Saturday, January 6, 2018

ராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட இரவிச்சந்திரனுக்கு ஊடக வெளிச்சமே இல்லையா?


இன்றைக்கு (10/11/2018) வெளிவந்துள்ள ஜூனியர் விகடனில் தோழர் பா. ஏகலைவன் தொகுத்து ராஜீவ் படுகொலையில் மதுரை மத்திய சிறையில் மிடுக்கோடும் தைரியத்தோடும் பாதிக்கப்பட்டுள்ள குற்றவாளி இரா.பொ. இரவிச்சந்திரன் (கைதி எண். 4967) அவர்களின்  நினைவுக் குறிப்புகள் நூலாக வந்துள்ள செய்திக் கட்டுரைப் படித்தேன்.

வானம் பார்த்த எங்கள் கரிசல் மண்ணான அருப்புக்கோட்டையில் பிறந்து பள்ளியில் படிக்கும் போதே பெற்றோருக்குச் சொல்லாமல் ஈழத்திற்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றி தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தவர். அவருடைய பெற்றோர்கள் அழைத்தும், என் போன்றவர்கள் அந்த தம்பியை விடுவித்து விடுங்கள் என்று விடுதலைப்புலிகள் தலைமைக்குச் சொல்லியும் வர மறுத்துவிட்டார் இரவிச்சந்திரன். 
அருப்புக்கோட்டை, சாத்தூர் பகுதியில் உள்ள இவருடைய உறவினர்களின் குடும்பங்கள் மதுரை மத்திய சிறை வாசலை நோக்கி எப்போது ஊர் திரும்புவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அப்பாவி வெள்ளந்தி கரிசல் காட்டு விவசாயியினுடைய கனவும், ஆசையும் நிறைவேற வேண்டும்.

தியாகம், நேர்மையான கொள்கை, அர்ப்பணிப்பு என்ற நிலை அந்த இளம் பிராயத்தில் யாருக்கும் வராது. 1980களில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கிரிக்கெட், ரஜினிகாந்தை பேசிய அன்றைய பருவத்தில் வீட்டுக்கே தெரியாமல் வெறும் 1,500 ரூபாயை எடுத்துக் கொண்டு பிளாட் தோழரோடு இராமேஸ்வரத்திலிருந்து படகுக்கு பணம் கொடுத்து ஈழத்துக்குச் சென்று யாருடைய அறிமுகமும் இல்லாமல் படிப்படியாக விடுதலைப்புலிகளின் நம்பிக்கையைப் பெற்று ராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாவிதான் தம்பி இரவிச்சந்திரன். 

நல்ல வசதியான குடும்பம். தந்தையார் பி.எஸ்.சி. (அக்ரி) பட்டம் பெற்ற அரசு அதிகாரி. அவருடைய தூரத்துச் சொந்தக்காரர் உச்சநீதிமன்றம் வரை சென்ற ஓய்வு பெற்ற நீதிபதி. குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். நிலபுலங்கள் அதிகம் உள்ளது. நன்கு வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் பள்ளியில் படிக்கும்போதே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு ஈழத்திற்குச் சென்ற தம்பி தான் இரவிச்சந்திரன்.

வானம் பார்த்த கந்தக பூமியில் விடுதலைக்காக குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், ..சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதி, இதே மண்ணில் பிறந்த மதுரகவி பாஸ்கரதாஸ், வீர கவி விசுவநாத தாஸ், குமாரசாமி ராஜா, காமராஜர், எஸ்.ஆர். நாயுடு, ஆர்.கே. போன்ற பல ஆளுமைகள் பிறந்த கரிசல் மண்ணில் மைந்தன் இரவிச்சந்திரனுடைய தியாகம் வரலாற்றில் எந்நாளும் நிரந்தரமாக இருக்கும்.

இப்படிப்பட்ட தியாகங்களை ஏற்று 26 ஆண்டுகள் சிறையிலும், 13 ஆண்டுகள் ஈழத்திலும், பெற்றோருடைய தொடர்பில்லாமல் வாழ்க்கையைக் கடத்திய இரவிச்சந்திரனைச் சற்று நினைத்துப் பாருங்கள். அவருக்கான இடத்தை ஊடகங்களும், ஏடுகளும் இதுவரை வழங்கவில்லை என்பது தான் ஒரு வருத்தமான செய்தி. ஆனால் இன்றைய ஜூனியர் விகடன் இதழ் அவரைக் குறித்தான செய்திக்கட்டுரையை வெளியிட்டது ஒரு ஆறுதலான விசயம்.

இவரைக் குறித்தான விரிவான பதிவு ஒன்றை பின் நாட்களில் செய்கிறேன்.

இந்த நினைவுத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வரும் ஜனவரி 10ம் தேதி மாலை 5.00 மணியளவில் வடபழனி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆர்கேவி ஸ்டுடியோ அரங்கத்தில் (RKV Studio Hall) நடக்கவிருக்கிறது.

#ராஜீவ்_படுகொலை
#இரவிச்சந்திரன்
#Rajiv_Assassination
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
06-01-2018

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...