Saturday, April 8, 2017

நேரு படேல் மோதல்களும், சர்ச்சைகளும்...

நேரு படேல் மோதல்களும், சர்ச்சைகளும்...
------------------------------------------
விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே காங்கிரஸில் மித வாதம், தீவிரவாதம் என இருந்தது. நேதாஜி தீவிரவாதியாக திகழ்ந்தார்.
மிதவாதமாக, அமைதியாக உத்தம காந்தியார் போராட்டத்தை நடத்தினார். காங்கிரஸுக்குள்ளே சில பிளவுகளும் இருந்தன.
பட்டாபி சீதாராமைய்யா, டாண்டன் ஆகிய இருவரும் எதிரெதிரே காங்கிரஸ் தலைவராக போட்டியிட்ட போது ஏற்பட்ட சர்ச்சைகள்.
நேருவுக்கும், படேலுக்கும் கொள்கை அணுகுமுறையில் ஏற்பட்ட சிக்கல்கள். ராஜேந்திர பிரசாத், ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி போன்றோர் நேருவின் கருத்துக்கு மாறுபட்டு இருந்தார்கள்.
படேல் பிரதமர் பதவிக்கு நேருக்கு எதிராக போட்டியிட மனுத்தாக்கல் செய்யவும் தயாராகிவிட்டார். இதை அண்ணல் காந்தி கேள்விப்பட்டு, படேலை போட்டியிலிருந்து விடுவித்துக் கொள்ள சொன்னதால் படேலும் போட்டியிலிருந்து விலகினார்.
ஆனால் நேருக்கும், படேலுக்கு தொடர்ந்து சர்ச்சைகளும், எதிர்வினைகளும் நடந்த வண்ணம் இருந்தன.

காஷ்மீர் பிரச்னையில் நேரு எடுத்த முடிவுகளை படேல் கடுமையாக எதிர்த்தார்.
படேல் மறையும் வரை இருவருக்கும் நிழல் யுத்தமாக பிரச்னைகளும், போக்குகளும், எதிர்திசை அணுகுமுறைகளும் இருந்தன.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. படேலின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு யார் என்ற விவாதத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் மற்றும் மதவாத கோஷங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையில் நேருவும் படேலும் வெவ்வேறு தனித்தனியான கொள்கைகளை, தன்மைகளை, கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடு அடிப்படையானது.

நவீன இந்தியாவை உருவாக்க காங்கிரசை கட்டுப்பாடுள்ள ஜனநாயக அமைப்பாக மாற்ற வேண்டியது அவசியம் என்று படேல் விரும்பினார். அதன் முதல் கட்டமாக தனியாக உறுப்பினர்கள் கட்சி அமைப்பு மற்றும் திட்டம் கொண்டிருப்பவர்களை காங்கிஸ் கட்சியின் உறுப்பினர்களாக அனுமதிக்கும் இரட்டை உறுப்பினர் கொள்கையை எதிர்த்தார். இந்த இரட்டை உறுப்பினர் முறையைத் தடை செய்யும் தீர்மானத்தை 1948ல் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் நிறைவேற்ச் செய்தார் படேல். இதனால் காங்கிரசின் ஒரு அங்கமாக இருந்து வந்த காங்கிரஸ் சோசலிச கட்சி காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தது. இது நேருவிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதனால் கட்சியை மீண்டும் பலப்படுத்த நேரு தொடர்ந்து முயற்சித்தார்.

