Thursday, April 13, 2017

காசு பணம் மணி மணி துட்டு அரசியல். (கண்ணியமிகு காயிதே மில்லத்)

காசு பணம் மணி மணி துட்டு அரசியல். 
(கண்ணியமிகு காயிதே மில்லத்)
--------------------------
கோட்டைகளுக்கு செல்ல வேண்டுமெனில் கோடம்பாக்கம் செல்ல வேண்டும் அல்லது கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்.  பொதுவாழ்வு படிகட்டுகளில் பயணித்து மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்புகள் சாமானியர்களுக்கு சாத்தியப்படாமல் போகின்றன. 

கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்த அகமது மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.  மலப்புரம் என்பது இன்றைய நாடாளுமன்ற தொகுதியின் பெயர். தொகுதி சீரமைப்புக்கு முன்னர் அந்த நாடாளுமன்ற தொகுதி #மஞ்சேரி தொகுதி என இருந்தது. இப்போது ஏன் காசு , பணம் , துட்டு , மணி மணி எனக் குறிப்பிட்டேன் என்பது புரியவரும். இளையர்களுக்கு புதிய செய்தியாகவும் ஆச்சர்யமூட்டும் செய்தியாகவும் இருக்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் கேரளாவில் உள்ள மஞ்சேரி தொகுதியில் அதாவது நேற்று வாக்குப்பதிவு நடந்த மலப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இன்றைய வேட்பாளர்களை போல  வேட்புமனு தாக்கல்  செய்துவிட்டு வீதிவீதியாக எனக்கு வாக்களியுங்கள் என கெஞ்சவில்லை, பணத்தை வாரி இரைத்தோ வாக்கு விலை வைத்ததும்  இல்லை. வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அவரது வழக்கமான பணியை செய்வார். பிரச்சாரம் முடிய இரண்டு நாட்கள் இருக்கும் போது வாக்கு சேகரிப்பார். இப்படியாகத் தான் மூன்று முறை நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.  பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் எனப்படும் பேருந்துகளில் அல்லது இரயில்களில் தான் பயணம் செய்வார். திருநெல்வேலி ஜங்க்ஸ்னில் இருந்து பேட்டைக்கு அரசு பேருந்துகளில் பயணிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நான் கல்லூரி செல்லும் காலங்களில் நானே கண்கூடாக பார்த்திருக்கின்றேன். ஒருமுறை அவருடன் பயணித்தும், பேசியும் இருக்கின்றேன். இன்று இப்படிப் பட்டவர்கள் அரசியலில் தலைத் தூக்க முடியுமா என்பது  சந்தேகம். மலப்புரம் என்றதும் காயிதேமில்லத் அவர்களின் நினைவுகள் நெஞ்சத்தில் நினைவலைகளாக எழும்பியது. 

உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.

#காயிதேமில்லத்
#பொதுவாழ்வில்_தூய்மை 
#காசு_பணம்_துட்டு_மணி_அரசியல் 
#மலப்புரம்
ksrposting
#ksradhakrishnanposting

கே.எஸ் .இராதாகிருஷ்ணன் 
13-04-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...