Friday, April 7, 2017

திரும்ப அழைத்தல் Recall

திரும்ப அழைத்தல் Recall(1)

தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல்
----------------------------------------------------------------------------
இந்தியாவில் முதன் முதலாக, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண். இன்றைக்கு சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் முறை வாக்காளர்களுக்கு உள்ளது.

பிரிட்டனில் மக்களுக்கு திருப்தி அளிக்காத, தவறு செய்யும் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது பாராட்டத்தக்கது. நாட்டின் இறையான்மை என்பது அந்நாட்டின் மக்களிடமே உள்ளது. இறையான்மையின் தூய்மையை பாதுகாக்க வேண்டுமென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேர்மையாகவும், தங்களுடைய கடமைகளை ஆற்றக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அப்படி தவறும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் உரிமை வாக்களித்த மக்களுக்கு உரிமை உண்டு என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த மியாமர் நாட்டை சேர்ந்த உதாண்ட் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும்என்றார்.விவாதம் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைப்பது குறித்து, 1993 தினமணியில் நான் எழுதி வெளிவந்த கட்டுரை, எனது உரிமைக்குக்கு குரல் கொடுப்போம் நூலில் உள்ளது.

அது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது :

#தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களுக்கு பல உறுதி மொழிகளை அளிக்கின்றன. இப்படிப்பட்ட பிரகடனங்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிச்சயம் வகுக்கும் என்ற உறுதியைத் தருவதாகும். நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல், சமூகச் சூழ்நிலைகளின் காரணமாக தேர்தல், அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவது நடைமுறையில் சற்று கடினம்தான். தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் கிட்டத்தட்ட 80 சதவீதம் தங்கள் ஆட்சியின் காலத்தில் நடைமுறைப்படுத்தி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்வது அரசியல் கட்சிகளின் ஜனநாயக கடமையாகும். அவ்வாறு தேர்தல் காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென்றால், தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்குச் சமமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், மக்களின் திருப்திக்கு மாறாகவும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தாமல் இருந்தால், ஆட்சியிலிருந்து திரும்ப அழைக்கும் (Right to Recall) உரிமை மக்களுக்குத் தரப்பட வேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மை அந்த நாட்டின் மக்களே ஆவார்கள். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது வெறும் மேடை முழக்கமாக மட்டும் இருக்கக் கூடாது.

திரும்ப அழைத்தல் என்ற முறை ஜோன்ஸ் ஙண் ஹாரியான் (Tex Ch. App. 109 SW - 21 - 251,254 Black Law Dictionary 1989 Edition, Jones Vs Harian) என்ற வழக்கிலிருந்து உருவகப்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள், தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துதல், இலஞ்சம் வாங்குவது, உறவினர்களுக்குச் சலுகைகள் (Nepotism) போன்ற ஜனநாயக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் திரும்ப அழைத்தல் கோட்பாடு ஒரு ஜனநாயக நாட்டில் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவில் லோக்பால் என்ற மசோதா, ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில், முதன் முதலில் திரும்ப அழைத்தல் என்ற கோட்பாட்டுக்கு குரல் கொடுத்தவர் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான்.

எடுத்துக்காட்டிற்கு சொல்ல வேண்டுமானால், காவிரிப் பிரச்சினையில் காவிரி விசாரணை தீர்ப்பாணை இடைக்கால நிவாரணமாக கர்நாடக அரசை தமிழகத்திற்கு தண்ணீர் விடக் கோரியும், கர்நாடக அரசு சற்றும் சிந்திக்காமல் மௌம் சாதிக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவிரிப் பிரச்சினையில் காவிரி தீர்ப்பாணயம், இடைக்கால நிவாரணம் அளிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்படிப்பட்ட சாதகமான தீர்ப்பு இருந்தும், தமிழக அரசு அதை சற்றும் சிற்திக்காமல் இருந்தது. தற்பொழுது, முதலமைச்சர் காலங்கடந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறினால்கூட ஆட்சியாளர்களைத் திரும்ப அழைக்கும் முறை ஜனநாயகத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.
இதேபோல மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுகொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு பல குழுக்களை அமைத்தும், இந்தக் குழுக்களின் அறிக்கையினை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்ட பொழுதும், மத்திய அரசு இந்தத் திட்டத்தைப் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் ஆகும். இப்படிப்பட்ட செயலுக்குக் கூட, மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களால் திரும்ப அழைக்கும் உரிமையை ஒரு கொள்கையளவில் செயல்படுத்தலாம்.

