Saturday, January 20, 2018

#பன்னிரு ஆழ்வார்கள் #ஆண்டாள்சர்ச்சை

பன்னிரு ஆழ்வார்கள் எழுதிய பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம். பன்னிரு ஆழ்வார்களின் பெயர்கள்: 
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவியாழ்வார்
குலசேகர ஆழ்வார் பெரியாழ்வார்
ஆண்டாள்
தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார் ஆகியோர் ஆவர்.

இவர்களில், பெரியாழ்வார், ஆண்டாள் மதுரகவியாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் தவிர மற்றவர்கள் அந்தணர் அல்லாதவர்கள். ஆண்டாள் குறித்தும் சர்ச்சை நிலவி வருகின்றது. தமிழ்மொழி வளர்ச்சிக்கு வைணவர்கள் பெரும்பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது. அந்தணர் அல்லாதோர் பலரும் பாடியதால் தான் இவைகள் திராவிட வேதம் என சொல்லப்பட்டது.

1. பொய்கையாழ்வார்:
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! * - எப்புவியும் 
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் *
தேசுடனே தோன்று சிறப்பால்.
ஊர்: திருவெஃகா (காஞ்சிபுரம்)
செய்த பிரபந்தம் : முதல் திருவந்தாதி

2. பூதத்தாழ்வார்:
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர் *
வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை * - மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர் *
ஓங்குமுறையூர் பாணனூர்.
ஊர் : திருக்கடன்மல்லை (மகாபலிபுரம்)
செய்த பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி

3. பேயாழ்வார்:
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *
நின்றது உலகத்தே நிகழ்ந்து. 
ஊர் : திருமயிலை (மயிலாப்பூர்)
செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி

4. திருமழிசையாழ்வார்:
தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத் 
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்ய மதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.
ஊர் : திருமழிசை
செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்
குடிப் பிறப்பு: பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் பெண்ணுக்கும் அவதரித்தார். பக்திசாரர் எனும் பேர் உண்டு. )

5. நம்மாழ்வார்:
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை *
பாரோர் அறியப் பகர்கின்றேன் * - சீராரும் 
வேதம் தமிழ் செய்த மெய்யன் * எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்.
ஊர் : திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
செய்த பிரபந்தங்கள் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
குடிப்பிறப்பு: வேளாளர் - வேளாண் குலம். காரியார் உடையநங்கை தம்பதிக்கு மகவாகப் பிறந்தவர்

6. மதுரகவியாழ்வார் :
ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த *
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் * - பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும் *
உற்றது எமக்கு என்று நெஞ்சே ! ஓர்.
ஊர் : திருக்கோளூர்
செய்த பிரபந்தம்: கண்ணிநுண்சிறுத்தாம்பு
குடிப் பிறப்பு: அந்தணர் குலம் -

7. குலசேகராழ்வார்:
மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர் *
தேசு இத்திவசுத்துக்கு ஏது என்னில் * - பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் *
நல்லவர்கள் கொண்டாடும் நாள்.
ஊர் : திருவஞ்சிக்களம்
செய்த பிரபந்தம் : பெருமாள் திருமொழி
குடிப்பிறப்பு: சேர மன்னர் திடவிரதனுக்கு மகவாக... அரசர் குலம்

8. பெரியாழ்வார்:
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !*
இன்றைக்கு என்ன ஏற்றம் எனில் உரைக்கேன் * - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த *
நல் ஆனியில் சோதி நாள்.
ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர்
செய்த பிரபந்தம் : பெரியாழ்வார் திருமொழி
குடிப்பிறப்பு: முன்குடுமி சோழிய அந்தணர் முகுந்த பட்டர் பத்மவல்லி தம்பதியருக்கு மகவு

9. ஆண்டாள்:
இன்றோ திருவாடிப் பூரம் * எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் * - குன்றாத
வாழ்வான வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து *
ஆழ்வார் திருமகளா ராய்
ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர்
செய்த பிரபந்தங்கள் : திருப்பாவை, நாச்சியார் திருமொழி
துளசி செடியின் கீழ் பெரியாழ்வாரால் கண்டெடுத்து அந்தணர் குல மரபில் வளர்க்கப் பட்டவர்

10. தொண்டரடிபொடியாழ்வார்:
மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர் *
என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் * - துன்னு புகழ்
மாமறையோன் தொண்டரப்பொடியாழ்வார் பிறப்பால் *
நான்மறையோர் கொண்டாடும் நாள். 
ஊர் : திருமண்டங்குடி
செய்த பிரபந்தங்கள் : திருப்பள்ளியெழுச்சி, திருமாலை
குடிப்பிறப்பு: முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபு

11. திருப்பாணாழ்வார்:
கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்! *
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் * - ஆத்தியர்கள் 
அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்*
நன்குடனே கொண்டாடும் நாள். 
ஊர் : உறையூர்
செய்த பிரபந்தம் : அமலனாதிபிரான்
குடிப்பிறப்பு: பாணர் குலம்

12. திருமங்கையாழ்வார்:
பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ *
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் * - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த *
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண். 
ஊர் : திருவாலிதிருநகரி
செய்த பிரபந்தங்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை
குடிப்பிறப்பு: கள்ளர் குலம், சோழர் படைத்தலைவராயிருந்த ஆலிநாடருக்கு பிறந்தவர் நீலன் எனும் பேருடைய இவர்...

திருப்பாணாழ்வார் - பாணர் ஒடுக்கப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்றும், திருமங்கை ஆழ்வார்- கள்ளர், நம்மாழ்வார் வெள்ளாளர்.
திருப்பணாழ்வார் ஒடுக்கப்பட்ட குலத்தை சேர்ந்தவர் என்பதால் அரங்கன் கோவில் அந்தணர்கள் அவரை கடுமையாக நடத்த , அரங்கராதர் அந்தணர்கள் கனவில் தோன்றி ஆழ்வாரை தோளில் சுமந்துகொண்டு சன்னதிக்கு அழைத்து வருமாறு கட்டளை பிறப்பிக்கிறார் என்பதும் உண்டு. சகல தரப்பினரும் வைணவத்தை வளர்த்தனர்.
இன்று ஆண்டாள் குறித்து சர்ச்சை எழுந்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்வேளையில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வரும் செய்தி என்னவெனில் ஆண்டாளுக்கு தீபாரதனையோ, படையலோ முறையாக சரியாக நடப்பது இல்லை.


Image may contain: sky, cloud and outdoor

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
20-01-2018

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...