Monday, April 20, 2020

பிரமிள்

#பிரமிள் (1939-96)
——————————-
பிரமிள், இலங்கையின் திருக்கோணமலையில் 20.4.1939-ல், பிறந்தவர்; இலங்கையில் பிறந்தாலும், அறுபதுகளின் இறுதியிலேயே இந்தியா வந்து, தமிழ் நாட்டு எழுத்தாளராகவே வாழ்ந்து, 1971லிருந்து சென்னையில் தமது பெரும்பாலான வாழ்நாளைக் கழித்தவர். புற்றுநோய்ப் பாதிப்பால், தமிழ் நாட்டில் வேலூரை அடுத்துள்ள  கரடிகுடி என்னும் ஒரு சிறு கிராமத்தில் 6.1.1997-ல் மறைந்தார்.

தருமு சிவராம் என்றே ஆரம்ப காலங்களில் இவர் அழைக்கப்பட்டார். எண்கணித ஈடுபாட்டால், வாழ்நாள் முழுதும் விதவிதமாகத் தன் பெயரை பல முறை  மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார். இலக்கிய ஈடுபாட்டையும் மீறி நின்றது அவரது ஆன்மீக அக்கறை. 

நவீன தமிழின் முதன்மையான கவிஞராகவும்,முதன்மையான விமர்சகராகவும், சிறுகதையாசிரியராகவும்,ஓவியராகவும், களிமண் சிற்பங்கள் செய்வதில் பிரமிள் சிறப்பாக விளங்கினார். படிமக் கவிஞர் என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும். இவரது கவிதையும் உரைநடையும், தமிழ் மொழிக்கு நவீன தொனியையும், தமிழ் அறிவுலகுக்கு அதுவரையில்லாத பரிமாணத்தையும் அளித்தன. ஓவியராகவும் சிற்பியாகவும் தொடங்கிய இவரது படைப்பு வாழ்க்கை, 1960-ல் சென்னையிலிருந்து வெளிவந்த ‘எழுத்து’ பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய பிறகு, புதுக்கவிஞராகவும் இலக்கிய விமர்சகராகவும் மாற்றம் கொண்டு, உயர்ந்த பட்சக் கற்பனைத் திறனும் உள்ளூடுருவும் பகுப்பாய்வுச் சக்தியும் கொண்ட எழுத்தாளராக அவரை நிலை நிறுத்தியது.  

இலங்கையில் பல்வேறு இடங்களில், இவர் சிற்சில காலம் வசித்திருக்கிறார். இந்தியாவிலும் டெல்லி, திருவனந்தபுரம், பூதப்பாண்டி, நாகர் கோயில், மதுரை, சென்னை போன்ற இடங்களில் வாழ்ந்திருக்கிறார். சி.சு.செல்லப்பா,  மௌனி, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன்நம்பி, ந.முத்துசாமி, ஞானக்கூத்தன், கி.அ.சச்சிதானந்தம், டேவிட் சந்திரசேகர், கொல்லிப்பாவை ராஜமார்த்தாண்டன், விஷ்ணு நாகராஜன், அழகியசிங்கர், கால சுப்ரமணியம், அரும்பு (அருள்தந்தை) ஆ.அமிர்தராஜ், முன்றில் (நீதியரசர்) மகாதேவன், வி.எஸ்.சத்யா போன்ற பலரிடமும் அவர் பழகி வந்திருக்கிறார். இவர்களில் பலரைப் பின்பு கருத்துரீதியில் கடுமையாகச் சாடியுமிருக்கிறார்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின்மேல் அவருக்கு அபாரமான ஈடுபாடு இருந்து வந்துள்ளது. இளமையில் அவரை அதிகம் பாதித்தவர் திருக்கோணமலை இல்லறத்துறவி, சாது அப்பாத்துரை. யோகி ராம்சுரத் குமார், பேடா போன்ற பல ஞானிகளின் தொடர்பும் குறிப்பிடத்தகுந்தது. 

 நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு 'இன்பாந்த் டெரிபிள்' ஆக விளங்கியவர் பிரமிள். ஆரம்பத்தில் ‘எழுத்து’ பத்திரிக்கையும் இடையில் ‘கொல்லிப்பாவை’யும் இறுதியில் ‘லயம்’ பத்திரிக்கையும் அவரது படைப்பியக்கத்துக்குக் களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்கள், லயம் வெளியீடுகளாகவே வெளிவந்தன. 1995-ல் கும்பகோணம் 'சிலிக்குயில்', பிரமிளுக்குப் 'புதுமைப்பித்தன் வீறு' வழங்கியது. 1996-ல் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் 'விளக்கு' அமைப்பு, புதுமைப்பித்தன் விருது வழங்கிச் சிறப்பித்தது.இவருடன் 1986 காலகட்டங்களில் வேலுப்பிள்ளை பிரபாகரன்  மற்றும்  பேபி சுப்பிரமணியத்தோடு  சந்தித்து  பல விஷயங்களை குறித்து பேசியது இன்றும்



நினைவுக்கு வருகிறது.

பிரமிளின்
#விடிவு

பூமித் தோலில் 
அழகுத் தேமல் 
பரிதி புணர்ந்து
படரும் விந்து 
கதிர்கள் கமழ்ந்து 
விரியும் பூ
இருளின் சிறகைத் 
தின்னும் கிருமி 
வெளிச்சச் சிறகில் 
மிதக்கும் குருவி. 

எழுத்து, டிச. 1961.

#ksrpost
20-4-2020.

No comments:

Post a Comment

BBC தமிழ் - சகோதரி ஆனந்தி passed away last night.ஆழ்ந்த இரங்கல்கள்.

  BBC தமிழ் - சகோதரி ஆனந்தி passed away last night.ஆழ்ந்த இரங்கல்கள். 1979 முதல் நட்பு, 1982 முதல் 1986 தினமும் இலங்கை தமிழர்கள் பற்றிய செய...