இதுமட்டுமன்று, ஒரு குறிப்பிட்ட தொகுதி நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பணி, நடவடிக்கைகள் தொகுதி மக்களுக்கு திருப்தி அளிக்காமலிருந்தால் அவரை திரும்ப அழைக்கும் உரிமையை, அக்குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து வருட காலம் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக, தான்தோன்றித்தனமாக ஆள முற்படுபவர்களுக்கு திரும்ப அழைக்கும் முறை ஒரு வாய்ப்பாக Checks and Balances இருக்கும்.
 அமெரிக்கா உள்ளாட்சி  அமைப்பில், ஸ்விட்சர்லாந்து, கனடா,
உக்ரைன்,வெனிஸுல போன்ற
பல நாடுகள் திரும்ப அழைக்கும்
முறை உள்ளது 
சோவியத் அரசியல் சட்டத்தில் (1936) அரசியல் சாசனப் பிரிவு 106இல் இந்தக் கொள்கைத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், தங்களுடைய அரசியல் தன்மையையும், தங்களுடைய தொகுதி மக்களுக்கு, கண்காணிக்க உரிமையுள்ளது என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தவறினால், தங்களை திரும்ப அழைக்கும் உரிமை தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. சோவியத் நாட்டில் இவ்வாறு மக்கள் பணியில் தவறிய உறுப்பினர்கள் பல சமயங்களில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். இந்தக் கொள்கை பாராட்டுக்குரிய தன்மை கொண்டுள்ளதாகும். ஆனால், இன்றைக்கு சோவியத் நாடு சிதறுண்டு இருக்கிறது என்பது வேறு விவகாரம்.
திரும்ப அழைக்கும் செயல்முறையை நம் தேர்தல் கமிஷன் ஆராய வேண்டும். சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறிவிட்டால், தன்னுடைய பதவியை இழக்கிறார். அதேபோல தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களுக்குப் பணியாற்றத் தவறினால், தங்களுடைய பதவியை இழக்கக் கூடிய தன்மையை, நம் இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வரவேண்டும்.

திரும்ப அழைக்கும் முறையைக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழி முறைகளை பல்வேறு தரப்பினர்களை அணுகி, ஆலோசனைகளைப் பெற்று, இந்தக் கோட்பாட்டை நெறிப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வரலாம். சமீபத்தில் நீதித் துறையிலும் ஊழலென்று தினமும் தினசரிகளில் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. நீதி, நிர்வாக, ஆட்சி மன்றங்களில் பங்கேற்கும், மக்களின் பல்வேறு பிரதிநிதிகள், அஞ்சித் தங்களுடைய ஜனநாயகப் பணிகளைச் செவ்வனே செய்ய ஒழுங்குப்படுத்துவதே திரும்ப அழைத்தல் கோட்பாடாகும். இதனால் அரசியலிலும், பொது வாழ்விலும் தூய்மை ஏற்படும்.
திரும்ப அழைக்கும் கொள்கை, நடைமுறைக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் தூய்மை பெறும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மக்களின் பிரதிநிதிகள் செம்மையாக ஆற்றுவர். ஆனால், இந்தக் கொள்கையை எந்த அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுமா என்று இதுவரை பிரகடனப்படுத்தவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.
#திரும்பஅழைக்கும்முறை
#RighttoRecall
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
23.02.2017.
...........................

