இந்த விழாவில் நான் ஆற்றிய உரையின் காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன்.
ராஜிவ் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரில்
ஆயுள் தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில் இருக்கும் இரா.போ. இரவிச்சந்திரனுடைய குடும்பத்தை
நன்கு அறிந்தவன். அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வழக்கறிஞர்களாகவும், உச்ச நீதிமன்ற
நீதிபதியாகவும் பணிகளில் இருந்தனர். அவரைப் பற்றி ஏற்கனவே நேற்று (09/01/2018) அன்று
ஒரு நீண்ட பதிவை எனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தேன். அவருடைய வயது சுமார் 48 இருக்கும். 27 ஆண்டுகள் சிறைவாசம்.
தனது
வாழ்க்கையின் முக்கிய கால கட்டத்தை சிறையிலே கழித்துவிட்டார். ராஜீவ் படுகொலை குறித்து அப்பாவிகள் சிலர்
குற்றவாளிகள் ஆக்கப்பட்ட நிகழ்வுகளையும் அவர்களின் இரணங்களையும் அவரது மதுரை வழக்கறிஞர் திருமுருகனிடம் சொல்லி அதை
பத்திரிக்கையாளர் பா.ஏகலைவனிடம் தெரிவித்து, அந்த செய்திகளை எல்லாம் தொகுத்து நூல்
வடிவமாக ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற தலைப்பில் நூலாக நேற்று வெளியிடப்பட்டது.
ராஜீவ் படுகொலையை யாரும் ஏற்றுக்
கொள்ள முடியாத மாபெரும் துயர இழப்பாகும். இந்த கொலைக்கு சம்மந்தப்பட்டவர்கள் எந்தவித
கருணையும் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால்
சரியான புலனாய்வு இல்லாமல் உண்மையான குற்றவாளிகள் யாரென்று இன்னும் மர்மமாகவே உள்ளது.
சர்வதேச சதிகள் எல்லாம் இதில் அடங்கியுள்ளன என்பதைக் குறித்தெல்லாம் எந்தவிதமான விசாரனையும்
இல்லை. அப்பாவி மக்களை குற்றவாளிகள் என்று இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டனர் என்ற
வாதத்தை தவிர்க்க முடியாது. அப்படித்தான் ராஜீவ் படுகொலையில் இந்த வழக்குக்கு சம்மந்தமில்லாதவர்கள்
எல்லாம் சிறையில் வாடுகின்றனர்.
இந்நூலுக்கு நான் அளித்த அணிந்துரையில் சர்வதேச சதி குறித்து 37 வினாக்களை எழுப்பியுள்ளேன்.
அதை ஏற்கனவே என்னுடைய பதிவில் அப்படியே பதிந்துள்ளேன். அதற்கு விடை கிடைத்தபாடில்லை.
இந்தக் கேள்விகளை இன்றைக்கு கேட்கவில்லை. ராஜீவ் படுகொலை நடந்த சமயத்தில் 1991 நவம்பரிலேயே
முன்வைத்த வினாக்கள். அந்த வினாக்களை நடுநிலையோடு சீர்தூக்கி பார்த்தால் பல குழப்பங்களுக்கு
விடை கிடைக்கும்.
கொலைக் குற்றவாளிகளான சிவராசன், சுபா ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவது விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்குத் தெரியாது. இது
மாத்தையா முன்னெடுத்த நடவடிக்கை. ஒரு
மாநிலத்தை ஆண்ட எம்.ஜி ஆரின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டாம் என நீக்கு
போக்குகளை கடைபிடித்தவர். இந்தியாவின்
மொத்த எதிர்பையும் சம்பாதிக்க அவர் கருதுவாரா? என நாம் யோசிக்க வேண்டியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதியை நிலைநாட்ட
நடத்தப்படாமல் ஒப்புக்காக நடத்தப்படுகின்ற வழக்காக அமைந்துவிட்டது. ராஜிவ் கொலை
செய்யப்பட்ட போதும், ஈழ இறுதிப் போரின்
போதும் ஜெயலலிதா பேசிய பேச்சுக்கள் என்ன? பிரபாகரனை கொண்டு வந்து தூக்கிலிட வேண்டும் என்றவர் பின் நல்லவராக போற்றப்பட்டார்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை ஆதரித்த ஈழ ஆதரவாளர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள்
எல்லாம் ராஜீவ் படுகொலைக்குப் பின் பட்ட துயரங்கள், இழப்புகள் ஏராளம். ராஜீவ் படுகொலையால்
இப்படி சம்மந்தமில்லாமல் பலர் பாதிக்கப்பட்ட நிலை. பிரபாகரன் சர்வதேச பத்திரிக்கையாளர்
சந்திப்பில் ராஜீவ் படுகொலை துன்பயியல் என்று சொன்னதைச்
சற்று விவரமாக ராஜீவ் படுகொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லியிருக்க
வேண்டும். அது தான் உண்மை. சிவராசனுடைய ஆரம்பத்தை தோண்டினால் பல உண்மைகள் வெளிப்படும்.
