Tuesday, April 4, 2017

விவசாயிகள் பிரச்சனைகள்

இந்த மாத ஏப்ரல்,2017 உயிர்மை இதழில் விவசாயிகள் பிரச்சனைகள் 
குறித்து எனது பத்தி :

விவசாயிகளே! உரிமைகளுக்கு ஆழ உழுங்கள்

வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்

 

தமிழகம் பெரும் வறட்சியில் வாடுகிறது; மரணத்தின் பிடியில் விவசாயிகள். கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் தமிழகத்தில் இந்தத் துயரத்தினால் 40விவசாயிகள் 2 பெண் விவசாயிகளும் உட்பட தற்கொலை மற்றும் வேதனையில் மரணம் அடைந்தனர். தூக்கு கயிறு, விஷம் மருந்து, அதிர்ச்சி மாரடைப்பு என்ற வகையில் இந்த துயரங்கள் நடந்தேறியுள்ளன. நாகை மாவட்டத்தில் மட்டும் சமீபத்தில் 15 விவசாயிகள் தற்கொலையிலும், கடன் தொல்லை வேதனையாலும் இறந்துள்ளனர்.  கடந்த 24.12.2016 அன்று ஒரே நாளில் மூன்று விவசாயிகள் ரணத்தில் துடித்து மறைந்துள்ளனர். 

இதுவரை கடந்த 26 ஆண்டுகளில் இந்திய அளவில் ஏறத்தாழ 6 லட்ச விவசாயிகளுக்கு மேல் தற்கொலையாலும், மன வேதனையாலும் இறந்துள்ளனர்.1995-லிருந்து 2013 வரை 2,96,438 விவசாயிகள் புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், விவசாயிகள் தற்கொலை 1980களிலிலே  துவங்கிவிட்டது. மராட்டிய மாநில விதர்பாவிலும், ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும், சத்தீஸ்கரிலும், உ.பி. என வடபுலத்தில் நடந்தன. இந்த கொடுமை தமிழகத்தில் 2012-லிருந்து நடக்க தொடங்கியது. இதைத் தடுக்க மத்திய - மாநில அரசுகளும் எந்த நடவடிக்கை எடுக்க இயலவில்லை. 

தற்போது தமிழகத்தில் வறட்சி மழையில்லாமல் ஏற்பட்டுள்ளது. சராசரியாக 75% சதவீதம் மழை அளவு பொய்த்துவிட்டது. தமிழ்கத்து இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 19% குறைவாகவும்,வடகிழக்கு பருவ மழை 61%சதவீதம் பொய்துவிட்டது என வானிலை அறிக்கை சொல்கின்றனர். மேலும், காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பு செயல்படுத்தவில்லை; முல்லை பெரியார், குமரி மாவட்ட நெய்யாறு,பாலாறு என அணைத்து தமிழக நதி நீர் ஆதாரங்கள் பிரச்னைகளில் இருப்பதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில், 10 ஆண்டுகளாக, 8.67 லட்சம் பேர், விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கிறது. விவசாயம் நஷ்டம் தரும் தொழிலாக மாறி வருகிறது.வயிற்று பிழைப்பிற்காக விவசாயிகள் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.

செப்டம்பர் 20-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டும், காவேரி டெல்டாவில் பயிர்கள் வாடி,வயல்வெளிகள் எல்லாம் பாளம் பாளமாக வெடித்துவிட்டன. நெல், கரும்பு, பருத்தி, ராகி, சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம், மரவள்ளிகிழங்கி, மிளகாய் பயிர் போன்ற அனைத்து பயிர்களும் வாடி தற்போது மாநிலம் முழுவதும் இதே நிலை. இதற்காக கடன் வாங்கி விவசாயி போட்ட தொகையும் வீனாகிபோய், வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்ற நிலைமை. பல லட்சக்கணக்கான ஏக்கர்கள் கையில் பணம் இல்லாமலும், மழை இல்லாமலும் தரிசாக விடப்பட்டது. விவசாயப்பணிகளுக்கு இவ்வாறான சிக்கலில் இருப்பதால் வேலைத் தேடி திருப்பூர், கோவை, சென்னை என்று மட்டுமல்லாமல் பம்பாய், டெல்லி சென்று போகும் அவல நிலை. 

தீவன பற்றாக்குறையால் தென் மாவட்டத்தில், கால்நடைகளை கேரளத்திற்கு அடிமாட்டு விலைக்கு நஷ்டத்தில் விற்று வருகின்றனர். குடிநீரும் பற்றாக்குறை, நிலத்தின் நீர் மட்டமும் குறைந்து விட்டது. இப்படியான நிலைமை இருந்தால் விவசாயம் எதிர்காலத்தில் கேள்வி குறியாகிவிடும். 

