இந்த மாத(ஜன2018) உயிர்மை இதழில் எனது தேர்தல் குறித்த பத்தி
துட்டும் தேர்தல்களும்.
———————————
- வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு ஓட்டு போட்டதற்காக ரூ.10,000/- வாங்க வேண்டுமென்று சுற்றித் திரிந்து வாக்களர்கள் புலம்புவதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளன.
புனிதமான வாக்குரிமையை விற்பது என்ற நிலை இன்றைக்கு வெளிப்படையாகிவிட்டது. அது மட்டுமல்லாமல், சாதி, மதம், இனம் என்ற போக்கில் தான் அரசியல் செல்கிறது. நேர்மையான அரசியல் களப்பணியாளர்கள் தேர்தலில் இனிமேல் போட்டியிட வேண்டாமென்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
அரசியல் களப்பணியில் இல்லையென்றாலும் பணத்தை வைத்துக் கொண்டால் ஏதாவதொரு கட்சியில் வாய்ப்பு பெற்று எம்.பி, எம்.எல்.ஏ., ஏன் அமைச்சர் கூட ஆகிவிடலாம் என்பது தற்போதைய நிலை. ஊழல், கிரிமினல் வழக்கு என்பதெல்லாம் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைகளாக இல்லாமல் தகுதிகளாகிவிட்டன. ஆர்.கே.நகர் பிரச்சனைக்கு வருவோம்.
இராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் பணிபுரிந்த நண்பரிடம் பேசியபோது பணப்பட்டுவாடா எப்படி நடந்ததென்று தெரிந்து கொள்ள முடிந்தது.
அங்கு,
மொத்த பூத் 172. ஒவ்வொரு பூத்திலும் முப்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் வெறும் பத்து பெயரை கூட்டிக்கொண்டு வரவேண்டும் ..
ஒரு பூத்துக்கு 300 பேர் (172 X 300 = 51600 பேர்) இதில் கூட குறைவாக சுமார் 35,000 - 40,000 பேர் வேலை பார்த்து இருக்கிறார்கள் .
இவர்களுக்கு தினமும் 300 ரூபாய் (40,000 X 300 x 10 நாள் = 12,00,00,000 பன்னிரண்டு கோடி ரூபாய்)
அனைவரும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை வீட்டில் இருக்கும் குக்கரை தூக்கிட்டு வரவேண்டும்.
தேர்தல் பிரசார முடிவு நாளைக்கு முன்பாக ரெண்டு நாள் கடன் சொல்லி இருக்கிறார்கள் !!
கடைசி நாள் அந்த கடன் காசை வாங்க அனைவரும் வந்தாக வேண்டுமே. வேறு யாரும் காசு குடுத்து கடைசி நாள் இழுத்து விட்டால் !!
கடைசி நாள் அவர்கள் அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டது.
நாங்க காசு விசயத்தில் சரியாக இருப்போம் என்று எல்லா வீட்டிலும் இருபது ரூபாய் குடுத்து போன் நம்பர் வாங்கி அவைகளிடம் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றால் ஓட்டுக்கு சுமார் 10,000/- வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
தொகுதி முழுதும் ஒரே பேச்சு .. சொன்னபடி இவங்க காசு குடுப்பாரு என்று சுமார் 150,000 X10,000 = 150,00,00,000 (நூற்று ஐம்பது கோடி) கொடுக்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்.
நிறைய ரகசிய ஆட்கள். அரசியல்வாதியான எனது நண்பர் இவனுங்கதான் கட்சியை நடத்தி இருக்காங்க, தேர்தல் செலவு மற்றும் மறைமுக வேலைகள் செய்ய பல ஆட்களை வைத்து இருக்காங்க. சுமார் 50,000 ஒட்டு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிப் பெறுவாங்க என்று சொன்னார். அதன்படி நடந்தேறிவிட்டது.
அதுபோல இரட்டை இலை கோஷ்டிகள் ரூபாய். 6,000 கொடுத்தும் வெற்றிப் பெற முடியவில்லை. ரூ. 20/- இல் வரிசைப்படி டோக்கன் எண் கொடுத்தவர்கள் வெற்றிப் பெற்றுவிட்டார்கள். பத்தாயிரம் ரூபாய் என்று உறுதி கொடுத்தது வருமா என்று புலம்பிக் கொண்டிருக்கும் நிலை.
அதிகமாக ரொக்கம் ரூ. 6,000 கொடுத்தவர்கள் தோல்வியில் தலையில் துண்டை போட்டுவிட்டார்கள். திமுக நேர்மையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வாக்குக்கு பணமில்லை என்று துவக்கத்திலேயே தெளிவாக்கி விட்டது.
இனிமேல் இப்படித் தான். டோக்கன் கொடுத்து குக்கர் கோஷ்டிகள் செய்தது போன்ற கூத்துக்கள் தான் இனிவரும் தேர்தல்களில் நடக்கும். அதையும் பார்க்க வேண்டிய அபத்தமான காட்சிகள் தான் அரங்கேறலாம்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பின் நல்லி குப்புசாமி அவர்களை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு தி இந்து நடராஜன் அவர்களை சந்திக்க நேர்ந்தது.
உரையாடல்களுக்கு நடுவே, "இனி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வங்கிகள் கடன் அளிக்க வேண்டும், அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் மக்கள் பணத்தை கொள்ளையடித்து திருப்பி செலுத்துவார்கள்" என வேடிக்கையாக சொன்னார். இவ்வாறாக அவர் சொல்வதற்கு ஆர்.கே நகர் தேர்தல் முடிவு தான்.
