நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய கரிசல் காட்டு விவசாயிகளுக்கு முதல் நாள் பொங்கல், மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று மாடுகளை ஊர்க்குளங்களில் குளிப்பாட்டி, கால்களுக்கு லாடம் அடித்து, கொம்புகளுக்கு வர்ணமிட்டு, மாட்டு வண்டிகளுக்கும், ஆரக்கால்களுக்கு வர்ணமிட்டு பூஜிப்பார்கள்.
மூன்றாவது நாள் *கர் நாள்* என்று சொல்லிக் கொண்டு அன்று உற்றார் உறவினர்களை சந்திப்பது, நலம் விசாரிப்பது, அசைவ உணவை படைப்பது, எனக்குத் தெரிந்தவரை அசைவ உணவினை சமைப்பது மட்டுமல்லாமல் சங்கரன் கோவில் பிரியாணியை பொட்டலங்களாக வாங்கி வந்து மற்றவர்களுக்கு சூடாக கொடுப்பது.
விடியற்காலையில் முதல் பஸ்ஸூக்கே தூத்துக்குடி சென்று அன்று பிடித்த மீன்களை மதிய உணவிற்கு பயன்படுத்துவதெல்லாம் அன்றைக்குள்ள நடைமுறைகள். சில முக்கியமானவர்களை சந்திக்க எலுமிச்சைபழம், பழங்கள் என எடுத்துக் கொண்டு சந்திப்பு என்று வருவார்கள்.
பக்கத்து ஊரான காசிலிங்கபுரத்தில் குயவர்கள் அதிகம். குயவர் குல மக்கள் அற்புதமான மண் பானைகளை வர்ணமிட்டு கொண்டு வந்து கொடுப்பதும் உண்டு. ஏனென்றால் என்னுடைய தந்தையார், முப்பாட்டனார் எல்லாம் முன்சீப்களாக (கிராம அதிகாரிகளாக) இருந்தனர். அவர்களுக்கு இந்த மண் பானைகளை வழங்குவர்.
அய்வாய்புலிப்பட்டி கிராமத்தில் நெசவாளர்கள் அதிகம். சந்திக்கும் போது புதிய வெள்ளை நிற மேல் துண்டுகளை பரிசளித்து கௌரவிப்பார்கள். சின்னக்காளான்பட்டி கிராமத்தில் இருந்தும் வருவார்கள்.
இந்த கர் நாளின் மாலைப் பொழுதில் வசதியுள்ளவர்கள் சங்கரன் கோவிலிலோ, கோவில்பட்டியிலோ திரைப்படம் பார்க்கப் போவதுண்டு. சிலர் குடும்பத்துடன் மாட்டுவண்டி கட்டிக் கொண்டோ, சைக்கிளிலோ திருவேங்கடம், கழுகுமலை சென்று திரைப்படம் பார்ப்பதும் வாடிக்கை. சில ஊர்களில் மாலைப் வேளையில் சிலம்புப் போட்டியும், கைப்பந்து (வாலி பால்) போட்டியும் நடக்கும். விளாத்திக்குளம் பகுதியில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுவதும் வாடிக்கை.
இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல் என்று 27 ஆண்டுகள் கழிந்துவிட்டது. அதற்கு பிறகு இவையெல்லாம் மருவி வருகின்றன. கிட்டத்தட்ட 1985 வரை ஓரளவுக்கு இந்த வாடிக்கைகள் இருந்தன. இப்போது பொங்கல் கொண்டாடுவதே அந்த பழைய வீரியம், கலகலப்பு, மனப்போக்கு, அணுகு
முறைகள் எல்லாம் மாறிவிட்டன.
என்ன செய்ய…
*மாற்றம் தான் என்றும் நிலையானது. பழமைகள் மாறிக்கொண்டு வருகின்றன. மாற்றங்கள் நிகழ்கின்றன. கடந்த கால நிகழ்வுகள் யாவும் மலரும் நினைவுகள் ஆகிவிட்டன.*
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
16-01-2018
No comments:
Post a Comment