Monday, April 17, 2017

அரசியலில் தியாக செம்மல்கள்

அரசியலில் தியாக செம்மல்களும், திருட்டு தினகரன்களும். ஓ.பி.ஆரும், ஓபிnஎஸ்ஸும்.
---------------------------
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையின் சோதனைகள் நடந்து , விசாரனைகள் நடந்துக் கொண்டிருப்பதாகவும் அதன் பின்னணியில் தினகரன் ஆதரவாளர்கள் என்ற உள்நோக்கத்தில் சோதனை செய்யப்பட்டதாக சோதனைக்கு உள்ளான தரப்பினர் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி வருகின்றனர். அரசியலில் இதுபோன்ற நாடகங்கள் இன்று மட்டுமல்ல பல்வேறு காலக்கட்டத்திலும் அரங்கேறி உள்ளது.  சுயமரியாதைகாரர்கள் பதவியை உதறிவிட்டு பழியை தூள்தூளாகக முன் வந்தனர். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஓபிஆர் அவர்கள்.  கொஞ்சம் நிதானமாக வாசியுங்கள். ஓ.பி என முதல் இரு எழுத்துக்களை வாசித்த மட்டில் ஊழல் பேர்வழி பன்னீர்செல்வமா? என நினைத்து விடக் கூடாது என்பது என் வேண்டுகோள். 

இவர் ஓ.பி.ஆர் என அழைக்கப்பட்ட ஓமந்தூரார் பி.ராமசாமி ரெட்டியார் ஆவார்.  சென்னை ராஜதானியின் முதல் பிரதமர்(ப்ரிமியர்) ஆவர். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில்  தூய்மை என்பதெற்கெல்லாம் சமாதானம் செய்துக் கொள்ள முடியாத அடையாளம் இவர். விவசாயிகளின் முதல்வர்.  ரத்தமும் சதையுமாக இப்படி ஒருத்தர் தமிழகத்தில் வாழ்ந்தார் என்றால் எதிர்கால தலைமுறை நம்புமா என்ற ஐய்யபாடுக்கு நடுவில் வாழ்ந்த சமூக நீதி காத்த தலைவர்.   பாரதியார் பாடல்களுக்கு தடை விதிக்கப்பட்ட  போது அதனை நீக்கியவர் ஓமந்தூரார் சுதந்திர இந்தியாவில்,தமிழகத்தில் கட்டப்பட்ட அணைகளுக்கு அடிகோலியவர். 

பிரதமர் ( ப்ரீமியர்) பதவியில் 1947-1949 என இரண்டாண்டு காலம் மட்டுமே இருந்தாலும் துறவு கோலத்தில் அந்த பதவியை அலங்கரித்தவர் இவர். இவரது வளர்ச்சியையும் , பெருகி வரும் மக்கள் செல்வாக்கையும் பிடிக்காத சிலர் இவர் மீது தொடர்ந்து மொட்டைக் கடுதாசிகளை பாரத பிரதமர் நேருவுக்கு அனுப்பினர்கள். அதில் ஒன்று  தான் " ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தை சென்னை ராஜதானியின் அடையாளமாக தேர்வு செய்யப்பட்டதில் சமய உள்நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது". விசாரணைக்கு அழைத்தார் நேரு. அதற்கு பதில் அளிக்கையில் அது சமயம் சார்ந்தது அல்ல. தமிழ்மக்களின் கலாச்சாரமும்,  திராவிட கட்டிடக் கலையின் அடையாளமும் கொண்டது " என்றார். நேருவால் மேலும் கேள்வி எழுப்ப முடியவில்லை. அடுத்து ஊழல் புகார் ஒன்றும் பிரதமர் நேருவிற்கு அனுப்பப்பட்டது.  அதற்கு பதில் அளிக்க நேரு,  ஓமந்தூராரை டெல்லிக்கு அழைத்தார். ஆனால் ஓமந்தூரார் டெல்லிக்கு செல்லவில்லை.  மக்களுக்கு பணி ஆற்றுவதா, இவர்களுக்கு பதில் அளிப்பதா?  இவர்களுக்கு இந்த பதவி தானே வேண்டும் என அந்த நிமிடமே ராஜினாமா கடிதத்தை டெலக்ஸ் வழி அனுப்பிவிட்டு பதவியை விட்டு கீழிறங்கினார். அப்போது அவர்க்கு தங்க அனுமதிக்கப்பட்ட இடம் தான் கூவம் ஹவுஸ் ( தலைவர் கலைஞர் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியாக கட்டப்பட்டு, ஓமந்தூரார் மாளிகை என பெயரிடப்பட்டது) நோக்கி விரைகின்றார். தனது பெட்டிப் படுக்கை, வேட்டி ,சட்டைகள் ஆகியவற்றை தானே சுமந்துக் கொண்டு  தர்பார் ஹோட்டல் பகுதி அதாவது டாக்ஸி ஸ்டான்ட்க்கு சென்று வாடகை கார் எடுத்து தனது சொந்த ஊரை நோக்கி சென்றார்.  பின்னாளில் வடலூர் ராமலிங்க அடிகளார் மடத்தில் குடியேறினார்.  இவர் பொறுப்பு வகித்த பிரிமியர் பதவியின் எல்லைகளாவது வடக்கே ஒரிசா, மேற்கே காலிகட், தெற்கில் தோவாளை என  கர்நாடகவின் மங்களூர் வரை பரந்து விரிந்த பகுதியின் ஆளுமையை " போங்கடா உங்க அரசியலும் நீங்களும்"  என உதறிவிட்டு சென்றார். 

