Monday, April 3, 2017

இரண்டாவது சட்டமன்றம் (1957-1962) தி.மு.க. தமிழக சட்டப்பேரவையில் முதன் முதலாக 29.04.1957-ல் தனக்கான கணக்கை துவங்கியது.

இரண்டாவது சட்டமன்றம் (1957-1962)
தி.மு.க. தமிழக சட்டப்பேரவையில் முதன் முதலாக 29.04.1957-ல் தனக்கான கணக்கை துவங்கியது.
-------------------------------------
அன்றைய சென்னை மாகாணத்தில் 1957ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது.தமிழகத்தில் 4 கட்ட தேர்தல் அச்சமயத்தில் நடைபெற்றது. 

தி.மு.க சார்பில் 15 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இத்தேர்தலில் வெற்றி பெற்றனர். காங்கிரசில் அப்போது சீர்த்திருத்த காங்கிரஸ் என்ற பிரிவும் ஏற்பட்டது. 

தி.மு.க. சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டபேரவை தொகுதியிலிருந்து அப்போது வெற்றிபெற்ற எம்.பி. சுப்பிரமணிய, பிற்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1980-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார். அக்காலத்தில் தமிழகம் அறிந்த அரசியல் தலைவர் ஆவார். அவரை எம்.பி.எஸ். என்று அன்போடு அழைப்பார்கள். காங்கிரசில் அப்போது மூப்பனார், நெடுமாறன் என்ற இரு அணிகள் இருந்தன. நெடுமாறனோடு எம்.பி.சுப்பிரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, தஞ்சை ராமமூர்த்தி, துளசி அய்யா வாண்டையர், மணலி இராமகிருஷ்ண முதலியார், தீர்த்தக்கிரி கவுண்டர், ஜீவரத்தின முதலியார், கவிஞர் கண்ணதாசன் போன்ற முன்னணி காங்கிரஸ் தலைவர்களெல்லாம் இருந்தனர். நானும் அந்த அணியில் இருந்த காரணத்தினால் எம்.பி. சுப்பிரமணியம் அவர்களோடு நெருக்கமாக பழகக்கூடிய வாய்ப்பு கிட்டியது.

முதல் தடவை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக பேரவைக்கு சென்ற நிகழ்வுகளெல்லாம் எனக்கு அடிக்கடி அவரோடு செல்லும்போதெல்லாம் எனக்கு சொல்வதுண்டு.

சட்டபேரவைக்கு முதன்முதலாக செல்கிறேன் என்று நானும், சிலரும் புது வெள்ளைச் சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டு மகிழ்ச்சியோடு சென்றோம் என்றார். அவர் சொல்லிய நிகழ்வுகளும், அண்ணாவின் நம்நாடு, தினமணி, தினத்தந்தி, ஆங்கில இந்து, சட்டபேரவை மலர்களை கொண்டு கிடைத்த தகவல்களை கொண்டு 1957-ல் சட்டபேரவை எப்படி அமைந்தது என்று கீழே குறிப்பிட்டுள்ளேன்.
..........................
இரண்டாவதுசட்டமன்றப்பேரவைக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 205 உறுப்பினர்களைக் கொண்ட பேரவை சேர்ந்து ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர் சேர்ந்து206 பேர். சென்னை சட்ட மன்றப் பேரவை உறுப்பினர்களாக இருந்தனர்.

மொத்தமுள்ள 205 இடங்களில் காங்கிரஸ் கட்சி 151 இடங்களையும், திராவிட முன்னேற்றக் கழகம் 15 ம், காங்கிரஸ் சீர்திருத்தக் குழு 9-ம், கம்யூனிஸ்ட் கட்சி 4-ம், பார்வர்டு பிளாக் கட்சி 3-ம், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 2-ம், சோஷலிஸ்ட் கட்சி 1-ம் மற்றும் சுயேச்சைகள் 22 இடங்களில் பெற்றனர்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் 1957 ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகின. காமராஜர் தலைமையில் 13.04.1957 அன்று அமைச்சரவை பொறுப்பேற்றது. சட்டமன்றம் 29.04.1957 கூடுவதற்கு முன்னால் இந்த அமைச்சரவை பொறுப்பேற்றது.
13.04.1957 - அன்றுள்ளபடிகாமராஜர் மந்திரிசபையில் மந்திரிகளாக இருந்த அனைவரும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
மந்திரிசபை பதவி ஏற்பு
1957 ஏப்ரல் 13-ந்தேதி காமராஜர் இரண்டாவது முறையாக முதல் - அமைச்சராகப் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஏ.ஜே.ஜான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முந்தைய அமைச்சராகளாக இருந்த சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம், எம்.ஏ. மாணிக்கவேலா ஆகியோர் மீண்டும் அமைச்சர்கள்னார்கள். இவர்களுடன் ஆர்.வெங்கட்ராமன், பி.கக்கன், வீ. ராமையா, லூர்தம்மாள் சைமன் ஆகியோர் புதிய அமைச்சரஅவையில் இடம் பெற்றனர்.
 