திரும்ப அழைக்கும் முறை. Right to recall.(2)
=======================

மக்கள் உரிமையுடன் வாக்களித்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட  மக்கள் பிரதிநிதிகள் சரியாக செயல்படாத பொழுது அவர்களை அந்த பொறுப்பில் இருந்து திரும்ப பெறும் உரிமையை இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்க வேண்டும். இதனை இந்தியாவின் மர்ம மனிதன் என போற்றப்பட்ட எம்.என்.ராய் 1944ல்  இதனை வலியுறுத்தினார். முன்னாள் மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி இதனை வலியுறுத்தினார். இந்தியாவில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் இந்த சட்டம்
பிலிப்பைன்ஸ், வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகளிலும், அமெரிக்கா வின் அலாஸ்கா, ஜார்ஜியா  மாநிலங்களிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளான போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா ஆகியவற்றிலும்.
சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சில மாநிலங்களிலும் இந்த முறை செயல்பாட்டில் உள்ளது.  கடந்த 2011ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசும் பரிந்துரை செய்தது.  இது அரசியலில் இராஜதர்மம் என்று கூறப்பட்டது. 

ஓட்டுச்சீட்டு ஜனநாயகத்தில் மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஓட்டுப்போடுவதே உரிமையா? ஒருமுறை ஓட்டளித்து விட்டால் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்யமுடியாது என்பது என்னவிதமான பங்களிப்பை இந்த தேர்தல்முறை மக்களுக்கு வழங்குகிறது? திருப்பி அழைக்கும் அதிகாரமில்லாத தேர்தல்முறை குருடனை கைகளைக் கட்டி காட்டில் விட்டுவிட்டு நடக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறோம் என்பது போன்றது.
இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம் ஒன்றை நடத்த உள்ளோம்.
இல்லையெனில் ஐனூறுக்கும் , ஆயிரத்துக்கும்  அடமானம் வைக்கும் வழக்கம் வளர்ந்துக் கொண்டே இருக்கும், திருடர்களும் தினகரன்களும் அரசியலில் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள்..

ஜனநாயகத்தின் அடிப்படை நாடாளுமன்ற முறையாகும். மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்துப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறோம். இன்றைக்கு நாடாளுமன்றம் நடக்கின்ற விதம் வேதனையைத் தருகிறது. மரபுகள் மீறப்படுகின்றன. ஜனநாயக அமைப்புகள் பாழ்பட்டால் மக்கள் ஆட்சிக்குக் குந்தகம் ஏற்படும். இன்றைக்கு நாடாளுமன்றத்தில் வெட்டிக் கூச்சல், குழப்பங்கள், சண்டைகள் என நாடாளுமன்ற அவை ஒத்திவைப்புகள் நடைபெறுகின்றன. பல முக்கியமான பிரச்சினைகள் கூட அங்கே விவாதிக்கப்படாமல் ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாக சில பணிகள் நடக்கின்றன. சட்டங்களை இயற்றவும், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து கவனிக்கவும் என்ற பல பொறுப்புகள் நாடாளுமன்றத்திற்கு உண்டு. நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேச வாய்ப்புகள் வழங்கப்பட்டும், பொறுப்பாக அவை நடப்பதில்லை.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை நடைபெறும். வரவு – செலவுக்கான கூட்டத் தொடர் பிப்ரவரியிலிருந்து மே வரை நடக்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெறும். குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கும். 1952இலிருந்து இந்த மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. இன்றைக்குப் படிப்படியாக நாடாளுமன்றப் பணிகள் திருப்தியாக நடக்கவில்லை என்று அனைவரும் கருதக்கூடிய நிலைக்கு நிலைமைகள் உள்ளன. சமீபத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் முறைப்படி நடக்கவில்லை. சட்ட முன்வடிவுகள், தீர்மானங்கள், விவாதங்கள் யாவும் பெயருக்குப் பேசப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. விரிவான விவாதங்கள், விளக்கங்கள் மக்கள் நலனையும் நாட்டு நலனையும் முன்னெடுத்துச் செல்கின்ற செயல்பாடுகள் இல்லை. இன்றைக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நாடாளுமன்ற நடவடிக்கைகள் இருக்கின்றன. அதேபோல மாநிலங்களவைக்குப் பொறுப்பான தகுதியான திறனான பெருமக்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது முன்பு வாடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது இந்தத் தகுதியெல்லாம் தேவையில்லை; அரசியல் தலைவர்களின் குடும்பங்களுக்குச் சலாம் போடுபவர்கள் மாநிலங்கள் அவைக்குச் செல்லலாம் என்ற நிலையை சில அரசியல் கட்சிகள் உருவாக்கி விட்டன. தகுதியே இன்றைக்குத் தடையாக இருக்கிறது. சிந்திக்கவும், ஆழ்ந்த வாசிப்பு உள்ளவர்களும், உழைப்பைத் தங்கள் கட்சிகளுக்காக வழங்கியவர்களும் மாநிலங்களவைக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட தரமற்ற நடவடிக்கைகளால் நாடாளுமன்ற ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கற்றறிந்த ஜாம்பவான்கள் கடந்த காலங்களில் இருந்தனர். எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களுடைய வாதங்களை ஏற்று ரசித்தவர் அன்றைய பிரதமர் பண்டித நேரு.

இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்? விமானத்தில் பறக்க வேண்டியது; நாடாளுமன்ற லாபியில் கையெழுத்து போட வேண்டியது; தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பளம், வேறு சலுகைகளைப் பெற்றுக் கொண்டு சிபாரிசுகள் வேண்டி அமைச்சர்களின் வீடுகளுக்குப் போக வேண்டியது; தங்களது சொந்த வேலைகளைப் பார்த்துக் கொள்வது என்று மாறிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காகவே இருக்கின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்றம் கூடும் நாள்களும் படிப்படியாகக் குறைந்துவிட்டன. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக உள்ளது.

இந்திய நாடாளுமன்றம், 1952ஆம் ஆண்டு 103 நாள்களும்; 1953 மற்றும் 1954ஆம் ஆண்டுகளில் 137 நாள்களும்; 1955ஆம் ஆண்டு 139 நாள்களும்; 1956ஆம் ஆண்டு 151 நாள்களும்; 1957ஆம் ஆண்டு 104 நாள்களும்; 1958ஆம் ஆண்டு 125 நாள்களும்; 1959ஆம் ஆண்டு 123 நாள்களும்; 1960ஆம் ஆண்டு 121 நாள்களும்; 1961ஆம் ஆண்டு 102 நாள்களும்; 1962ஆம் ஆண்டு 116 நாள்களும்; 1963 மற்றும் 1964ஆம் ஆண்டுகளில் 122 நாள்களும்; 1965ஆம் ஆண்டு 113 நாள்களும்; 1966ஆம் ஆண்டு 119 நாள்களும்; 1967ஆம் ஆண்டு 110 நாள்களும்; 1968 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் 120 நாள்களும்; 1970ஆம் ஆண்டு 119 நாள்களும்;

1971ஆம் ஆண்டு 102 நாள்களும்; 1972ஆம் ஆண்டு 111 நாள்களும்; 1973ஆம் ஆண்டு 120 நாள்களும்; 1974ஆம் ஆண்டு 119 நாள்களும்; 1975ஆம் ஆண்டு 63 நாள்களும்; 1976ஆம் ஆண்டு 98 நாள்களும்; 1977ஆம் ஆண்டு 88 நாள்களும்; 1978ஆம் ஆண்டு 115 நாள்களும்; 1979ஆம் ஆண்டு 66 நாள்களும்; 1980ஆம் ஆண்டு 96 நாள்களும்; 1981ஆம் ஆண்டு 105 நாள்களும்; 1982ஆம் ஆண்டு 92 நாள்களும்; 1983ஆம் ஆண்டு 93 நாள்களும்; 1984ஆம் ஆண்டு 77 நாள்களும்; 1985ஆம் ஆண்டு 109 நாள்களும்; 1986ஆம் ஆண்டு 98 நாள்களும்; 1987 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் 102 நாள்களும்; 1989ஆம் ஆண்டு 83 நாள்களும்; 1990ஆம் ஆண்டு 81 நாள்களும்;

