Friday, January 5, 2018

வங்கத்து ஜெயலலிதா என மம்தாவை குறிப்பிடுவது மம்தாவின் தியாக அரசியலுக்கு இழுக்காகும்.

வங்கத்து ஜெயலலிதா என மம்தாவை குறிப்பிடுவது மம்தாவின் தியாக அரசியலுக்கு இழுக்காகும்.
வங்கத்து ஜெயலலிதா மம்தா பானர்ஜி என தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்று மம்தா பானர்ஜியின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரும்பு மனுஷி என அழைக்கப்பட்டவர்

காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே சித்தார்த் சங்கர் ரே, கனிக்கான் செளத்ரி, பிரிய ரஞ்சன் தாஸ் முனிசி, பிரனாப் முகர்ஜி போன்ற பெரிய அரசியல் தலைவர்களை எதிர்த்து வங்க காங்கிரஸ் அரசியலில் இருந்தவர்
1997 ல் காங்கிரசில் இருந்து விலகி திரினாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவினார். நீண்ட காலம் ஆட்சிக் கட்டிலில் இருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். அரசியல் எதிரிகளின் கல்லடிக்கும் சொல்லடிக்கும் அதிகமாக இலக்கானவர். தன் இளம் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் இயக்கத்தில் மாணவ காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் என அமைப்புகளில் சிறப்பாக செயல்பட்டு மேற்கு வங்க காங்கிரஸ் இயக்கத்தின் மாநில மகளீரணியில் பொறுப்பு வகித்தவர். நான் மாணவர் காங்கிரசில் இருந்த போதே தேசிய அளவிலான இளைஞர் நடவடிக்கைகளில் கலந்துக் கொண்ட போதே மம்தா பானர்ஜி,, கே.பி.உன்னிக்கிருஷ்ணன், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடு, ராமச்சந்திர ராத்,, மார்கரட் ஆல்வா,மாதவராவ் சிந்தியா, குலாம் நபி ஆசாத், ராமச்சந்திர ராத், அம்பிகா சோனி,சுல்தான் ரஷீதா, ரமேஷ் செந்தாலா போன்றோர்கள் அவர்கள் சார்ந்த மாநிலத்தில் இருந்து பங்கு பெற்றனர். நல்ல ஓவியர். தன் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் ஈட்டிய பணத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டவர்

தங்கத்தாரகையாக உலா வந்ததையும் நூற்றுக்கணக்கான ஜோடி செருப்புகளும், ஆயிரக்கணக்கான பட்டுப்புடவைகளுக்கும், சொத்து சேர்ப்பதில் போதுமென்ற மனமே இல்லாதவர் ஜெயலலிதா. ஆனால் மம்தா பானர்ஜியோ இன்று சாதாரன நூல் புடவையுடனும், அந்த நூல்புடவையை கூட பணியாட்கள் கொண்டு துவைத்து உடுத்தாமல் தானே துவைத்து உடுத்தும் வழக்கம் கொண்டவர். காலில் ஹவாய் செருப்பு, ஜோல்னா பை, இன்று வார்டு கவுன்சிலர்கள் கூட பயன்படுத்த விரும்பாத மாருதி காரில் எளிமையாக பயணித்து வருகின்றார். தனது 29வது வயதில் மார்க்கஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜாம்பவானான சோம்நாத் சாட்டர்ஜியை ஜாதவ்பூர் தொகுதியில் வென்று இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனை படைத்தவர்.

மாநில அமைச்சர், மத்திய அரசில் பங்கு பெற்ற போதிலும் ஒற்றை அரை கொண்ட சாதாரண வீட்டில் வாழ்ந்து வந்தவர். நாமெல்லாம் கூட அலைபேசி பயன்படுத்திய காலத்திலும் அவர் தொலைபேசி மட்டுமே பயன்படுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலைபேசி அரசே அலைபேசி வழங்கிய போது தான் அலைபேசி பயனடுத்த தொடங்கினார். இவ்வாறாக எளிமையான அரசியல்வாதியாக வாழ்ந்து வருபவர்.
பெண் என்பதாலும், முதல்வர் என்ற ஒற்றுமை இருப்பதாலும் இருவரையும் ஒன்றாக ஒப்பிடுவது கூட ஏற்க முடியாது. இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு முன்பே சுயமாக அரசியலில் நுழைந்து வெற்றிபெற்று இன்றும் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருபவர் மம்தா பானர்ஜி. என்ன ஊடக அறமோ?


*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
05-01-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...