இந்த நிலைமைகளை போக்க, மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்;  

1. தமிழகத்தில் வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளை போர்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும்.

2. கருகிப் போன பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரமும்,கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50ஆயிரமும், நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற மாணாவாரி பயிர்களுக்கு ஏற்றவாறு இழப்பீடு விவசாயிகளுக்கு மாநில அரசு இழப்பீடு அளிக்க வேண்டும்.

3. தற்கொலையாலும், வேதனையாலும் மரணமடைந்த விவசாய குடும்பத்திற்கு உரிய நஷ்டயீடு அரசு வழங்கிட வேண்டும்.

4. கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை அறவே தள்ளுபடி செய்ய வேண்டும்.

5. ஜப்தி நடவடிக்கைகளை மாநில அரசு விவசாயிகள் மீது ஏவக்கூடாது-

6. முடங்கி போன கூட்டுறவு வங்கிகளை இயங்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. வறட்சி காரணமாக தரிசாக போட்ட நிலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 5,000 ரூபாய் இழப்பீடு மாநில அரசு வழங்க வேண்டும்.

8. கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை எளிதில், மலிவான விலையில் கிடைக்க ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும்.

9. கரும்பு விவசாயிகள் ஆலைகளுக்கு அனுப்பிய கரும்புகளுக்கு உரிய பணம் ஆலை நிர்வாக தராமல் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 228 கோடி ரூபாயும், தனியார் சர்க்கரை ஆலையில் 1100 கோடி ரூபாயும் விவசாயிகள் தரவேண்டிய பாக்கி இப்பவும் நிலுவையில் உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை நிலுவையில் வைத்துக் கொண்டு கரும்பு ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளை பல ஆண்டுகளாக வாட்டி வதைப்பதை போராடி பார்த்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. கரும்பு விவசாயிகள் இனி ஆலைகளுக்கு விற்க மாட்டோம் யார் வேண்டுமானாலும் வெட்டி எடுத்துச் செல்லுங்கள் என்று தண்டோரா அடிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டன. இப்படியும் பரிதாபநிலை.

10. விவசாய உற்பத்தி பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும். உதாரணத்திற்கு, பருத்தி விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற செலவுக்கான லாபம் கிடைப்பதில்லை. அப்படியே பருத்தி ஆலைகளுக்கு அளித்தாலும் உடனடியாக அதற்கான பணமும் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு காசோலை மட்டும் தருகின்றார்கள். விவசாயிகளுக்கு காசோலை பற்றி என்ன தெரியும்? விவசாயி அதற்கு தனியாக வங்கி கணக்கு ஆரம்பித்து அந்தக் காசோலையும் திரும்பி வரும்போது நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவலநிலை.

11. ஏரி, குளங்கள், பாசனாசீர்திருத்த வேண்டும்.நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947 ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றனர்.மதுரை, சென்னை மாநகர்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன.

இன்றைக்கு தமிழகத்தில் 18789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்து விட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல், நிலத்தடி நீரும் குறைந்து விட்ட்தால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய் விட்டனர். இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல், மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்து விட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்த்தனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்து விட்டன. இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும், ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

12. உடனடியாக மத்திய அரசிலிருந்து வறட்சி நிவாரண பணிகளுக்கு ஆன செலவை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உடனே பெற வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேறினால் தான் விவசாயமும், விவசாயிகளும் பாதுக்காக்கப்படுவார்கள்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு உரிய அக்கறை நாம் எடுத்துக் கொள்ளவில்லை. நேரு காலத்திலிருந்தே தொழிற்சாலைகளுக்கு அளித்த முக்கியத்துவம்  விவசாயத்திற்கு காட்டவில்லை. அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. ஐந்து ஆண்டு திட்டம் என்று ரஷ்யாவின் கொள்கையை நேரு சில மாற்றங்களோடு கையாண்டார். அதன்  விளைவாக தொழிற்சாலைகளை நிர்மாணித்த மாதிரி விவசாயத்தை பிராதனமாக கருதாமல் புறக்கணித்தால் படிப்படியாக விவசாயம் தோய்ந்து போனது. இதனை வட இந்திய தலைவர்களான சரண்சிங், மோகன் தாரியா இந்தப் போக்கை கடுமையாக எதிர்த்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனும், நேருவின் இந்த அணுகுமுறையை கண்டித்தார். நாட்டு விடுதலைக்கு பின்பு, உத்தமர் காந்தியும் அவர் சகாக்கள் ஜே. குமரப்பா, கிருபளானி, பட்டவர்தன் போன்றவர்கள் கிராமிய பொருளாதாரத்திற்கும், சுயபூர்த்தி விவசாயத்திற்கும் குரல் கொடுத்தனர். கிராமங்கள் தான் உண்மையான இந்தியா. விவசாயிகள் முன்னேற்றத்திற்கு கிராம ராஜ்ஜியமும், கூட்டுறவும் அடிப்படை காரணிகள் என்று அப்போதே கூறினார்கள். அந்தக் கருத்துக்கள் தான் இன்றைய கிராம சபைகள் :  ராஜுவ் பிரதமராக இருந்த போது சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டு கிராம சபைகள் நிறுவப்பட்டன.

