Thursday, April 9, 2020

Shakespear #லீயர்_அரசன் #King_Lear

#லீயர்_அரசன்  #King_Lear
————————————-
சென்னை  உயர்நீதிமன்ற  நீதிபதி மறைந்த எஸ்.மகாராஜன் தமிழில் 1963 இல் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரின் கிங் லியர்; சமீபத்தில்   கோவை  சிறுவாணி இலக்கிய வட்டம் மற்றும் பவித்ரா பதிப்பகத்தார் இதன் நான்காம் பதிப்பை (2020)வெளியிட்டு,எனக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

ஜஸ்டிஸ் மகாராஜனுடைய நூற்றாண்டு விழா 2012ல் நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்துகாரர். ரசிகமணியின் வட்டத் தொட்டியிலும்  அவருடன்  மிக நெருக்கமாக இருந்தவர். ஆரம்பக் கட்டத்தில்  ஸ்ரீவில்லிப்புத்தூரில் நீதிபதியாக பணி செய்தார். அவருடைய தீர்ப்புகள் யாவும் அறம் சார்ந்த மனிதநேயமிக்க தீர்ப்புகளாக இருக்கும். தமிழ் இலக்கிய வரலாற்றிலும் அவருடைய பங்களிப்பு அளப்பரியது. 




சிறுவாணி வெளியிட்ட நான்காவது பதிப்புக்கு முன், மகாராஜனுடைய கிங் லியர் தமிழ் மொழியாக்கம் 1965, 1971, 1972 ஆகிய  மூன்று பதிப்புகளாக மனோன்மணியம்   பதிப்பகம் வெளியிட்டது. 1972ல் என்னுடைய பட்டப்படிப்பில் தமிழ் மொழிப் பிரிவில் துணைப்பாடமாகவும் இருந்தது. அதன் அட்டை பச்சை வர்ணத்தில் கிங் லியர் என்ற எழுத்தும் நீதிபதி மகாராஜன் என்ற பெயரும் வெள்ளை எழுத்தில் இருப்பது நன்றாக நினைவில் உள்ளது.

ஷேக்ஸ்பியரின் தனிச்சிறப்பு வாய்ந்த துன்பியல் வகை நாடகம். நாடகத்தின் களமும் தளமும் வேறுபட்டாலும், நம் நாட்டு  அரச  வம்ச கதையைப்  போலவே உள்ளது.

நாடக போக்கு:

‘’ஆங்கில நாட்டு அரசன் லீயர், வயதாகி விட்டபடியால், தன் ராஜ்யத்தை மகள்களுக்குப் பாகம் பிரிக்கும் போது,   முகஸ்துதியில் மயங்கி, தம் இரு மகள்களுக்கு மட்டும் பிரித்துக் கொடுக்கிறான். தந்தையிடம் உண்மையானான அன்பு செலுத்தும், ஆனால் முகஸ்துதி தெரியாத மூன்றாவது மகளுக்கு தற்பெருமையும், படபடப்பும் மிக்க லீயர் அரசனிடமிருந்து வசவும், துவேஷமும் மட்டுமே மிஞ்சுகிறது. அதே சமயம் பிரான்ஸ் நாட்டு இளவரசன் அவளைக் கைபிடிக்க, அவள் பிரான்ஸ் சென்றடைகிறாள். பாகப் பிரிவினை செய்துவிட்டு, தம் மகள்களிடம் இருக்க வேண்டிய சூழ்நிலையில், இருவரும் தம்மைப் பந்தாடும்போதுதான் அவர்களுடைய சுயரூபம் லீயருக்குத் தெரிகிறது. விரட்டப்பட்ட நிலையில் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகிறான் அரசன் லீயர். கொடுமை தாங்காமல், அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடுகிறது. பிரெஞ்சுப் படையோடு இங்கிலாந்தின் மீது படையெடுக்கும் லீயரின் மூன்றாவது மகள் தந்தையைக் காப்பாற்றுகிறாள். இறுதியில் இவர் ஜெயித்து ராஜ்யத்தைக் கைப்பற்றுகிறாரா? லீயர் அரசர் என்ன ஆகிறார் என்பதுதான் முடிவு .’’