அவருடைய அண்ணன் ஸ்ரீ காந்தன் எந்த இயக்கத்தில் இருந்தார். படுகொலை செய்துவிட்டு ஈழத்திற்குச்
செல்லாமல் பெங்களூரு செல்லவேண்டிய காரணமென்ன?
பிரபாகரனுக்கும்,
ஒற்றைக் கண் சிவராசனுக்கும், சுபாவுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத போது எப்படி இவ்வளவு
பெரிய சதியை பிரபாகரனால் செய்திருக்க முடியுமா?
மாத்தையா ஏன்
விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்பட்டார்?
அன்புச் சகோதரர்
கிட்டுவை மாத்தையா ஏன் காட்டிக் கொடுத்தார்?
இந்தக் படுகொலை
நடந்த பொழுது பலருடைய வங்கிக் கணக்கில் பணம் பெருகியதற்குக் காரணமென்ன?
அரிபாபு எடுத்த
10 படங்களை மட்டுமே காட்டிவிட்டு, மீதிப் படங்கள் எங்கே போனது?
சிவராசனுக்கும்,
சுபாவுக்கும் ராஜீவ் பக்கத்திலே செல்லக் கூடிய வகையில் அனுமதிச் சீட்டுகள் யார் வழங்கினார்கள்?
முழுமையான ஆவணங்கள்
ஜெயின் கமிஷனிலும், வர்மா கமிஷனிலும் இராஜீவ் படுகொலையில் தாக்கல் செய்யப்படவில்லையே
ஏன்?
சுப்பிரமணியச்
சாமி, திருச்சி வேலுச்சாமிக்குத் தொலைபேசியில் அழைத்து ராஜீவ் படுகொலைக்கு முன்பே ராஜீவ்
இறந்துவிட்டாரே என்று கேட்டாரா?
சுப்பிரமணியச் சாமி பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் செய்தாரா?
அராபத் ராஜீவிற்கு சொன்ன எச்சரிக்கைச் செய்தி, வளைகுடாப் போரில் ராஜீவ் காந்தியின்
அணுகுமுறை, சந்திரா சாமியுனுடைய உலகச் சுற்றுதல் மற்றும் அவருடைய நடவடிக்கைகள், உலகமயமாக்கல்
பிரச்சனை, மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறைகளைக் குறித்தெல்லாம் விசாரிக்க வேண்டிய முக்கிய
விடயங்கள் எல்லாம் விடப்பட்டுவிட்டதே?
இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டு சொல்லலாம். இப்படியான கேள்விகளுக்கு விடை
கண்டாலே உண்மையான குற்றவாளிகள் யாரென்று தெரியும். பிறகு எப்படி உண்மை வெளிவரும்.
நேதாஜி, காந்தி, லால் பகதூர் சாஸ்திரி போல தான் ராஜீவ் படுகொலையும். அதன் மர்ம
முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் சத்தியமான மெய்ப்பாடுகள் மெய்ப்படவில்லை.
இந்த துன்பவியல் பிரச்சனையால் அப்பாவிகள் சிறையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேல்
வாடுகின்றனர். ஈழ ஆதரவாளர்களும், திமுகவைச் சேர்ந்த தோழர்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர் என ஆழ்ந்து சிந்தித்தால் விடை கிடைக்கும்.
#இராஜீவ்_படுகொலை
#சிவராசன்_டாப்_சீக்ரெட்
#நூல்_வெளியீட்டு_விழா
#Rajiv_assassination
#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
11-01-2018
No comments:
Post a Comment