தமிழகத்தில் 1970 இறுதியிலும் 1980களிலும்  விவசாயப் போராட்டம் சி. நாராயண சாமி நாயுடு தலைமையில் கிளர்ந்து விட்டு எழுந்தன. கிருஷ்ணசாமி கவுண்டர் போன்றவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தில்  நடந்த போராட்டங்களில் 1972லிருந்து 1992 வரை காவல் துறை துப்பாக்கி சூட்டில் 50க்கு மேற்பட்ட விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர். கோவில்பட்டி, குருஞ்சாக்குளம், சாத்தூர், வெத்தலையூரணி, வேடசந்தூர், திருவண்ணாமலை, திருத்தனி, பெத்தநாயக்கன் பாளையம், கோவை என பல இடங்களில் துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர். தமிழகமே விவசாயிகள் போராட்டத்தில் அப்போது கொந்தளித்தது. பொது உடைமை கட்சியை சார்ந்த விவசாய சங்கங்களும் கோவில் பட்டி எஸ். அழகிரி சாமி, ஆதிமூலம் மற்றும் வீரய்யன் தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தினர். இதே காலகட்டத்தில் உத்திரபிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி பகுதிகளில் திக்காயத், மராட்டியத்தில் சரத் ஜோஷி, ஆந்திரத்தில் செங்கால் ரெட்டி, கர்நாடகத்தில் நஞ்சுண்ட சாமி போன்றோர்கள் எழுச்சி மிக்க போராட்டங்களை நடத்தினர். தற்போது தமிழகத்தில் விவசாய சங்கங்கள் எழுச்சி போராட்டங்ளை நடத்த முடியாமல் வலுவிழந்து இருப்பது வேதனையான விடயம்.

 பலர் ஆளுமைகள் முன்னெடுத்த இந்தப் போராட்டம்; இன்றைக்கு விவசாயிகள் பல குழுக்களாக ஆகிவிட்டனர். டெல்டா பாசன விவசாயிகள், கரும்பு விவசாயிகள், மஞ்சள் விவசாயிகள், ரப்பர் விவசாயிகள், தேயிலை விவசாயிகள் என பல பிரிவுகளாக பிரிந்ததால் விவசாயிகளுடைய முந்தைய வீரியம் இல்லாத காரணத்தினால் ஆளவந்தார்களுக்கு விவசாயிகளின் மேல் இருந்த அச்சமும், அக்கறையும் போய்விட்டது. தன்னலம் மற்ற அப்பாவி சம்சாரிகளுக்கும்  இந்த அரசியல் சூழல் புரியாமல் இருப்பதுதான் வேதனையாக உள்ளது.

விவசாய வீட்டில் பிறந்து, நாராயணசாமி நாயுடு காலத்தில் நீதிமன்றத்திலும் மாணவர்களிடையே விவசாய அமைப்புகளை அமைத்து போராடியவன் என்ற நிலையில் இன்றைய விவசாயின் ஒற்றுமையின்மையை பார்க்கும் போது, கவலை தருகின்றது.  விவசாயிகளே! உங்களின் சுயமரியாதையும், எழுச்சியும், மலர்ச்சியும் திரும்பக் காண வேண்டும். நீங்கள் வாழ்ந்தால்தான் கிராமங்கள் வாழும், நாடும் வாழும். எப்படி வயல்வெளி ஆழ உழுகின்றீர்களோ, அதைபோல உங்கள் உரிமைகளை ஆழ உழுங்கள். நிச்சயமாக கால, தேச வர்த்தமான்கள் உங்களை பார்த்து சலியூட் அடிக்கும்.

 அனைத்து விவசாயிகளே ஒன்று கூடுங்கள்; போராடுங்கள்; உங்கள் நியாயமான உரிமையை பெறுங்கள்; நீங்கள் தான் நாட்டின் பிதாமகன்கள்.
#விவசாயிகள்பிரச்சனைகள் 
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
4/4/2017


No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...