இதற்கிடையே, கிளைக் கதை. இவ்விரண்டு கதைகளும் மிகச்சிறப்பாக
பின்னிப் புனையப் பட்டிருக்கின்றன. 
சூழ்ச்சியினால் ஏற்படும் துயரக் காட்சிகள் நம் கண்முன்னே விரிகிறது. மனிதக் கொடுமைகளை, எப்படி கருணை வெல்கிறது என்பதை மனித குலத்திற்கு எடுத்துக் காட்டுகிறார் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். இந்தக் கதையில் பொதிந்துள்ள துரோகங்கள், பாசங்களும், மனிதகுலத்திற்கே பொதுவானது.இருப்பினும், துயரத்தின் கொடுமையை ஆழமாகவும், அழுத்தமாகவும் லாவகமாக பதிக்கிறார் ஷேக்ஸ்பியர்

 ஷேக்ஸ்பியர் மறைவுக்குப் பிறகு, இந்த நாடகத்தின் இறுதிக் காட்சி திருத்தப்பட்டு, அரங்கேற்றப்பட்டாலும், பிற்காலத்தில் மூல பிரதி கிடைத்தவுடன் நாடக வெளியில், தவறுகள் திருத்தப்பட்டன. 
ஷேக்ஸ்பியர் நாடகத்தை கவிதையாகவே வடிப்பவர். இதனைப் பொதுவாகத் தமிழில் மொழியாக்கம் செய்வதைவிட ஒரு கடுமையான பணி இருக்கவே முடியாது. இதில் உள்ள உண்மையான சவால் என்னவென்றால், உள்ளபடியே மொழி பெயர்ப்பு செய்தால்தான் நாடகாசிரியரின் அழுத்த மான, தத்துவார்த்தமான, சக்திமிக்க கவிதைகளின் வீச்சு இருக்கும். ஆனால், கவிமரபும் இருக்காது; நயமும் இருக்காது. இன்னும் சொல்லப் போனால், வாசிக்கவே பிடிக்காது. எனவே, இதனை வசன வடிவில் ஆங்காங்கே சில இசைப் பாடல்களையும் உள்ளடக்கி, நாடகாசிரியரின் தத்துவங்களையும் அள்ளித் தெளித்து, சாமான்ய மக்களும் வாசிக்கும் வகையில் அற்புதமாக தமிழில் மொழி ஆக்கம் செய்துள்ளார் ஜஸடிஸ் மகாராஜன் அவர்கள். இவருடைய ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லெட்' நாடக மொழி ஆக்கத்தை 'அரிய சாதனை' என்று பராட்டிய ராஜாஜி அவர்களே இந்நூலிற்கு மதிப்புரை அளித்திருப்பது சிறப்பு.ஷேக்ஸ்பியரைஆழ வாசித்தாலன்றி  அவருடயகவி நயத்தை தெரிந்துகொள்ளமுடியாது.
•••
கோவை  சிறுவாணி  இலக்கிய வட்டமும்,  அதன் தரமான  அரிய வெளியீடுகளும்  கவனத்தை ஈர்ப்பவை நன்பர் சிறுவாணி பிரகாஷ்  இதை முன்னெடுத்து இந்த பணியை செய்கின்றார். அவரோடு கதைசொல்லி இதழின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கோவை ஆர். ரவீந்திரன் அவர்களுடைய பங்களிப்பும் பெரிது. நல்ல கட்டமைப்
புடன்மலிவானவிலையில்அனைவருக்கும் இந்த  நூல்கள்  கிடைக்க அர்ப்
பணிப்புடன் சிறுவாணி  இலக்கிய  வட்டமும் செயல்படுகிறது.  பாராட்டுக்கள்.

#Shakespear 
#லீயர்_அரசன் #King_Lear

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
09.04.2020
#ksrposts

1 comment:

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் : தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது த...