Tuesday, April 14, 2020

சித்திரை_விஷு

#சித்திரை_விஷு 
————————
சித்திரை மாதம் ஒவ்வொரு முறையும் 14.4ல் பிறக்கும். இந்த முறை 144 ஊரடங்கில் பிறந்துள்ளது. திருநல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் சித்திரை விஷு என்பார்கள். 

பனிக்காலம் முடிந்து முதுவேனிற் காலத்தின் தொடக்கமே சித்திரை. கிராமப்புறங்களில் மழையை வேண்டி தமிழ் மக்கள் கொண்டாடுகின்ற நாளே சித்திரை பிறப்பாகும். கோடையை எதிர்நோக்கி ஆயத்தமாகும் நாளாகும். கடற்கரை மணலிலும்ஆற்றங்கரையிலும் கொண்டாடுகின்ற காலமாகும்.  

இது சிறப்பாக ஒவ்வொரு ஊரிலும் கவனத்தில் கொள்ளப்படும். எங்கள் வட்டார கோவில்பட்டியில் ஊரே களைகட்டும் 2 லட்சம் பேர் கலந்துக் கொள்ளும் தேர்த் திருவிழா, தெப்பத்திருவிழா என பத்து நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். ஊரே திருவிழாக் கோலமாக தண்ணீர்ப் பந்தல் மோர்ப் பந்தல் எல்லாம் மூலைக்கொன்று இருக்கும். பக்கத்து கிராமங்களிலிருந்து மாட்டு வண்டிக் கட்டிக் கொண்டு சாரை சாரையாக திருவிழாகால மக்கள் வருவதுண்டு. தெப்பத் திருவிழாவிற்கு தாமிரபரணி தண்ணீரை இறைத்து தெப்பத் திருவிழாவில் அருள்மிகு செண்பகவல்லி பூவநாத சாமி தெப்பத் திருவிழா இரவு மின் வெளிச்சத்தில் ஜொலிக்கும். இந்த நூற்றாண்டிலே இதெல்லாம் இல்லாத வருடம் ஆகிவிட்டது. இந்த திருவிழாவுக்கு உத்திரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஒரிசா என்று விருந்தினர்களை அழைத்து உபசரிப்பதெல்லாம் உண்டு. ஏனென்றால் தீப்பெட்டித் தொழ்லில் இந்தியா முழுவதும் கோவில்பட்டிக்கு தொடர்புண்டு. 




கரிசல் காட்டு எழுத்தாளர்கள் இந்த சித்திரை தீர்த்த திருவிழாவை நாட்டுப்புற பாணியில் பதிவுகளை  தங்கள் படைப்புகளில் செய்ததுண்டு.

“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” 
 -நெடுநல்வாடை. வரி 160 -161
“வலிமையான கொம்பை உடைய  ஆடு (மேடம்) முதலான உடுத்தொகுதிகளின் ஊடாகச் சூரியன் இயங்கும் வான் மண்டலம்” என்பதாகும்.
சூரியன் மேட இராசியில் நிற்கும் மாதம் சித்திரை என்பது யாவரும் ஏற்றுக் கொண்ட ஒன்று தான்! 12 தமிழ் மாதங்களும் சௌரமானத்தில் (சூரியன் சார்ந்து) குறிப்பிடப்படும்போது, மேழம்(மேடம் - சித்திரை), விடை(இடபம் - வைகாசி), ஆடவை(மிதுனம் - ஆனி) என்று 12 தமிழ் இராசிப் பெயர்களிலேயே குறிப்பிடப்படுகின்றன.

மகாகவி பாரதியார் "இந்தியா" பத்திரிகை நடத்திய போது, அதன் 1907-ஆம் ஆண்டு சித்திரை இதழின் அட்டைப்படச் சித்திரமும், வாசகமும் இன்றும் நமக்கு உகந்ததாக உள்ளது. எல்லா மதத்தினரும் சித்திரை தேவியை வணங்குவதாக அந்த அட்டைப்படத்தை மஹாகவி அமைத்திருந்தார்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து.
-திருக்குறள்
நோயற்ற வாழ்வு, மிகுந்த விளைச்சல், ஆதார பலம், பொருளாதார வளம், அமைதி, இன்ப நிலை, பாதுகாப்பான வாழ்க்கை என்பது தான் ஒரு நாட்டின் அணிகலன் என்று திருக்குறள் சொல்கின்றது. இந்நாளில் அதை நோக்கி பயணிப்போம்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
14.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...