அப்போது அண்ணா நடத்திய "நம்நாடு இதழில் சட்டமன்றத்துக்கு தி.மு.க. சென்றதை குறித்த செய்தி வருமாறு :
சென்னை, ஏப்.29- நாட்டு மக்களின் எதிர்கால நல்வாழ்விற்குப் பணியாற்றுவதற்காக சட்டமன்றம் சென்றும் தி.மு.கழக சட்டசபை உறுப்பினர்கள் இன்று காலை 10 மணி அளவில், ‘அறிவக’த்திலிருந்து புறப்பட்டனர்.
கழக வரலாற்றில் முதன் முறையாகச் சட்டமன்றப் பணியாற்றச் சென்றும் பொறுப்புணர்வின் ‘சாயல்’, மன்ற உறுப்பினர்களின் முகப் பொலிவில் தெள்ளத் தெளிவாகப் பிரதிபலித்தது.
சாலையில், அனைவருக்கும் சிற்றூண்டி வழங்கப்பட்டது.
துணைப் பொதுச்செயலாளர் என்.வி. நடராசன் அவர்கள் உடனிருந்து வழியனுப்ப, அண்ணா அவர்களும் அவரைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் சட்டமன்றம் நோக்கிப் புறப்பட்டனர்.
‘அறிவக’த்தில் கூடியிருந்த ஏராளமான தோழர்கள் வாழ்த்துக் கூறினர்.
கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
சென்னை சட்டசபைத் தலைவர் பதவிக்கு டாக்டர் யு. கிருஷ்ணாராவ் அவர்களும், துணைத் தலைவர் பதவிக்கு பி. பக்தவச்சலம் அவர்களும் காங்கிரஸ் அபேட்சகர்களாகதேர்ந்தெடுத்திருக்கின்றனர்."-நம்நாடு,30-4-1957

முதல் - அமைச்சர் காமராஜர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
காமராஜருடன் கருத்து வேற்றுமை கொண்ட சில காங்கிரஸ்காரர்கள், "சீர்திருத்தக் காங்கிரஸ்" என்ற கட்சியை அமைத்து, காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டனர்.
இந்தக் கட்சியின் தலைவரான ஜெயராம ரெட்டியார், காமராஜரை எதிர்த்து போட்டியிட்டார். காமராஜருக்கு 36,400 ஓட்டுகளும், ஜெயராம ரெட்டியாருக்கு 31,683 ஓட்டுகளும் கிடைத்தன.

தி.மு. கழகத்தைத் தேர்தலில் ஈடுபடுத்துவதற்கு முன், அதுகுறித்து தி.மு.கழகத்தினரிடம் ஜனநாயக முறைப்படி அண்ணா வாக்கெடுப்பு நடத்தினார். தி-மு.கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு 1956 மே 17-ந் தேதி முதல் 4 நாட்கள் திருச்சியில் நடந்தபோது, இந்த வாக்கெடுப்பு நடந்தது.தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவோர் சிவப்பு நிறப் பெட்டியிலும், வேண்டாம் என்று கருதுவோர் கறுப்பு நிறப் பெட்டியிலும் ஓட்டுப்போட வேண்டும் என்று முடிவாயிற்று.

கொட்டும் மழையில் வாக்கெடுப்பு
அதன்படி வாக்கெடுப்பு நடந்தது. அன்று சூறாவளியுடன் பெருமழை பெய்ததால், பலர் ஓட்டுப்போட முடியவில்லை.
எனினும் பதிவான ஓட்டுகளை எண்ணிப்பார்த்ததில், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 56,942 பேர்களும் போட்டியிடக்கூடாது என்று 4,203 பேரும் வாக்களித்திருந்தனர்.
பெரும்பாலோர் அளித்த தீர்ப்பின்படி, 1957 தேர்தலில் தி.மு.கழகம் போட்டியிட்டது.

சட்டமன்றத்திற்கு 124 இடங்களிலும், நாடாளுமன்றத்திற்கு 11 இடங்களிலும் தி.மு.க போட்டியிட்டது.

