Thursday, April 27, 2017

சர் பிட்டி தியாகராயர்

#தியாகராயர் பிறந்தநாள்,
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான பிட்டி தியாகராயர் பிறந்ததினம் இன்று 165 ஆம் ஆண்டு(27-4-1852).அவரின் பெயராலே சென்னையில் தி நகர் அழைக்கப்படுகிறது .ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார் .காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடந்தபொழுது அதை சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கே உரியது .காந்தியடிகள் சென்னை வந்த பொழுது அவரை கோலாகலமாக வரவேற்றார்

அதற்கு முன்னரே சென்னை மகாஜன சபையை நிறுவி ஆங்கிலேய அரசிடம் கோரிக்கைகள் வைக்கும் பணியை செய்து வந்தார் .முக்கியமான அரசு பொறுப்புகளில், நிர்வாகத்தில் பிராமணர்களே பெரும்பாலும் நிறைந்து இருந்தார்கள். பிராமணர் அல்லாதவர்களுக்கு ஒரு அமைப்பு தேவை என யோசித்தார்கள். 1913 இல் #திராவிட சங்கம் உருவானது .மூன்றாண்டுகள் கழித்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் டி.எம். நாயர், பனகல் அரசர், இராம நியங்கர், தியாகராயர் என பிராமணர் அல்லாத எல்லா தலைவர்களும் தோற்று இருந்தார்கள். நவம்பர் 20 ல் எத்திராசு இல்லத்தில் “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' எனும் அமைப்பை உண்டு செய்வது என முடிவு செய்தார்கள் .அந்த சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டதுதான் 'ஜஸ்டிஸ்' எனும் இதழ். அதனால் 'நீதிக்கட்சி' என பெயர் பெற்றது அமைப்பு .
சென்னை மாநகராட்சியின் தலைவராக நீதிக்கட்சி முன்னோடி சர். பி.டி.தியாகராயர் இருந்தபோது வேல்ஸ் நாட்டின் இளவரசர் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் லார்டு வெல்லிங்டன்.தியாகராயரிடம்,சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் வேல்ஸ் இளவரசரை நீங்கள்தான் வரவேற்க வேண்டும். வரவேற்பின்போது நாங்கள் குறிப்பிடும் முறையில் ஆடை அணிந்து வரவேண்டும் என்று சொன்னார் ஆளுநர்.
தியாகராயர் கம்பீரமாக,"எங்களின் அடையாளத்தை விடுத்து ஆடை அணிய முடியாது .எப்பொழுதும் போல வெள்ளை ஆடை தான் அணிந்து வருவேன் .விருப்பம் இல்லாவிட்டால் நான் வரவேற்க வரவில்லை" என சொல்ல, வெள்ளை ஆடையுடன் வந்து வரவேற்க அனுமதி தரப்பட்டது .அதனால் வெள்ளுடை வேந்தர் என அறியப்பட்டார்
அடுத்து 1920 இல் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின் படி நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல்மேயர் என்கிற பெருமையை தியாகராயர் பெற்றார் .அப்பொழுது சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் அவர் கொண்டு வந்ததே இந்தியாவின் முதல்மதியஉணவுதிட்டம். அடுத்த வருடம் நடைபெற்ற மாகாணத்தேர்தலை காங்கிரஸ் புறக்கணிக்க, நீதிகட்சி வென்றது .முதல்வ பதவி இவரைத்தேடி வந்தபொழுது அதை சுப்பராயலு ரெட்டியாருக்கு விட்டுக்கொடுத்தார்.
மிகப்பெரிய செல்வந்தர் இவர் .#தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. எளிய மக்களுக்காக உழைக்க வேண்டும் என அரசியல் களம் புகுந்தார்.

#தியாகராயர்
#KSRadhakrishnanpostings
#ksrpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-04-2017

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...