Monday, April 3, 2017

வாசமில்லாத மலர்களிது. வசந்தத்தை தேடுகின்றன...

வாசமில்லாத மலர்களிது. வசந்தத்தை தேடுகின்றன...
-------------------------------------

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் செய்திகளை தினசரிகளில் புரட்டும் போதும், தொலைக்காட்சிகளில் காணும் போதும் 
தினகரன், தீபா, ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோரது பெயர்களை அடிக்கடி காணும் போது மனம் ஒப்பவில்லை. 

இயற்கையாக மலரும் மலர்கள் மணம் வீசுபவையாக இருக்கும். அவைகள்  மொக்கு, மொட்டு, அரும்பு, முகிழ், மூகை, மலர் என  படிப்படியாக மலரும் போது தான் முழுமையா மலர் எனப்படுகின்றன. அதில் மணம் இருக்கும். தற்போதெல்லாம் திருமண மணவறை அலங்காரங்களில் காகிதப் பூக்களை கொண்டும், நூல்களை கொண்டு பூ வடிவங்கள் செய்து அதனைக் கொண்டு அலங்கரிக்கும் அதில் வாசனை இருப்பதில்லை.  

இவ்வாறு தான் அவசரத்திற்கு சுயலாபம் கருதி அரசியல் அரிதாரம் பூசப்பட்டு சந்தையில் இறக்குமதியானவர்கள் தான் தினகரன், தீபா, ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர். அரசியல் என்றால் அதில்  பொதுவாழ்வு, பொதுநலம் வேண்டாமா? சமூக பார்வை வேண்டாமா? மொழியறிவு வேண்டாமா? புரிதல் வேண்டாமா? அனுபவம் வேண்டாமா? தியாகம் வேண்டாமா? 

இவற்றில் ஏதேனும் ஒன்றாவது இந்த மூவரிடம் உண்டா? இதில் எப்படி பன்னீர்செல்வத்தை  இணக்கின்றீர்கள் என யோசிக்கலாம். அவரும் 2001ல் தகுதி மீறி திடீர் என முதல்வர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தானே? 

இந்த ஆயத்த அரசியல்வாதிகள் எங்கிருந்து தொடங்கினார்கள்?  

ராஜாஜியின் மகன். சி.ஆர். நரசிம்மன்.  சுதந்தர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவையில் தொகுதியில் 1951, 1957 மக்களவைத் தேர்தலில்  சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கடுத்து 1962ல் நடந்த தேர்தலில் திமுகவின் க.இராசாராமிடம் தோற்றுப்போனார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் எந்த அரசியல் களத்திலும், பொதுவாழ்விலும் இருந்ததாக தெரியவில்லை. 

சுதந்திர போராட்ட வீரர் சேலம் விஜயராகவ ஆச்சார்யாவின் புதல்வர் ஆர்.டி.பார்த்தசாரதி மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரசால்  அறிவிக்கப்பட்டார். அதற்கு முன் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.  பொதுவாழ்வில் இருந்ததாக தகவல் இல்லை. 

நேரு தனது மகள் இந்திராகாந்தி அவர்களை ஒருங்கினைந்த காங்கிரசின் தலைவியாக முன்மொழிவதற்கு பாட்டீல்,ஜெயபிரகாஷ் நாராயணன்,  ராஜேந்திர பிரசாத் , கிருபளானி  இந்திராவின் அத்தை விஜயலட்சுமி பண்டிட், சரோஜினி நாயுடு  ஆகியோரே கடுமையாக  எதிர்த்தனர். கடுமையான கருத்துக்களை முன் வைத்தனர். இந்திராகாந்தியை அரசியலில் படிப்படியாக கொண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் ஆலோசனையும். அதனையும் மீறித்தான் நேரு இந்திராகாந்தியை காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்தார்.  

கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களின்  புதல்வி பத்மஜா நாயுடு எந்த ஒரு களப்பணியில் இல்லாமல் தான் கவர்னர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். 

இப்படியாக பலர் காங்கிரசில் எந்த ஒரு உழைப்பும் இல்லாமல்  முன்னுக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களுக்கு பின்னால்  தகுதியானவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டனர். 

