Saturday, November 21, 2015

பண்டைய வழக்காடு மன்றம் - Ancient Judicial Fora



நண்பர் கோ.செங்குட்டுவனின் பண்டைய காலத்தில் சிவில் உரிமைகள் வழக்குகள் எப்படி நடந்தது என்ற பதிவு கவனத்தை ஈர்த்தது.

விழுப்புரம் அருகில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் குறித்த அவருடைய பதிவு வருமாறு...

" சிவில் எனப்படும் உரிமையியல் வழக்குகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது வழக்கிற்காக ஆவணங்கள், சாட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் ஆகும். இவற்றின் அடிப்படையில்தான் இவ்வழக்குகளின் தீர்ப்புகள் அமைகின்றன.

இச்சட்ட நடைமுறைகளுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பது இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.12ஆம் நூற்றாண்டு) சேக்கிழார் பெருமானால் வரையப்பெற்ற பெரிய புராணம்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்வினைச் சேக்கிழார் கீழ்க் கண்டவாறு விளக்குகிறார்:
சடையனார், தங்கள் குடும்பத்தோடு ஒத்த சிறப்புடைய குடும்பத்தினராய்ப் புத்தூரிலே வாழ்ந்த ஆதிசைவ வேதியராகிய சடங்கவி சிவாசாரியாருடைய மகளைத் தம் புதல்வருக்கு மணஞ்செய்விக்க ஏற்பாடு செய்தார்.

திருமணத்தன்று சுந்தரர் மணப்பந்தலில் அமர்ந்திருந்தார்.
சிவபெருமான் அவரை தடுத்தாட்கொள்ள விரும்பி முதுமைமிக்க வேதியராக மணப் பந்தலுக்குள்ளே நுழைகிறார்.
பந்தலுக்குள் வந்த அவர் சுந்தரரை நோக்கி “எனக்கும் உனக்கும் பெருவழக்கு இருக்கிறது. அதனைத் தீர்த்த பின்னரே நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்” எனக்கூறினார்.

சுந்தரர் அம்முதியவரை நோக்கி “என்ன வழக்கு?” என வினவ,
அந்தணரும் அங்குள்ளவர்களைப் பார்த்து “நாவலூரானாகிய இவன் எனக்கு வழிவழி அடியவனாவான்” என்றார். இதனைக் கேட்டு அங்கிருந்தவர்கள் வெகுண்டனர்.
சுந்தரர் “இம்மறையோன் மொழி நன்றாக இருக்கிறதே” என்று சொல்லி நகைத்தார்.

அதுகண்ட கிழவர் அவரருகே சென்று, “ஏடா, அக்காலம் உன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலை என் கையில் இருக்கிறது. இக்காரியத்தை நீ இகழ்ந்து சிரிக்கிறாயா?” எனக் கேட்டார்.
அவருடன் சுந்தரர் தொடர் விவாதத்தில் ஈடுபடுகிறார்.
ஒருகட்டத்தில் முதியவர் கையில் இருந்த ஓலையைக் கிழித்தார் சுந்தரர்.

ஓலையைப் பறி கொடுத்த அந்தணர் “இது முறையா?” எனக் கதறினார்.

அங்கிருந்தவர்கள் நீங்கள் எந்தஊர்? எனக்கேட்க, அருகில் இருக்கிற திருவெண்ணைய் நல்லூர்தான் என் ஊர் என்றார்.
அதைக் கேட்ட சுந்தரர் “உன் ஊர் திருவெண்ணைய் நல்லூராயிருக்குமானால் உன் பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்றார்.
முதிய அந்தணரும் “நீ திருவெண்ணைய்நல்லூருக்கே வந்தாலும் அங்கு வாழும் தூய நான்மறையோர் முன்னிலையில் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமையென்பதை உறுதிபடுத்துவேன்” என்று கூறிக்கொண்டு முன் செல்ல, சுந்தரரும் அவர்தம் சுற்றத்தாரும் பின்தொடருகின்றனர்.

திருவெண்ணைய்நல்லூரையடைந்த முதியவர், அங்குள்ள அவையினரை நோக்கி “திருநாவலூரான் சினமிகுதியால் என் கையிலிருந்து பறித்துக் கிழித்த அடிமைச்சீட்டு படியோலை ஆகும். அதன் மூல ஒலையை அவையினர் முன்பு காட்டுவதற்காகவே பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்” என்று சொல்லி, மூல ஓலையாகிய ஆவணத்தை அவைக்குமுன் கொண்டு வந்தார்.

கரணத்தான் அவ்வோலையை படிக்கத் தொடங்கினான்.
“திருநாவலூரின் வாழும் அருமறைவல்ல ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதியது. வெண்ணைய்நல்லூரில் வாழும் முனிவர் பெருமானாகிய பித்தனுக்கு யானும் என் குடும்பத்தில் வழிமுறை வழிமுறையாக இனி வருபவர்களும் அடிமைத் தொண்டு செய்ததற்கு இதுவே ஆவண வோலையாகும். இருதிறத்தேமும் உள்ளம் ஒத்த நிலையில் இதனை எழுதிக் கொடுத்தேன். இதற்கு இவை என் கையெழுத்து” என அழகிய தமிழ் நடையில் எழுதப்பெற்றிருந்தது.
அதில் சாட்சிகளாகக் கையெழுத்திட்டவர்களுடைய கையெழுத்துக்கள் சரிபார்க்கப்பட்ட போது, அவை சரியாக இருந்தன. பின்பு சுந்தரரை அழைத்த அவையினர் “உங்கள் பாட்டனாருடைய கையெழுத்து இது தானா என்பதைத் தெளிவாகப் பார்த்துச் சொல்லுங்கள்” எனக்கேட்டனர்.

சுந்தரனாரின் பாட்டனார் கையெழுத்திட்டிருந்த வேறு ஒரு ஆவணம் எடுத்து வரப்பட்டது. அதில் இருந்த கையெழுத்தும், இதில் இருந்த கையெழுத்தும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டபோது இரண்டும் ஒன்றாக இருப்பது கண்டறியப்பட்டது.
“இவ்விரண்டிலும் கையெழுத்து ஒத்திருக்கிறதே. இனி இதற்கு மாறாக ஒன்றும் சொல்வதற்கில்லை” எனச் சொன்ன அவையோர், “சுந்தரரே நீங்கள் இம்முதியவர் கொண்டுவந்த வழக்கில் தோல்வியடைந்துவிட்டீர். இனி முறைப்படி இம்முதியவர்க்கு அடிமை செய்தலே உமது கடமையாகும்” என முடிவு செய்தனர்.

வழக்கு முடிந்ததும் ஊர்மக்கள் முதியவரிடம் சென்று “திருவெண்ணைய்நல்லூர்தான் உங்கள் ஊர் என்பதற்கு சான்று காட்டுக” எனக்கேட்க, அங்குள்ள திருவருள் எனப்படும் பழைய கோயிலுக்குள் சென்ற முதியவர் மறைந்தார். அங்கு இடப வாகனத்தில் காட்சியளித்த ஈசன், சுந்தரரின் கடந்த காலத்தை நினைவூட்டினார். வந்தது இறைவன் என உணர்ந்த சுந்தரர், “பித்தா பிறைசூடி பெருமானே யருளாளா” எனும் தம் முதல் தேவாரப் பதிகத்தை அரங்கேற்றினார். திருவெண்ணைய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயிலில், வழக்குரைத்த மண்டபம் இன்றும் காட்சியளிக்கிறது "

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-11-2015.

#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts#AncientJudicialFora


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...