Friday, January 12, 2018

ஆண்டாள் குறித்த பேச்சும், எதிர்வினைகளும்.......


———————————
கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆண்டாளைக் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை தவிர்த்து இருக்கலாம். அந்த பேச்சு அவசியமற்றது. அந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அவரும் வருத்தம் தெரிவித்து இருக்கின்றார். இன்று காலை ஆழ்வார்க்கடியான் என்று நாங்கள் அழைக்கும் பத்திரிக்கையாளர் மை.பா.நாராயணன் வேதனையோடு என்னிடம், ‘என்னங்க, உங்க பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர். உங்கள் குடும்பத்தார் பாரம்பரியமாக வணங்கும் ஆண்டாளை இப்படி வைரமுத்து பேசிவிட்டாரே. உங்கள் தாயார் தினமும் பாசுரம் படிப்பதெல்லாம் எனக்குத் தெரியும். கவிஞர் வைரமுத்து இப்படி பேசனுமா’ என்று கண்ணீர் கம்பலையோடு சொன்னார். அவரிடம் நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லதாகவே இருக்கட்டும் எனக் கூறினேன்.
ஆண்டாளின் பாடல்களில் குறிப்பாக திருப்பாவையில் மற்றைய மத, கடவுள் நிந்தனை ஏதும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அற்புதமான தமிழில் படைத்த பாவைப் பாடல்களை நாம் மெச்ச வேண்டுமேயொழிய தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பி ஆரோக்கியமற்ற நிலைக்கு சமுதாயத்தை இழுத்துச் செல்லக் கூடாது.
இந்நிலையில் , பாஜகவின் எச்.ராஜாவின் பேச்சு அருவருக்கத்தக்கது. பொதுவாழ்வுக்கு வந்தவர், பொது தளத்தில் உரையாற்றுவோம் கண்ணியத்துடன் வார்த்தைகளை கையாள வேண்டும். அவருடைய பேச்சு மனிதநேயமற்றது. வேதனையை தருகிறது .

ஆண்டாள் மார்கழி முன்பனி, பின்பனிக் காலத்தில் கூடியிருந்து குளிரச் சொல்லி இருக்கிறார். கடுமையான வெப்பத்தில் கடுஞ்சொற்களால் ஆடச் சொல்லவில்லை. இதற்குத் தொடர்பு இல்லாத அவர் குடும்பப் பெண்களை இழுப்பது, கேவலமாகப் பேசுவது போன்றவைகளை எல்லாம் வெறிப் பிடித்த செயல்கள்.

இன்னொன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். எச். ராஜாவின் நடவடிக்கையும், அவரது போக்கும் பிடிக்கவில்லை.அதற்காக ஆண்டாளை விமர்சித்துப் பேசுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பெரியாரும் – இராஜாஜியும், காமராசரும் - ஜீவாவும் எதிரெதிர் தளத்தில், மாற்று கொள்கைகளுடன் இருந்தாலும் ஒருவருக்கொருவர்  நல்ல நண்பர்களாகவும் புரிந்து கொண்டவர்களாகவும் இயங்கினர். அறிஞர் அண்ணாவும் - கலைஞரும் முதலமைச்சர் காமராசரை தங்களின் தொகுதிக்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகளில் பங்களிக்க செய்து கெளரவித்தார்கள்.
இப்படியெல்லாம் அரசியல் அறம் தழைத்த தமிழகத்தில் இன்று தறுதலைகளும்,  மறைந்த தலைவர்களைப் பற்றித் தரம் தாழ்ந்துப் பேசுவது வரலாற்று காட்சிப்பிழைகளாக ஊடக வெளிச்ச தாகத்திற்காக விக்கல் ஒலி எழுப்புகின்றார்கள். அவர்களின் உரைக்கு அகராதியில் பொருள் தேட முடியாது. 

பொது வாழ்வில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு பாசாங்குப் பிழைகளோடு வயிற்றுப் பிழைப்புக்கு பொருள் தேடலாம்.
அரசியல் அடிப்படை நாகரீகம் தெரியாத இவர்களுக்கு எல்லாம் பாடம் கற்பித்தாக வேண்டியது கட்டாயம். இவர்களுடைய குரல்வளையை கருத்து சுதந்திரம் என பாராமல் நெறிக்க வேண்டும். இவர்களை எல்லாம் பொதுத்தளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அடிப்படை நாகரீகமற்ற  இந்தக் காட்சிப் பிழைகளும், தோற்றப்பிழைகளும் சலசலப்பை ஏற்படுத்தி அரிதாரம் பூசிக்கொண்டு முகம் காட்டும் அருவருக்கத்தக்க மனிதர்களை தூக்கி எறிய வேண்டும்.

#அரசியல்நாகரீகம்
#ஆண்டாள்சர்ச்சை
#வைரமுத்து
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

12-01-2018

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...