1991ஆம் ஆண்டு 90 நாள்களும்; 1992ஆம் ஆண்டு 98 நாள்களும்; 1993ஆம் ஆண்டு 89 நாள்களும்; 1994ஆம் ஆண்டு 77 நாள்களும்; 1995ஆம் ஆண்டு 78 நாள்களும்; 1996ஆம் ஆண்டு 70 நாள்களும்; 1997ஆம் ஆண்டு 65 நாள்களும்; 1998ஆம் ஆண்டு 64 நாள்களும்; 1999ஆம் ஆண்டு 51 நாள்களும்; 2000ஆம் ஆண்டு 85 நாள்களும்; 2001ஆம் ஆண்டு 81 நாள்களும்; 2002ஆம் ஆண்டு 84 நாள்களும்; 2003ஆம் ஆண்டு 74 நாள்களும்; 2004ஆம் ஆண்டு 53 நாள்களும்; 2005ஆம் ஆண்டு 85 நாள்களும்; 2006ஆம் ஆண்டு 77 நாள்களும்; 2007ஆம் ஆண்டு 66 நாள்களும்; 2008இல் இதுவரை 32 நாள்களும் கூடியது.

1990இலிருந்து இன்று வரை நாடாளுமன்றம் கூடியது இரட்டைப்படை நாள்களில் மட்டுமே. இதற்கு என்ன காரணம்? நாம் அனுப்பிய பிரதிநிதிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காக்கத் தவறியது மட்டுமல்ல; தங்களது கடமையையும் மறந்து விட்டனர். உலக நாடுகளில் பல நாடாளுமன்றங்கள் வருடத்திற்கு சராசரியாக 75 சதவீத நாள்கள் நடைபெறுகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டுமே இந்த சரிவு. நாள்கள் குறைந்தது போன்றே ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தின் பணி நேரமும் குறைந்து வருகிறது. 2000ஆம் ஆண்டில் மக்களவை 5.50 மணியளவாகவும், மாநிலங்களவை 4.40 மணியாகவும் இருந்தது. இது படிப்படியாகக் குறைந்து தற்போது முறையே 4.30 மணியளவாகவும், 3.30 மணியளவாகவும் குறுகிவிட்டது.

மொத்த சட்ட முன்வடிவுகள் சராசரியாக 75 அறிமுகமாகும். அவற்றில் சுமார் 65 மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படுகின்றன. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் அதிகபட்சமாக 20 கேள்விகள் வரும். ஒரு கேள்விக்கு சுமார் 6 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இதில் துணைக் கேள்விகளைக் கேட்கலாம். இதை அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும். குறைந்தபட்சம் மக்களவை ஆறு மணி நேரமும், மாநிலங்களவை ஐந்து மணி நேரமும் நடைபெற வேண்டும். சூழ்நிலையைப் பொறுத்து நேரத்தை நீட்டிக்கலாம்.

அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் நாடாளுமன்றம் நடைபெறும். அங்கு நாடாளுமன்றத்திற்கு விடுமுறை மட்டும் உண்டு. அங்கே கூட்டம் நடைபெறுவதற்கு ஆட்சிõயாளரின் ஒப்புதல் தேவைப்படுவதில்லை. இந்தியாவில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற வேண்டுமெனில் ஆட்சியாளரின் ஒப்புதல் தேவை. நாடாளுமன்றக் குழுக்களின் பணிகளும் திருப்தியாக இல்லை. இந்தக் குழுக்கள் சுற்றுப்பயணங்கள், பயணப்படிகள் என்ற நோக்கங்களிலேயே செயல்படுகின்றன.

