மூத்த பத்திரிகையாளரும் அன்பு நண்பர் ஞாநி சங்கரன் காலமாகிவிட்டார். நாற்பதாண்டு கால நட்பு அவரோடு உண்டு. அவரது மரணம் தனிப்பட்ட இழப்பாகும். அரசியலில் நான் புறக்கணிக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் அவரே அழைத்து ஆறுதல்படுத்தவார். தினமும் பல உலக அரசியல் விஷயங்கள் குறித்து பலமுறை கைபேசியில் பேசிக்கொள்வது உண்டு.
என்ன கொடுமை என்றால், நேற்று முன்தினம் 12-1-2018 (சுமார் 48 மணி நேரத்திற்கு முன்னால்) தான் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் ஈழம் பிரச்சனை சம்மந்தமாக 1987இல் ஒப்பந்தம் குறித்தான நூலை ஆங்கில தி இந்து சிறப்புச் செய்தியாளர் இராமகிருஷ்ணன் எழுதி, நண்பர் நந்தா அவர்களின் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட விழாவில் ஞாநி, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்து ராம், திலகவதி போன்றோருடன் நானும் பங்கேற்றோம்.
விழா முடிந்தவுடன் என்னிடம், ‘அரசியலில் பதவி வரும், வராமல் போகும். அதை துச்சமாக நினையுங்கள். உங்களது கடமையைச் தொடர்ந்து செய்யுங்கள். உங்களின் அன்பு நண்பனின் வேண்டுகோளாக உங்கள் நினைவுகளை அவசியம் எழுத வேண்டும் என்றார். மேலும் உங்கள் நினைவுகளில் ஸ்தாபன காங்கிரஸ் - இந்திரா காங்கிரஸ் இணைப்பு, ஈழத் தமிழர் பிரச்சனை, மதிமுக உதயம், கலைஞர் நள்ளிரவில் கைது, ஜெயலலிதா வழக்குத் தொடர்பான விஷயங்கள், டெஸோ நீங்கள் பணியாற்றிய போது நடந்த பல நிகழ்வுகள் எனக்குத் தெரியும். என்ன நடந்ததோ அதை அப்படியே எழுதுங்கள்’ என்று இறுதியாக பிரியும் போது என்னிடம் கூறினார்.
கதைசொல்லி இதழ் வந்தவுடன் படித்துவிட்டு கருத்து சொல்வார். நான் தொடுத்த வழக்குகளான உச்ச நீதிமன்றத்தில் தேசிய நதிகளை இணைக்க வேண்டும், கண்ணகிக் கோட்டம், காவிரி, முல்லை - பெரியாறு, தமிழக மேலவை அமைத்தல், வீரப்பன் வழக்கில் கைதான தமிழர்களை விடுவித்தல், கூடங்குளம் பிரச்சினை, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட பாலசிங்கம், சந்திரஹாசன் போன்றவர்களை விடுவித்தல் போன்ற பல வழக்குகளை நான் தொடுத்த போதெல்லாம் அவர் பாராட்டுவார்.
மனதிற்கு வேதனைப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம், எனது பாரத்தை இறக்கி வைக்கக்கூடிய நெருங்கிய நண்பர்களில் ஞாநியும் ஒருவர். தகுதியே தடை என்று நான் சொல்வதை ரசிப்பார்.
எப்போது உங்களுக்கு சிறுநீரகம் கிடைக்கும் என்று கேட்டேன். இரண்டு மாதத்தில் கிடைத்துவிடும். பின்னர் சரியாகிவிடும். டையாலிசிஸ் செய்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். அப்படிப்பட்ட அன்பு ஞாநி நம்மை விட்டுச் சென்றுவிட்டார். என்ன சொல்ல...
அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
15-01-2018
No comments:
Post a Comment