15 இடங்களில் வெற்றி
இதில் சட்டமன்றத்திற்கு 15 இடங்களிலும், நாடாளுமன்றத்திற்கு 2 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.
சட்டசபைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் : 

அண்ணா,கலைஞர், பேராசிரியர்,சத்திய வாணிமுத்து, ஆசைத்தம்பி, கடம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இருசப்பன், ஏ. கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், வி.எஸ். சந்தானம், எம்.பி. பாரதி, எம்.பி. சுப்பிரமணியம், எம். செல்வராசு டி. நடராசன்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 2-ஆவது சட்டப்பேரவைத் தொடங்கிய 29.04.1957 அன்று உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டனர்.
29.04.1957அன்று இதனுடைய 60-ஆவது ஆண்டு எட்டுகிறது.
சட்டப்பேரவைக்குள் நுழைந்தவுடன் பேரறிஞர் அண்ணா தன்னுடைய கன்னிப் பேச்சியை பேசினார். அவரைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய கன்னிப் பேச்சியை 04.05.1957-ல் பேசினார். இதுதான் கலைஞர் அவர்களின் சட்டமன்றத்தில் ஒலித்த முதல் குரல்.

நாடாளுமன்றத்திற்குதேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் : 
ஈ.வெ.கி. சம்பத். ஆர். தர்மலிங்கம்.

அண்ணா அவருடைய சொந்த ஊரான காஞ்சீபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு 31,861 ஓட்டுகளும், எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பேட்பாளர் டாக்டர் சீனிவாசனுக்கு 20,718 ஓட்டுகளும் கிடைத்தன.
கலைஞர் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு 22.785 ஓட்டுகள்.
தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த நாவலர் சேலத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


தி.மு.க சொற்ப இடங்களில்தான் வெற்றி பெற்றது என்றாலும், போட்டியிட்ட முதல் தேர்தலில் 15 இடங்களைக் கைப்பற்றியது அண்ணாவுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 31.3.1957 அன்று கடற்கரையில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அண்ணா சொன்னார்.
"நாங்கள் பெற்ற வெற்றி குறைவானது என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்தது. தி.மு.க. சார்பில் போட்டியிட ஆளே கிடைக்காது என்று முதலில் கேலி பேசியவர்கள், பிறகு நமக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றார்கள். இப்போது ‘15 இடங்கள் தானே’ என்கிறார்கள். அவர்களின் கேலி மொழி நமக்கு உற்சாகத்தைத் தரட்டும்.
நாவலர் நெடுஞ்செழியன் தோல்வியுற்றதால் நாங்கள் 15 பேர் சட்டசபைக்கு செல்லும்போது ஈட்டி பாய்ந்த இதயத்துடன் செல்கிறோம். நாவலரையும் என்றைக்கு நாம் சட்டமன்றத்துக்குள் அழைத்துச் செல்கிறோமோ அன்றுதான் நாம் மன நிம்மதி பெறமுடியும்."
இவ்வாறு அண்ணா கூறினார்.
‘சட்டசபையில் நடைபெறும் விவாதங்கள் நாகரிகத்துடன் இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியின் முன்னேற்றத்துக்குப் பொறுப்புடன் பாடுபட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

சட்டமன்ற முக்கிய நிகழ்வுகள்:

1. 1957 பொதுத் தேர்தலுக்குப் பின் அதுகாறும் அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்த புதிய சட்டமன்றக் கூடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த பேரவை, சில பல மேம்பாடுகளுக்கு உள்ளான தற்போதுள்ள சட்டமன்ற மண்டபத்தில் செயல்பட்டது.
2. ஆளுநர் திரு ஏ.ஜே.ஜான் தன்னுடைய பதவிக் காலத்திலேயே 1957-ல் இயற்கை எய்தினார்.
3. 1959 ஏப்ரலில் சட்டப் பேரவை, உதக மண்டலத்தில், தற்போது ‘தமிழகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அரண்மூர் அரண்மனையில் கூடியது. 180 பேருக்கு மட்டுமே இருக்கை வசதிகள் இருந்த போதிலும் பேரவை அங்கு 9 நாட்கள் நடைபெற்றது.
4. அப்போதிருந்த பேரவைத் தலைவர் டாக்டர் யு. கிருஷ்ணா ராவ், தன்னுடைய பதவிக் காலத்திலேயே 1961-ல் இயற்கை எய்தினார். சட்டப் பேரவையின் காலம் 1962-ல் முடியும் வரை துணைத் தலைவரே பேரவைத் தலைவரின் பணிகளை ஆற்றி வந்தார்.
5. 1961-ல் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசு சட்டத்தின்படி, இரட்டை உறுப்பினர் தொகுதிகள் ஒழிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மலைச் சாதியினருக்கு என தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

 #தமிழகஅரசியல் #தேர்தல்1957 #பொதுத்தேர்தல் 
#திமுகசட்டமன்றநுழைவு 
#காமராஜர்அமைச்சரவை 
#tamilnadu1957elections
#dmk
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
1/4/2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...