இப்படி நாடாளுமன்ற முறையில் ஆரோக்கியமான போக்கு மாறி, தனி மனிதரின் நலன் முன்னே நிற்கிறது. 1952இலிருந்து 1974 வரை 100 நாள்கள் கூடிய நாடாளுமன்றம் படிப்படியாக குறைந்து தற்போது 2008இல் இதுவரை 32 நாள்கள் மட்டுமே கூடியுள்ளது. நாடாளுமன்ற விவாதங்களை ஆட்சியாளர்களும் எதிர்கொள்ள வேண்டும். இந்திய அமெரிக்க அணுசக்தி பிரச்சினையிலும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தற்போதைய மத்திய அரசு நடந்து கொண்ட முறை அனைவரையும் தலைகுனியச் செய்தது. நாம் அனுப்பும் பிரதிநிதிகள் இப்படி நடந்து கொண்டால் நாம் என்ன செய்ய முடியும்?

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளுக்காக உறுப்பினர்களுக்கு அரசு செலவு செய்யும் தொகையைப் பார்த்தால் நமக்கே மலைப்பாக உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடத்திற்கு ரூ.24,500/- செலவாகின்றது. இது மேலும் ரூ.24,632/- ஆக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 2006 அறிக்கையின்படி 20 சதவீதம் உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய்கள் வரை பலவகையான மதிப்பில் அரசு வழங்குகின்றது.

நமது உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.12,000; மாதத் தொகுதி படி ரூ.10,000; மாத அலுவலகச் செலவுப் படி ரூ.3,000; மாத கடிதச் செலவு படி ரூ.1,000; உதவியாளர் ஊதியம் ரூ.10,000; ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்கும் படி ரூ.500. இதுமட்டுமல்லாமல் தில்லி வீட்டிற்கு ஓராண்டுக்கு 50,000 யூனிட் மின்சாரம், 4,000 கிலோ லிட்டர் தண்ணீர் இலவசம். இரண்டு தொலைபேசிகள் – ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இன்டர்நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் தொலைபேசியில் இந்தியா முழுவதும் ரோமிங், வாடகை மற்றும் இணைப்புக் கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் 23 இலவச விமான பயணச் சீட்டுகள்; 8 பயணச் சீட்டுகள் தொகுதிக்கும் டில்லிக்கும் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள இலவசம்; 1 இலவச ஏ.சி. ரயில் பாஸ்; முதல் வகுப்பு ஏ.சி.யில் தன் குடும்பத்தாருடன் செல்ல அனுமதி; சோபா, மேஜை போன்றவை வாங்க ரூ.30,000 மட்டுமன்றி வீட்டில் உள்ள இருக்கைகள், மேஜைகள், திரைச்சீலைகள் பழுது பார்த்தும் தரப்படுகிறது.

நாடு விடுதலை பெற்ற பின் அரசியலமைப்பு அவை அமைக்கப்பட்டபோது தங்கள் வாடகை, செலவுகள் மொத்தம் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ.45/- படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் கர்சன் ரோடு என்று அழைக்கப்பட்டு இன்றைக்கு கஸ்தூரிபாய் மார்கிலுள்ள இராணுவ பேரக்கில் உள்ள வசதியற்ற சிறிய அறையில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கினார். எளிமையாகவும், காந்திய இலட்சியங்களை மனதில் கொண்டும் அன்றைய உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாகக் கடமையை ஆற்றினர். உலக நாட்டில் எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இங்கு சலுகைகள், வசதி வாய்ப்புகள் அதிகம். பிரிட்டனில் ஒரு எம்.பி.க்கு ஒரு அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகிறது.

