Monday, April 3, 2017

நாராயணசாமி நாயுடு

விவாசாய சங்க எழுச்சி  தலைவர் திரு
நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை அமைப்பது குறித்து எனது பேட்டி இன்றைய(2-4-17) தி இந்து தமிழ்  நாளிதழில் வெளியாகியுள்ளது.
------------------------------------
திரு நாராயணசாமி நாயுடு அவர்கள்- நினைவலைகள்

சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் நலன் கருதி போராட்டங்களில் பங்கு பெற்றும் பல்வேறு போராட்டங்களையும் பொறுப்பேற்று நடத்தியவர். அவருக்கு  நானும் உறுதுனையாக இருந்துள்ளேன் என்பது  ஒன்று. இன்று தி இந்து நாளிதழில் திரு நாராயணசாமி அவர்கள் 60ஆண்டுகள் முன்பே விவசாயிகல் நலன் கருதி செய்த போராட்டத்தை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர் , அதே செய்தியில் என்னுடைய கருத்தைக் கேட்டும் பதிவு செய்து இன்றைய இதழில் வெளியாகியுள்ளது 

விவசாயசங்க வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் கவனித்துக்கொண்டேன் .விவசாயிகள் மீது ஏவபட்ட #ஜப்தி நடவடிக்கைகளை தடுத்தும் , #விவசாயிகளின் கடன் நிவாரண சட்டங்களில்  உரிமைகள் கிடைக்க கூடிய வகையில் வாதாடி விவசாயிகளுக்கு நிவாரணம்  அடியேன் 1970,80களில் பெற்று தந்தேன் . கோவில்பட்டி பயணியர் விடுதியில் மாரடைப்பால் நாராயணசாமி நாயுடு  இறந்த காலத்தில் (1984)அங்கு அவரோடு இருந்தவன் .கோவில்பட்டி பயணியர் விடுதிக்கு செல்லும்போது எல்லாம் பின் பக்கம் உள்ள வடக்கு பார்த்த அறையை பார்த்தாலே நாராயணசாமி நாயுடு  நினைவு வரும் .

#கோவில்பட்டியில் அவர் மறைந்ததால் அங்கு அவரின் முழு உருவ சிலையை வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்  . அவர்குறித்தான முழு வாழ்க்கை குறிப்புகளை என் சமுகவளைதளத்தில் பலதடவை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் .
..........................
தமிழகத்தில் விவசாயிகள் 1950லிருந்து போராடினாலும், 1967ல் முதல் முதலாக கோவை ஜில்லா விவசாய சங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே. சுந்தரம் அவர்கள் தலைமையில் துவக்கப்பட்து.  வி.கே. பழனிச்சாமி கவுண்டர் தலைவராகவும், என்.எஸ்.எஸ். மன்றாடியார் இணைத் தலைவராகவும், பி.ராமசாமி நாயுடு பொருளாளராகவும், சி.நாராயணசாமி நாயுடு செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்த அமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த கரூர் முத்துசாமி கவுண்டர், நீலகிரி நஞ்சா கவுடா, சாத்தூர் ராமமூர்த்தி, குலாம் மொய்தீன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த கோவை ஆர். கிருஷ்ணசாமி கவுண்டர், தென்காசி ஏ.ஆர். சுப்பையா முதலியார், சாத்தூர் சங்கிலி மற்றும் மதுராந்தகம் முத்துமல்லா ரெட்டியார், டாக்டர் சிவசாமி, டாக்டர் கொண்டல்சாமி, வி.கே. ராமசாமி, என்.எஸ். பழனிச்சாமி, கே. வரதராஜன், பால் பாண்டியன் போன்றோர் ஆரம்ப கட்டத்தில் விவசாய சங்கத்தை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சென்று விவசாயிகள் மத்தியில் எழுச்சியை உருவாக்கினர்.

குறிப்பாக சி. நாராயணசாமி நாயுடுவின் பங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாகும். அவருடைய தலைமையில் விவசாயப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.  கோவை செங்காலிப் பாளையத்தில் 6.2.1925ல் விவசாய குடும்பத்தில் பிறந்த நாராயணசாமி நாயுடு, விவசாயிகளின் உரிமை வேட்கைக்காக, இளைஞராக இருக்கும்பொழுதே போராட துணிந்தவர்.  1950களின் தொடக்கத்தில் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குவது 16 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது.  பம்பு செட்களின் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. 1957ல் இதை எதிர்த்து நாராயணசாமி நாயுடு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தி 16 மணி நேரம் விவசாயத்திற்கு மின்சாரத்தை பெற்றுத் தந்தார்.  அதன் பின் மின் கட்டண உயர்வை எதிர்த்தும் போராடினார்.  கடன் வசூல், ஜப்தி நடவடிக்கையை எதிர்த்தும் ஐயா நாராயணசாமி பல போராட்டங்களை நடத்தியதுண்டு. இந்தப் போராட்டங்கள் விளைவாக தமிழகமே விவசாயிகளை பார்த்தது. கோவை, கோவில்பட்டி போன்ற இடங்களில் கட்டைவண்டி போராட்டங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.  விவசாயிகள் போராடியதால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு பாலும், காய்கறிகளும் செல்லாமல் நகரவாசிகள் ஒரு வார காலம் அப்போது சிரமப்பட்டதெல்லாம் செய்திகள். இந்தப் போராட்டங்கள் குறித்து, நியூ யார்க் டைம்ஸ் இந்த மாட்டு வண்டிகளை பார்த்து “இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்” என்று அப்பொழுது எழுதியது.

