ஆங்கில புத்தாண்டு உறுதிமொழி.
புதிய ஆண்டு பிறந்த வேளையில் என்ன உறுதிமொழி எடுக்கலாம் என யோசித்தேன். "ஆமாமாம், இத்தனை ஆண்டுகள் எடுத்த உறுதிமொழிகளை எல்லாம் நிறைவேற்றிட்டம் இதில் புதுசா உறுதிமொழி வேறா?" என மனசான்று குரல் எழுப்பியது. ஆம், ஒவ்வொரு ஆண்டு எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிகள் அடுத்த சில மாதங்களுக்கு பின்னர் காற்றில் கரைந்து விடுகின்றது. கடந்தாண்டு எடுத்த உறுதி மொழிகள்: புத்தகம் வாசிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்குவது. மேலும் எழுத்துப்பணியை செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பயணத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பன. ஆனால் புத்தக வாசிப்பு என்பது சுவாசிப்பை போல. அதனை அதிகப் படுத்தவும் இல்லை. அதே வேளையில் அதற்கான நேரத்தை குறைக்கவும் இல்லை. திருப்தியான அளவில் நிறைவேறியது. மறறவைகள் நிறைவேற்றப் படவில்லை. கடந்த பத்தாண்டுகளில் சரியாக வெளிநாட்டுப் பயணம் இல்லை. இந்தாண்டு முயற்சிக்க வேண்டும்.
இந்தாண்டு எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியானது அனுபவம் அளித்த பாடம்.
எனக்கு உதவியாளராக பணியமர்த்தப்படும் நபரை ஒரு பணியாளராக குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்க வேண்டும்.
கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு உதவியாளர்களை கொண்டுள்ளேன். அவர்களில் சிலரால் அடைந்த மன அமைதியின்மைக்கு அளவில்லை. பெரும்பாலும் நன்றி கொன்றவர்களாகவே உள்ளனர். சென்னை என்றால் என்னவென்று தெரியாது வருவார்கள். நாம் செல்லும் இடமெல்லாம் அறிமுகம் செய்து அவருக்கு இல்லாத பின்புலத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன். அவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் தனி அறிமுகம் செய்துக் கொண்டு பின்னாளில் நமக்கு துரோகம் இழைப்பவர்களாக இருக்கின்றனர். எனவே இனிவரும் காலங்களில் பணியாளராகவே அவர்களை பார்க்க வேண்டும். சிலருக்கு வருத்தம் அளிக்கலாம். ஆனால் நானென்ன செய்ய முடியும்? நான் அனுபவித்த பல வேதனைகள்,இழப்புகள் என் உதவியாளர்கள் அளித்தது தானே? சாணக்கியம் சொல்வதான் இதில் சரியானது.
போலியான பாசாங்கு நபர்களை புறக்கணிப்பது போல போலியான விளம்பரங்களை விலக்கி வைக்க வேண்டும். இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு இன்று இதைகுறிப்பிட்டு விளம்பரம் வழி அறிந்த, உடல் எடை குறைக்க வாங்கிய மருத்து எவ்விதத்திலும் பயன் அளிக்கவில்லை எனக்கூறியுள்ளார்.
*கே எஸ்.இராதாகிருஷ்ணன்*
1-1-2018
No comments:
Post a Comment