1986 என நினைக்கின்றேன், உயர் நீதிமன்றத்தில் 16வது கோர்ட்டில் நீதிபதி ரத்னம் அவர்கள் முன்னிலையில் CRP வழக்குகள் விசாரணையில் நடந்துக் கொண்டிருக்கின்றது.  சீனியர் வழக்கறிஞர் வி.பி.ராமன் அவர்களிடம் ஜூனியராக அப்போது பணியாற்றிய ஒரு பெண் வக்கீல் வழக்கறிஞர் குமாஸ்தா ,'மேடம், டெல்லியில் இருந்து தொலைபேசி வந்ததாகவும், இந்த எண்ணுக்கு உங்களை தொடர்புகொள்ள சொன்னதாக'ஒரு துண்டு சீட்டை அளித்தார். அதனை தொடர்ந்து சுமார் 20நிமிடங்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியே சென்று வந்தார். 
மாலை டெல்லி பயணம். அடுத்த நாள் டெல்லியில் இருந்து சென்னை பயணமானார். இதற்கிடையில் அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியின் வேட்பாளராகின்றார்.  காங்கிரசின் முன்னால் தலைவரின்  பேத்தி என்ற தகுதியின் அடிப்படையில், அதுவரை காங்கிரஸ் கட்சிக்கு எந்த உழைப்பும் அல்லாத அவரை ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கின்றது அன்றைய காங்கிரஸ்.அன்று என்னருகில் இருந்த , அனைவரும் அறிந்த  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.ஏசய்யா என்னிடம்," நல்லவேளை நீயும் நெடுமாறனும் காங்கிரசில் இல்லை" என வேதனையுடன் பகிர்ந்துக் கொண்டார்.  அந்த ஏசய்யா பற்றி இன்னொரு தகவலை இங்கு குறிப்பிட வேண்டும். சென்னை, ஸ்பென்சர் சந்திப்பில் எம்.ஜி.ஆர் சிலைஅருகில் ராஜிவ்காந்தி சிலை அமைக்க வேண்டும் என 1992ல் அனுமதி பெற்றவர். அவரும் மறைந்து விட்டார் என்பது வருத்தத்தக்க விடயம்..

எம்.ஜி.ஆர் தன்னுடன் திரைப்படங்களில் நடித்து வந்த வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு 1986ல் மேலவை உறுப்பினர் பதவியை  அளிக்க முன் வந்தார். 

ஆனால்  கே. சுந்தரம் என்ற வழக்கறிஞர் " திவாலான ஒருவர் மேலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடியாது என்ற சட்டம் நிலுவையில்  இருப்பதை  குறிப்பிட்டு நிர்மலாவின் நியமனத்தை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக பல குளறுபடிகள். தன்னுடன் நடித்த சக நாயகிக்கு உறுப்பினர் பதவி அளிக்க இயலாத மேலைவை அமைப்பு ஆட்டுக்கு தாடி தேவையே இல்லை என ஜனாதிபதி ஒப்புதல் பெற்று வரலாற்று கீர்த்தி மிக்க மேலவையை கலைத்தார்  பிரகஸ்பதி எம்.ஜி.ஆர். 

இது போல பொதுவாழ்வு என்றால் என்னவென்று அறியாத ஜெயலலிதாவை  அரசியலுக்கு அழைத்து வந்தது தான் தமிழக  அரசியலின்  இழுக்கு. அழுக்குகள்அதிமுகவில்அடைக்கலமாகி அவைகள்  ஏற்படுத்திய கறைகளில் சிலர் தான் இந்த  ஓ.பன்னீர்செல்வம், தீபா, தினகரன் ஆகியோர்.. 

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் நேருவால் தேடப்பட்ட போது தமிழகத்தில் இருந்து பொருளாதார மேதை ஆர்.கே .சண்முகசெட்டியாரை தேர்வு செய்தனர்.  இவர் கொச்சி சமஸ்தானம் திவானாக  பணி புரிந்தவர். இரண்டாம் உலகப்போரின் இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க பெருமளவில் உதவியவர்.  நாட்டுப்பிரிவினை வந்த போது ஏற்பட்ட கணக்கு வழக்கு சிக்கல்களை திறம்பட, நியாயமான முறையில் தீர்த்துவைத்தவர்.  இலக்கிய மற்றும் எழுத்தாற்றல் மிக்கவர். திறமை இல்லாத வாரிசுகள்முன்மொழிய 
இத்தகைய திறமைசாலியான  இவர் மீதும் அபாண்ட பழி சுமத்தி இரண்டு ஆண்டுகளில்  நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர். 

பணக்காரரர் என்ற ஒரே தகுதியால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி மத்திய அமைச்சர் பொறுப்பேற்றார். பின்னர் முந்திரா ஊழல் வழக்கில் பதவியை ராஜினாமா செய்தார்.  

இதில் மாறுபட்டவர்கள் தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் , தந்தை பெரியார், ஜெயபிரகாஷ் நாராயணன், ஜோசப்.சி.குமரப்பன்,  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அச்சுதபட்டவர்தன் , கிருபளானி, மோகன் தாரியா போன்ற சில தியாக செம்மல்கள் தான் பதவிகளை நாடாமல் பொதுவாழ்வில் பயணித்த முன்மாதிரிகள். 

அச்சுதபட்டவர்தன் அவர்களைப் பற்றி ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை நேரு விடுத்தார். அதற்கு பதில் அளித்த தியாகசீலர் அச்சுதபட்டவர்த்தன் ," என் பணி நாடு சுதந்திரம் பெற்றதுடன் முடிந்துவிட்டது. நான் கிராமத்திற்கு செல்கின்றேன். இதோ இந்த ஜோல்னா பையில் இரண்டு பைஜாமாவும், ஜிப்பாவும் உள்ளது . எனக்கு இது போதும்" என்றார். 

வாசனையற்ற இந்த தீபா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்ற காகிதப் பூக்கள் மேடையையும், பாடையையும்  அலங்கரிக்கலாம் ஆனால் இவர்கள் பூசைக்கு உதவும் தியாக மலர்களாக முடியாது.

#இந்தியாஅரசியல்
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
31.03.2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...