அன்று 1954 இல் குடியாத்தம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட காமராசர் வெற்றி பெறுவதற்காக பணம் கொடுத்தார் என்பது கம்யூனிஸ்ட்கள் குற்றச்சாட்டு வைத்தனர். காஞ்சிபுரத்தில் 1962 இல் அறிஞர் அண்ணா போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார் வாக்குக்கு பணம் அளித்தார் என்பது குற்றச்சாட்டு. அதே தேர்தலில் தஞ்சையில் போட்டியிட்ட தலைவர் கலைஞரை எதிர்த்து போட்டியிட்ட பரிசுத்தநாடார் வாக்குக்கு பணம் அளித்தார் என்பது குற்றச்சாட்டு. தமிழகத்தில் 1967 பொதுத் தேர்தல்களிலும் பணம் கொடுக்கப்பட்டும் காங்கிரஸ் தோற்றுவிட்டதென்று சொல்வார்கள். அந்த காலக்கட்டத்தில் பள்ளியில் படித்தேன். விருதுநகருக்கு அருகேயுள்ள எரிச்சநத்தம்-நடையனேரி சென்ற போது உறவினர்கள் பெருந்தலைவர் காமராஜர் போட்டியிடுகின்றார். இங்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றார்கள் என்பதை எல்லாம் காதால் கேட்டிருக்கிறேன். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெ.சீனிவாசன் எனது உறவினரும் கூட. கையில் தேர்தல் செலவிற்கு பணமில்லாமல் வெற்றியும் பெற்றது உண்டு. இப்படியும் சூழல்கள் 1967 தேர்தலில் மாறின. அந்த நிலைமை திரும்பி வருமா என்பது தான் நமது எதிர்பார்ப்பு.
எனக்கு தெரிந்த மங்கலான நினைவுகளில் ஒன்று. 1950-60 காலக்கட்டத்தில் தென்மாவட்டங்களில் இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் பொதுவுடமை இயக்கத்தின் தொண்டராக பல கலைநிகழ்ச்சிகள் நடத்துவார். அந்த நிகழ்ச்சிகளில் காசுக்கு விலை போகாதீர்கள் என பாட்டுப் பாடுவார். மேற்காணும் குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு உண்மையாக இருந்தால் அவர் அவ்வாறு பாடியிருப்பார் என்பதை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். இலக்கியங்கள் காட்டும் காட்சிகளைக் கொண்டு அக்கால மக்களின் வாழ்வியலை அறிந்துக் கொள்வதில்லையா? அதுபோலவே அப்பாடாலை தொடர்புபடுத்தி பார்த்தால் தவறாகாது என கருதுகின்றேன்.
1970 முதல் 1998 வரை நான் தேர்தல் களத்தில் முகவராகவும் வேட்பாளராகவும் களத்தில் இருந்துள்ளேன். அப்போதெல்லாம் வாக்குக்கு பணம் அளித்தது இல்லை. பூத் செலவுக்கு மட்டும் பணம் அளிப்பது வழக்கம். அதிலும் கூட சில பகுதிகளில் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என பூத் கமிட்டி உறுப்பினர்கள் பணத்தை வாங்க மறுத்ததும் உண்டு. அவர்கள் கையில் திணிக்க முயன்று தோல்வியடைந்த அனுபவங்கள் அதிகம். 1996ல் கோவில்பட்டியில் 35,000 வாக்குகள் சேகரிக்க செலவு செய்ய செய்த செலவு சில லட்சங்கள் தான்.
இன்றைய காலக்கட்டத்தில் தேர்தலில் போட்டியிட மக்கள் பணியோ, மக்களுடன் நிரந்தர தொடர்போ, தியாகமோ, மக்களுக்கான போராட்டம் செய்தோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள எந்த தொழிலிலும் ஈடுபட்டு பொருளீட்டிக் கொண்டு தேர்தலுக்காக காத்திருக்கலாம். தேர்தல் அறிவித்த உடன் சேர்த்த பணத்தைக் கொண்டு வேட்பாளராக போட்டியிடலாம். சேர்த்த பணத்தைக் கொட்டி வெற்றி பெறலாம். நேற்றைய வாக்கு எண்ணிக்கை உணர்த்திய செய்தி?
விஜய் மல்லையாவும், எம்.ஏ.எம். ராமசாமியும் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யபட்டதன் பின்னணி என்ன, மக்கள் சேவையா? அப்படியென்றால் மக்களின் நன்மைக் கருதி, மாநிலத்தில் நன்மைக்காக பொதுநல வழக்கு தொடர்ந்தும், தினந்தோறும் மக்கள் பிரச்சனைகளுக்கு செவி மடுத்து தங்களால் இயன்ற உதவியை உடலுழைப்பை அளித்து வரும் நாங்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் வெறும் பார்வையாளர்கள் தானோ? பணபலம் கொண்டவர்கள், சுயமரியாதை இழந்து கும்பிடுபோடும் ஆசாமிகளை எங்களால் முந்த முடியவில்லை. பொதுநலம் சுமைதாங்கியாகவும், பணநலம் பாரமற்றும் இருப்பவர்கள் ஒரே பந்தயத்தில் ஓடுவது தான் இன்றைய அரசியல்.
இப்படியான தேர்தல் களத்தில் இனிமேல் அரசியல் களப்பணி வேறு, தேர்தல் களம் வேறு என்று தான் பிரித்துப் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். நேர்மையாக அரசியல் பணி செய்யும் சுயமரியாதைக்காரர்கள் இனிமேல் தேர்தல் சதுரங்கத்தில் களமிறங்க முடியாதென்பது முடிவாகின்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். ஒரு காலத்தில் வாக்குக்கு கால் அணா என்பது தான் இன்றைக்கு பத்தாயிரம் ரூபாய் என்பது தான் ஊழலின் பரிணாம வளர்ச்சி.
சல்யூட் டூ ஜனநாயகம் !!!
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
04-01-2018
No comments:
Post a Comment