1950ல் படடேலின் மரணத்திற்கு முன் காங்கிரஸ் தலைமை பொறுப்பை கைப்பற்ற கட்சிக்குள் தீவிர போராட்டமே நடைபெற்றது. இதனால் கட்சி தலைவர் பொறுப்பிற்கு நடைபெற்ற தேர்தலில் பட்டேல் ஆதரித்த புருஷோத்தம் தாஸ் தான்டனுக்கு எதிராக ஜெ.பி.கிருபாளினியை தனது தரப்பு வேட்பாளராக நேரு ஒருதலைபட்சமாக அறிவித்தார். தான்டன் விஷயத்தில் நேருவிற்கும், படேலுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிச்சத்திற்கு வரத் துவங்கியது. இதன் பிறகு தான்டனை நேரு தொடர்ந்து பல்வேறு விதங்களில் விமர்சித்து வந்தார். டில்லியில் நடைபெற்ற அகதிகள் மாநாட்டில் தான்டன் கலந்து கொண்டதையும் நேரு கடுமையாக விமர்சித்தார். நேரு கையாண்ட இந்த போலி மதசார்பின்மை, கட்சியின் கொள்கைகளுக்கும் பண்புக்கும் எதிராக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்படாமல் பல சமயங்களில் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது.
..
கட்சி தலைவராக தான்டன் தேர்வு செய்யப்பட்டால் தான் காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலகி விடப் போவதாகவும் நேரு மிரட்டல் விடுத்தார். இறுதியாக தலைவர் தேர்தலில் தான்டன் 1306 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நேரு நிறுத்திய கிருபாளினியால் 1092 ஓட்டுக்கள் மட்டுமே பெற முடிந்தது. சொன்னபடி நேருவும் கட்சியில் இருந்து விலகவில்லை.

படேலின் மரணத்திற்கு பின் கட்சிக்குள் இருந்த ஜனநாயக கட்டுப்பாடு காணாமல் போனது. நேருவின் ஆதரவாளரான எஸ்.கே.சின்கா பீகாரின் முதல்வராக்கப்பட்டு காங்கிரஸ் காரிய கமிட்டியிலும் இணைந்தார். பின்னர் நேருவின் நிர்பந்தத்தால் லோக்சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான்டனுக்கு எதிராக சக்ரவியூகத்தை நேரு கையாண்டார். அதன் விளைவாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலக தான்டனுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. இறுதியாக தான்டன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால் பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ந்து 4 ஆண்டுகள் தலைவர் பதவியில் தான்டன் தொடர்ந்தார்.

நேருவிற்கும் படேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது. அஜ்மீர் வகுப்புவாத கலவரம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஷங்கர் பிரசாத்தை தலைமை செயலராக நியமிக்க படேல் உறுதியுடன் இருந்தார். ஆனால் நேரு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன் பின்னர் ஹச்.வி.ஆர்.ஐயங்காரை தற்காலிக செயலாளராக நியமித்தார். இதுவே இவர்கள் இருவருக்கிடையேயான கொள்கைகளுக்கிடையே மோதலாக உருவானது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக சட்ட ஒழுங்கை பற்றி கவலைப்படாமல் சிறுபான்மையினருக்கு அதிக சலுகை வழங்க வேண்டும் என நேரு வலியுறுத்தினார். மதக்கலவரங்களின் போது பயங்கரவாதிகள் என சிறுபான்மையினரை கைது செய்ய நேர்ந்தால் அவர்களுக்கு இணையாக இந்துக்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் நேரு தெரிவித்தார். இதனை படேல் ஏற்றுக் கொள்ளவில்லை. இவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மகாத்மா காந்தியிடம் ராஜினாமாவை அளித்தனர். ஆனால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் வேறு வழியின்றி இருவேறு கொள்கைகளைக் கொண்ட இருவரும் ஒரு விசித்திர கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினர்.

இந்திய வரலாற்று புத்தகங்களிலும், வரலாற்று குறிப்புகளிலும் இதுபோன்ற வேற்றுமைகள் மறைக்கப்பட்டும், புறம்தள்ளப்பட்டும் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே குடியுரிமை உள்ள ஒரே நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என்று அரசியல் நிர்ணயசபை உறுதி அளித்திருந்தது. ஆனால் நேருவின் குறுகிய நோக்கத்தால் அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. அவர் தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்ற வாத அடிப்படையில் ஓரங்கட்டினார். இத்தகைய போலி மதசார்பின்மை கொள்கை காங்கிரசில் புதிய தலைவர்கள் உருவாவதை தடுத்தது. இந்த போக்கு குறித்து அன்றைய காங்கிரஸ்காரர் டி.பி.மிஸ்ரா கூறுகையில், “களிமண்ணில் இருந்து தலைவர்களை உருவாக்கினார் காந்திஜி; ஆனால் நேருவின் தலைமையோ அந்த தலைவர்களை வெறும் ஜடங்கள் ஆக்கிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

#நேருபடேல்மோதல்களும்
#காங்கிரஸ்
#காந்தி
#congress
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
8/4/2017

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...