Wednesday, April 22, 2020

நம்முடைய நிழலே திசை மாறித்தானே விழுகிறது..

மனிதர்கள் தனது நலத்திற்கு மாறுவதில் 
வியப்படையாதே..
வெளிச்சத்திற்கு ஏற்ப
நம்முடைய நிழலே திசை
மாறித்தானே விழுகிறது..

ஒருவரை ஒருவர் மதிப்பது போலும், பயப்படுவது போலும் நாம், வெளியிலும், போலியாக நடிக்கிறோம்! அது ஏன்?

கடைநிலை உழியர்கூட கலெக்டரை உண்மையாக மதிப்பதில்லை! இது கலெக்டருக்கும் தெரியும்!




நேற்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சு - மாறிவரும் அரசியல்!

நீதிக்கட்சி உருவானதிலிருந்து, அதிலும், காங்கிரசிலும் எத்தனையோ முக்கியமான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் கருத்து மோதல்கள் வந்தபோது, ஆரோக்கியமாகவே, தனிப்பட்ட முறையில் கொச்சையாகத் தாக்காமல், கண்ணியமான விவாதங்கள் நடந்திருக்கின்றன.

ஓமந்தூரார் துவங்கி ராஜாஜி, பக்தவச்சலம், காமராஜர், பெரியார் , அண்ணா என்று முதிர்ந்த அரசியலையும், பேச்சில் கண்ணியத்தையும் வெளிப்படுத்திய தலைவர்கள் பலர் உண்டு. 

இவர்கள் சர்ச்சைக்குரிய பேச்சுகளையும் பேசியிருக்கிறார்கள். ஆனால் தான் பேசிய பேச்சைக் குறுகிய காலத்திற்குள் தான்  பேசவே இல்லை என்று அவர்கள் ஒருபோதும் மறுத்ததில்லை.

ராஜாஜி காமராஜரைப் பற்றிச் சொன்ன சில  வார்த்தைகள் பெரும் சர்ச்சைக்குள்ளானபோதும், ராஜாஜி அதை மறுக்கவில்லை.
இந்தியை ஆதரித்து ஒரு காலத்தில் பேசிய அவரே, பின்னாளில் இந்தித் திணிப்பைக் கண்டித்திருக்கிறார்.

காமராஜர் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டுடன் சென்னை இருந்தாக வேண்டும் என்பதில் ஜீவா போன்ற தலைவர்களுடன் இணைந்த கருத்தையே வெளிப்படுத்தினார். கட்சியின் முடிவுக்கு மாறாக இருந்தபோதும், தன்னுடைய பேச்சைத் தானே மறுக்கும் அபத்தத்தை அவர் செய்யவில்லை.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிலர் உயிரிழந்தபோது, அந்த மரணத்தை வேறுவிதமாக முதல்வராக இருந்த பக்தவச்சலம் பேசி, பெரும் சர்ச்சையானபோதும், தான் பேசிய பேச்சை அவர் மறுக்கவில்லை.

தன்னுடைய பேச்சு அன்றைக்கிருந்த சூழ்நிலை சார்ந்து வெளிப்பட்டாலும், அதை மறுக்கிற அநாகரீகம் அவர்களிடம் இல்லை. வீணாக பத்திரிகைகள், ஊடகங்கள் மீதோ, வலைத்தள அட்மின்கள் மீதோ பழியைப் போடும் இயல்பு அன்றைக்கு இல்லை.

ஆனால தற்போது நேர் எதிர்.

இன்று ஒரு தலைவர் பேசிய பேச்சை அவரே சில நாட்களில் மறுக்கிறார். தொலைக்காட்சிகளில் காட்சிபூர்வமாகப் பதிவாகியிருப்பதைக் கூட மறுக்கிறவர்கள் இன்றைக்குத் தலைவர்களாக இருக்கிறார்கள். 

ஊடகங்களில் பரபரப்புக்காகப் பேசுகிறவர்கள் தாங்கள் பேசிய பேச்சுக்குப் பொறுப்பேற்பதில்லை.

ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். தான் பேசிய பேச்சை அவர்களே மதிக்காமல், சிறிது காலத்தில் மறுக்கிறபோது, அதை நினைவில் வைத்திருக்கிற தொண்டர்கள் அவர்களுடைய பேச்சை எப்படி மதிப்பார்கள்? 

இத்தகைய பேச்சுகள் எப்படி நாளைய வரலாறாக மாறும்?

Tail piece....
அனுபவமும் திறமையும் மட்டுமே போதாது இப்போதெல்லாம் வேறு சில பாசங்கு திறமைகளும் வேண்டும்.

நடிக்க தெரியனும் இடத்திற்கு தகுந்தாற்போல ஆமா சாமி இந்த தகுதியும் வேண்டும் .

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் : தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது த...