுக்கு கொஞ்சம் கடலையும், காசும் பெற்றுக்கொள்வதும் உண்டு. அக்காலத்தில் வழங்கப்பட்ட ரயில்வே சீசன் டிக்கெட்டில் பயணிப்பது, அரசு ஊழியர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், மற்ற பயணிகளுக்கும் உள்ளத்தைக் கவர்கின்ற பயணமாக இருக்கும். நெல்லைக் கல்லூரியில் படிக்கும்போது, அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மாதேவி போன்ற பகுதிகளிலிருந்தும், கிழக்கே திருச்செந்தூரிலிருந்து குரும்பூர், ஆழ்வார் திருநகரி, செய்துங்கநல்லூர் பகுதிகளிலிருந்து கல்லூரி மாணவர்கள் இந்த சீசன் டிக்கெட்டை வைத்துக்கொண்டு ரயில் பயணத்தில் தங்கள் கல்லூரி வாழ்க்கையை அனுபவித்துச் சிலாகித்ததும் உண்டு. பல கல்லூரி மாணவர்கள் தங்கள் சக மாணவிகளோடு ரயில் பயணங்களிலே காதல் வசப்பட்டு திருமணமும் நடந்ததுண்டு. அவர்களுக்காக சாட்சியாக இருந்ததினாலே பல பாதிப்புகளையும் சந்தித்ததுண்டு. இந்த சம்பவங்களையெல்லாம் வைத்துதான், 1980களில் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவர்கள் இரயிலில் பயணிக்கும் கதையாக “ஒருதலை ராகம்” திரைப்படமாக வந்தது. டி.ராஜேந்தர் இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். முதன்முதலாக 1885ம் பாரீஸில் கிராண்ட் கபே என்ற இடத்தில் டிசம்பர் 28ம்தேதி "புகை வண்டியின் வருகை', என்கிற குறும்படங்கள் லூமியர் சகோதரர்களால் காட்டப்பட்டது. இந்தபடம் 1897ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கிற விக்டோரியா ஹாலில் காட்டப்பட்டது. அப்போது மக்கள் பயந்தடித்து ஓடினார்கள். காரணம், இதுவரை நேரில் பார்த்துக்கொண்டிருந்த ரயிலை சினிமாத்திரையில் பார்த்ததும், சென்ட்ரல் ஸ்டேசனிலிருந்த ரயில்தான் சுவரை பொத்துக்கொண்டு வந்துவிட்டதோ என்று பயம். கல்கி அவர்கள் அன்றைய மாயவரம் (இன்றைய மயிலாடுதுறை) ரயில் நிலையத்தைப் பற்றியும், தி.ஜானகிராமன் தன்னுடைய அக்பர் சாஸ்திரியில், அக்காலத்தில் மெய்ன் லைனில் கடலூரில் துவங்கி சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மாயவரம், குத்தாலம், திருவிடைமருதூர், ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வரையுள்ள இரயில் நிலையங்களைப் பற்றிச் சொல்லிவருவார். மௌனியும் தன்னுடைய படைப்புகளில் இந்த ரயில்நிலையங்களைப்பற்றிச் சொல்லியதுண்டு. கு.அழகிரிசாமி கோவில்பட்டி அருகே உள்ள குமராபுரம் ரயில் நிறுத்தத்தைப் பற்றி எழுதிய சிறுகதை அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டது. புதுமைப்பித்தன் நெல்லை ஜங்ஷன் ரயில்நிலையத்தைப் பற்றி சம்பாஷித்துள்ளார். மதுரை, தஞ்சை ரயில் நிலையங்களைப் பற்றியும் பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக தஞ்சை வட்டாரக் கதைகளில் இந்தப் புகைவண்டியில் செல்லும் போது, டிகிரி காபியும், பூரி மசாலாவும், இட்லியும், தோசைவும் ‘கடப்பா’ சட்னியும் சாப்பிட்ட சம்பவம் தப்பாமல் இடம்பெற்றிருக்கும். ரயில்வே நிலையங்களும், சிமெண்டால் ஆன அமர்வுகளும், அந்தந்த வட்டாரத் தின்பண்டங்களும் அப்போது நினைத்துப்பார்க்க வேண்டியவை. கார்ட் லைனில் விழுப்புரத்து உப்புமா, மணப்பாறை முறுக்கு, கடம்பூர் போளி,தென்காசி மங்குஸ்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழம் என்ற பல ரயிலடிகளுக்கு உரித்தான தின்பண்டங்கள் அப்போதும் இப்போது பிரசித்தம். அப்போதெல்லாம் இந்தப் புகை ரயில்வண்டிதான் நினைவுக்கு வரும். இந்தவண்டி மதிப்புமிக்கதாக மக்களால் கருதப்பட்டது. இன்றைக்கு டீசல், மின்சார தொடர் வண்டிகள் வந்துவிட்டன. இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குள் மெட்ரோ ரயில்களும் வந்துவிட்டன. இருப்பினும் இந்தப் புகைவண்டிகளை நம்மால் மறக்கமுடியாது. இவ்வளவு ரயில் வசதிகள் இருந்தாலும், அதையும் புறக்கணித்துவிட்டு விமானங்களை அதிகமாக பயன்படுத்துகின்றோம். நேரங்காலம் மிச்சப்படுகிறது. சிலநேரங்களில் ஏ.சி. புகைவண்டி கட்டணத்தில் விமானத்திலேயே பயணச்சீட்டு வாங்கிவிடலாம். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 18-11-2015. #KsRadhakrishnan #KSR_Posts #SteamLocomotiveTrains

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...