Tuesday, January 23, 2018

தமிழகத்தினைச் சார்ந்த கேரள ஆளுநர்கள் - அன்றும், இன்றும்; அப்படியும், இப்படியும்.

கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசித்த அம்மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அரசின் தலையீடு, அதன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான பகுதிகளை தவிர்த்துள்ளார். இது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. சதாசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஆளுநரும் ஆகிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் கோர்ட்டில் அன்றைய தமிழக அரசின் சார்பில் சாராய வழக்குகள் சம்மந்தமாக ஆஜரானதும் உண்டு. அன்றைக்கு ஆண்ட அதிமுகவின் ஆதரவும் இவருக்கு உண்டு. 

கேராளவில் வாழும் தமிழர்கள் இவரைச் சந்திக்கச் சென்றால் கேரளா மாநிலத்துக்கு பாதகமில்லாமல் நடந்து கொள்ளுங்கள் என்கின்றாராம். சரி நல்லது. அது அவரது விருப்பம். விசயத்திற்கு வருகிறேன்.

நேற்று, நண்பர் மா.பேச்சிமுத்து பாலக்காட்டில் இருந்து வந்தார். இவர் கேரள தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் தலைமையில் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர். நயினார், வழக்கறிஞர் ஹரிஹரன், உமர், குட்டப்பன் செட்டியார், எம். நடராஜன் ஆகியோர் ஆளுநர் சதாசிவத்தை திருவனந்தபுரம் ராஜ்பவனில் ந்திக்கச் சென்றிருந்தனர். அப்போது தமிழ் மொழி சிறுபான்மை நலன் குறித்தும், அவர்களுடைய கோரிக்கைகளை ஆளுநரிடம் சொல்லும்போது அதை குறித்தெல்லாம் காது கொடுத்து கேட்க மனமின்றி, மலையாளம், ஆங்கிலம் மட்டும் படியுங்கள் என்று ஆலோசனை மட்டும் வழங்கினாராம். 

அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தைக் கூட வழங்க மனமில்லாமல் தவிர்க்கப்பட்டதாம். ஆளுநருடைய ஏடிசி யிடம் பலமுறை தொலைபேசியில் பேசியும் புகைப்படம் தர உத்தரவில்லை என்று மறுக்கப்பட்டதாம். 

இதைக் குறித்து பேச்சிமுத்து என்னிடம் சொன்ன போது, "கேரள ஆளுநராக வி.வி.கிரி இருந்தார். பிற்காலத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் ஆனார். ஆந்திராக்காரராக இருந்தாலும், சென்னையில் வசித்தவர். எப்போது போனாலும் தமிழருடைய பிரச்சினைக்கு ஆறுதலாக வி.வி.கிரி உதவுவார். இவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜோதி வெங்கடாச்சலம் கவர்னராக பொறுப்பேற்றார். அவரைச் சந்திக்க ராஜ்பவனுக்கு யார் சென்றாலும் குறைகளை கேட்டு கேரள அரசிடம் பேசி பிரச்சனைகளை தீர்ப்பார். மத்திய முன்னாள் மின்சாரத் துறை அமைச்சராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்த பா.இராமச்சந்திரன் கேரள ஆளுநராக பொறுப்பேற்ற போதும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தமிழர்கள் ராஜ்பவனுக்கு சென்று சந்திக்கக்கூடிய எளிமையான நிலை இருந்தது. அவர் தமிழர் வாழும் பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள குறைகளை எல்லாம் கேரள அரசிடம் சொல்லி கவனிக்கச் செய்தார்" எனப் பேச்சிமுத்து குறிப்பிட்டார்.
மேலும் அவர், "ஒரு சமயம் நான் வாழும் சித்தூர் பகுதிக்கு பா.ரா வை அழைத்து வந்தபோது கேரள அரசிடம் சித்தூர் பகுதியில் இருந்த பிரச்சனைகளை தெளிவாக அறிந்து அந்த வரவேற்புக் கூட்டத்தில் பேசியதைக் கேட்டு நாங்களே ஆச்சரியப்பட்டோம். அப்படியும் கேரளத்துக்கு தமிழகத்தைச் சார்ந்த ஆளுநர்கள் இருந்தார்கள். இன்றைக்கு சதாசிவத்தை சந்தித்து பேசுவது ஏனோ ஒப்புக்கு பேசவேண்டிய சூழல் இருக்கிறது" என்று வேதனையோடு சொன்னார்.

#கேரள_ஆளுநர்கள்
#கேரளத்தமிழர்கள்
#Tamils_in_kerala
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-01-2018

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...