இங்கே இன்னொருவரை பற்றி குறிப்பிட வேண்டும். அவர் தான் திரு. வரதராஜலு நாயுடு.  அவரை பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் காந்தி அவர்கள் கூறியதை குறிப்பிட்டல் பொருத்தமாக இருக்கும்.
ஒருமுறை காந்தியிடம்  தமிழகத்தில் சுதந்திர போராட்டம் எப்படி நடக்கின்றது எனக் கேட்டபோது " நாயக்கர், நாயுடு, முதலியார் " பார்த்துக் கொள்கின்றார்கள் என்றாராம். அதாவது பெரியார் , வரதராஜலு நாயுடு, திரு.வி.க ஆகியோரை தான் காந்தி அவ்வாறாக  குறிப்பிட்டார்.  அந்த சேலம் வரதராஜலு நாயுடு பெரும் பணக்காரர். பெரியாரின் அணுக்கத்தோழர்.
காமராஜர் போன்றோரை உருவாக்கியவர் ஆவார். வஉசி  திருநெல்வேலி சதி வழக்கில் சிறையில் இருந்த போது அவரை மீட்க வழக்கை நடத்தியவர்.  பிறகாலத்தில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இந்து மகாஜன சபையில் தங்கி காலம் கழித்தார்.  அவரது குடும்பத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் வீடு வழங்கினார். முத்துராமலிங்க தேவர் பொருளாதார உதவிகள் செய்தார்.

கப்பலோட்டிய தமிழர் என போற்றப்பட்ட வ.உ.சி அவர்கள் தனது கடைசி காலத்தில் உணவிற்கு வழியின்றி எண்ணெயும், புண்ணாக்கும் விற்று வயிற்றைக் கழுவினார். 

இந்த தியாக செம்மல்களை எல்லாம் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் தனது கட்சிக்கு அடையாள சின்னம் வேண்டும் என்பதற்காக அரசு இயந்திரத்துக்கு கோடிகளை  லஞ்சமாக கொட்டிக் கொடுப்பவர்கள் அரசியலில் காண வேண்டிய காட்சிக் கொடுமைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.  கொஞ்சம் ஒப்புமை படுத்திப் பார்க்கின்றேன். பொய்யான புகார்கள் அளிக்கப்பட்ட ஓமந்தூரார் பதவியை விட்டெரிந்தார். உண்மைக் குற்றவாளிகளோ பதவியில் ஒட்டிக் கொள்கின்றனர்.

கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ? என கருதிய தியாக செம்மல்கள் வரலாற்றில் இன்று நிலைத்து நிற்கின்றனர். 

#ஓமந்தூர்ராமாசாமி
#சேலம் வரதராஜலு நாயுடு
#KSRadhakrishnanpostings 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்  17-04-2017

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...