1955இல் நாடாளுமன்றத்திற்கு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையோ லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொல்லச் செலவு ரூ.300 கோடிக்கு மேலாக ஆண்டின் நிதி நிலை அறிக்கையின் மூலம் வழங்கப்படுகிறது. இது போக உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி என்று ரூ.2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினருடைய வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள், இந்தியாவில் குழுக்கள் சுற்றுப்பயணங்கள் மூலம் தங்களுடைய கடமைகளைக் காட்டிலும் சுற்றுலாவிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சட்டத் திருத்தங்களில்தான் இதை நடைமுறை ஆக்கினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.300/- ஓய்வூதியமாக இருந்ததை குறைந்தபட்சம் ரூ.8,000/- ஆக வரையறுக்கப்பட்டும், ஒவ்வொரு வருட கூடுதலுக்கு ரூ.800/- கூடுதலாக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் சபையில் இருக்க வேண்டிய கட்டாயத்தையும் தளர்த்தி உறுப்பினராகப் பதவி ஏற்றாலே போதும் பதவிக் காலத்திற்கு பின் ஓய்வூதியம் பெறலாம் என்ற நிலையில் உறுப்பினர்கள் உள்ளனர்.

இப்படி நமது நிதி ஆதாரத்தில் கணிசமாக செலவழிக்கப்படும் நிலையில் நாடாளுமன்றம் தனது பணிகளை அழுத்தமாக நிறைவேற்றாத சூழலில் நமது நாடாளுமன்ற ஜனநாயகம் எங்கே செல்கிறது என்ற அச்சம் ஏற்படுகின்றது. பொறுப்பற்ற மக்கள் பிரதிநிதிகளை மக்களே திரும்ப அழைக்கும் உரிமையைக் கொண்டு வந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சத்தின் காரணமாக தங்கள் கடமைகளைச் செய்வார்களோ என்ற ஏக்கம் நமக்கு ஏற்பட்டுள்ளது. கடுமையான கிரிமினல் வழக்குகளில் சிறையில் இருக்க வேண்டியவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டனர். இதைத் தடுக்காவிட்டால் நமது நாடாளுமன்ற ஜனநாயகம் படிப்படியாகத் தன் தன்மையிலிருந்து தாழ்ந்து விடுமோ என்ற கேள்விக்குறியும் நம் முன்னே எழுகின்றது. எனவே, திருப்தி இல்லையெனில் திரும்ப அழைக்கும் நடைமுறை வேண்டும் எனப் பலர் விரும்புகின்றனர்.

திரும்பி அழைக்கும் முறை முதன்முதலாக 1903ஆம் ஆண்டு அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸில் கடைபிடிக்கப்பட்டது. கனடாவில் சீர்திருத்தக் கட்சி இதைத் தனிநபர் மசோதா மூலம் வலியுறுத்தியது. உகாண்டா, கயானா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் திரும்ப அழைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. நியூசிலாந்து, ஜாம்பியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைப்பது குறித்து நடைமுறைப்படுத்த விவாதங்கள் நடைபெறுகின்றன.

திரும்பி அழைக்கும் முறையில் பல சிக்கல்கள் உள்ளன. வெற்றி பெற்றுச் சென்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களுக்குத் திருப்தியாகச் செயல்படவில்லையெனில் மக்களே மனுக்களைக் கொடுத்து முறையாகத் திரும்ப அழைப்பதாகும். மக்கள் பிரதிநிதிகள் செய்யும் தவறுகளை சரி செய்து திருத்துவது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இன்று நம்மிடையே உள்ளது. 1970களின் இறுதியில் பலரைக் கவர்ந்த புதிய கவிதைகள், புதினங்களையும் படைத்த திரு. சுப்பிரமணியராஜீ தமது கவிதையில்

“வாயைக் கழுவ தண்ணீரைப் பார்த்தால்
தண்ணீரே அசுத்தமாக உள்ளது”

என்று கூறிய கருத்துதான் நினைவுக்கு வருகிறது. ஆம்! இங்கே எல்லா அமைப்புகளையும் சுத்தப்படுத்த வேண்டிய நிலையில்தான் நாடு இருக்கிறது.

இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் பங்குபெற்று, கலந்துரையாடவும், மக்களுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்வம் உடையவர்கள் பின்னூட்டம் பகுதியில் தெரிவிக்கவும்.

#திரும்பஅழைக்கும்முறை
#RighttoRecall
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
7/4/2017




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...