அந்த காலகட்டத்தில் நாராயணசாமி நாயுடுவின் போராட்டத்தில் அடியேனும், விவசாய குடும்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களையும் ஈடுபடுத்திய நினைவுகளும் மனதில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் விவசாயிகளுடைய கடன் தொல்லைக்கு வருவாய் துறை அதிகாரிகள், விவசாயிகளின் வீட்டிலுள்ள பண்டபாத்திரங்களையும், கதவுகளையும் 1975 அவசரநிலை காலத்தில் பிடுங்கி சென்றதை எதிர்த்து வழக்குத் தொடுத்து ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்தியும், கடன் நிவாரணத்தையும் விவசாயிகளுக்கு அடியேன் பெற்றுத் தந்தது மனதிற்கு ஓர் ஆறுதலான செய்தி.  நாராயணசாமி நாயுடு சென்னைக்கு வந்தாலோ, கோவில்பட்டி பக்கம் வந்தாலோ அவருடன் இருப்பது வாடிக்கை. இன்றைக்கும் கோவில்பட்டி பயணியர் விடுதிக்கு செல்லும்போது 1984 தேர்தலின்போது, 21.12.1984ல் அதே பயணியர் விடுதியில் உள்ள வடக்கு அறையில் ஐயா நாராயணசாமி மாரடைப்பால் காலமானார். அங்கு செல்லும்போதெல்லாம் அவருடைய நினைவுகள் வந்துவிடும்.  கோவில்பட்டி நகரில் ஐயா நாராயணசாமி அவர்களுக்கு சிலை எடுக்கும் பணிகளையும் கவனித்து வருகின்றேன்.

ஐயா அவர்கள் ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பால் இந்த விவசாய அமைப்பை எடுத்து செல்ல விரும்பினார். ஒரு கட்டத்தில் மற்றவர்களுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் 1982ல் உழவர் உழைப்பாளர் கட்சியைத் துவக்கினார்.  அதே ஆண்டு செப்டம்ரில் பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும், 1984 செப்டம்பர் தேர்தலிலும் போட்டியிட்டார்.  இந்த கட்சியைவிட தமிழக விவசாயிகள் சங்கம்தான் எனக்கு நிறைவாக உள்ளது என்று அவர் சொன்னதை கேட்டுள்ளேன். தமிழக விவசாயிகள் சங்கமும், அதன் போராட்ட விவரங்கள் குறித்தும் நான் எழுதிய நூல் விரைவில் வெளிவர உள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுடைய தியாகத்தை நினைத்துப் பார்க்கவேண்டும். கோவை பெருமாநல்லூர், மல்லேகவுண்டபாளையம், அய்யம்பாளையம், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையம், சாத்தூர் அருகே உள்ள வெத்தலையூரணி, விருதுநகர் அருகே உள்ள மீசலூர், பாலவநத்தம், வேடசந்தூர், கோவில்பட்டி அருகே உள்ள அப்பணேரி, குருஞ்சாக்குளம், மதுரை அருகே உள்ள நொச்சோடைப்பட்டி, வேலூர் அருகே உள்ள ஒருகத்தூர், விருதுநகர் அருகே உள்ள வாகைகுளம், உடுமலைப்பேட்டை, திருத்தணி அருகே உள்ள கண்டிகை, விழுப்புரம் அருகே உள்ள வீரப்பெருமாள்புரம் போன்ற இடங்களில் போராடிய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். கோவில்பட்டி நகரில் மட்டும் 1970, 1991 ஆகிய வருடங்களில் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடந்தது.  மொத்தம் இதுவரை துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 70 வரை தியாகிகளின் பட்டியல் இடம்பெறுகிறது.

http://ksradhakrishnan.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
#விவாசாயசங்கஎழுச்சி 
#நாராயணசாமிநாயுடு
#கோவில்பட்டி
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
2/4/2017

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...