Thursday, April 23, 2020

#சித்திரை_பிறப்பு_ #பொன்_ஏர்_பூட்டுதல்

#சித்திரை_பிறப்பு_
#பொன்_ஏர்_பூட்டுதல்
————————————————-
தை  பிறந்தால்  பயிர்கள் கதிர் அறுப்பு
(அறுவடை)சித்திரை பிறப்பு அன்று கிராமங்களில் விவசாயிகளின் பொன் ஏர் பூட்டும்  நிகழ்ச்சி  பூமித்தாயை வணங்கி நவதானிய வித்துக்கள் வைத்து வழிபட்டு கிராம மக்கள் பூஜை செய்வார்கள்.சுமார் 15 ஆண்டுக்கு மேல் விவசாய பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட வீட்டுக்காளை , அதன் வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டால்,அதை அடக்கம் செய்வதற்கு முன் அம்மாடு நினைவாக கொம்பு பகுதியை மட்டும் அப்புறப்படுத்தி  ஆண்டு தோறும் அக்கொம்புக்கு பூஜை செய்த பின்னரே சித்திரையில் விவசாய பனியை மேற்கொள்கின்றனர். இது வடிக்கை



இந்தாண்டும் இடை வெளியோடு நான்கு
பேர் மட்டும் கலந்து கொண்டு சித்திரையில விவசாய வேலைகளை 
துவங்கியதாக கோவில்பட்டி,
விளாத்திகுளம், சங்கரன் கோவில், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் வட்டாரத்திலிருந்து பேசிய விவசாயிகள்
சொன்னார்கள்.

நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்துக் கொண்டிருந்த காலத்தில் மழை பொழிவைக் கொண்டுதான் வேளாண்மைத் தொழிலைச் செய்தனர். மழை பொழிந்து உழுவதற்கு ஏற்றாற்போலப் பதமாக இருக்கும் நிலத்தைக் கலப்பைக் கொண்டு உழுதனர். நிலத்தின் உழுவதற்குரிய பதம் போய்விடக்கூடும் என்பதற்காகப் பலர் ஒரே நேரத்தில் பல கலப்பைகளைப் பயன்படுத்தினர்.

அவ்வாறு பலர் ஒரே நேரத்தில் நிலத்தை உழுவதை, ‘வெறிகமழ் கழனியுள் ளுழநர் வெள்ளமே’ (44) என்று சீவகசிந்தாமணியில்  திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகிறார். 

இப்படி ஒன்றாக உழுதலை முறையாகத் தொடங்குவதற்கு முன்னோர்கள் ஒற்றுமையுடன் செய்த சடங்கினைத் தான் நாம் ‘பொன்னோர் பூட்டுதல்’ என்று அழைக்கிறோம். 

பொன்னேர் பூட்டுதலின் தொடக்கமாக அரசன் பொன்னால் செய்த ஏரைக்கொண்டு நிலத்தை உழுவார், அதன் பின்னரே, குடிமக்கள் உழுதலைத் தொடங்கினர்.பொன்னேர் பூட்டுதலைத் தொடங்கி வைப்பதன் நோக்கமே, பருவ காலத்தில் நிலத்தை உழுது, விதை விதைத்து, பயிர் செழித்து, கதிர் விளைந்து, விளைச்சல் பெற்று மக்களுக்கு ஏற்படக்கூடிய பசி பஞ்சம் தீர்ப்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஜனக மகராஜனின் மிதிலை நாடு பன்னிரண்டு ஆண்டுகள் மழையில்லாமல் பெரும் பஞ்சம் ஏற்பட்டதனால், அவன் மழை வேண்டி யாகம் செய்ய முடிவு செய்தான். யாகம் செய்யக்கூடிய இடத்தைப் பொன்னால் செய்த கலப்பையில் மாடுகளைப் பூட்டி உழுதான். இதனை,

‘’வரம்பின்மணிப் பொற்கலப்பை

வயிரத்தின் கொழு மடுத்திட்டு

உரம்பொருவி னிலம்வேள்விக்

கலகில்பல சாலுழுதேம்” (கம்ப. ராம 764:3,4)

என்னும் கம்பராமாயணப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. தமிழகத்தில் பொன்னேர் பூட்டுதல் சடங்கானது நீண்ட காலமாக இருந்து வருவதை சிலப்பதிகாரத்திலும் (10:132-135) காட்சிப்படுத்துகிறது.  எருதுகளும் எருமைக் கடாக்களும் மகிழுமாறு பெண்கள் மருதப் பண்களைப் பாடினா் எனத் திருவிளையாடற் புராணம் (திருநாட்டுப் படலம்,18) குறிப்பிடுகிறது.

மருத நில வேளாண்மையை எடுத்துரைக்கும் பள்ளு இலக்கியங்களிலும் பொன்னோ் பூட்டுதலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவ்விலக்கியங்கள் பொன்னோ் பூட்டுவதற்குப் பஞ்சாங்கம் கொண்டு நாள் பார்த்தால் (வையாபுரிப்பள்ளு.156), பொன்னேர் பூட்டுவதற்கு முன் வழிபாடு செய்தல் (செண்பகராமன் பள்ளு.126), பொன்னேர் பூட்டும்போது சகுனம் பார்த்தல் (எட்டையபுரப்பள்ளு.146), நல்ல நேரத்தில் பொன்னேர் பூட்டுதல் (திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு.126:4), உழுது கொண்டே பாடல் பாடுதல் (வையாபுரிப்பள்ளு.157) என்று பொன்னோர் பூட்டுதல் சடங்கினைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

‘சித்திரை மாதத்தில் பொன்னோர் பூட்டலாம்’ என்ற பழமொழி பொன்னேர் பூட்டுதல் சடங்கு சித்திரை மாதத்தில் தொடங்குவதை உணர்த்துகின்றது. சித்திரை முதல் நாளே பொன்னேர் பூட்டுதல் சடங்கினைச் செய்து வந்த நிலையில், நாளடைவில் நல்ல நாள் பார்த்துத் தொடங்குவது வழக்கமாயிற்று.

சித்திரை மாதத்தில் பொன்னோ் பூட்டுவதால் வேளாண்மைத் தொழிலுக்குச் சில நன்மைகள் ஏற்படுகின்றன. கீழ்மண் மேலும் மேல்மண் கீழும் புரளுவதால் எருக்கள் மண்ணோடு மண்ணாகக் கலக்கின்றன. புழுதிக்குள் காற்றுப் புகுந்து வளம் பெறுகிறது. பயிரைத் தாக்கக்கூடிய பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகின்றது. விதைக்கும் விதை பழுதில்லாமல் முளைக்கிறது. இவையெல்லாம் வேளாண்மைத் தொழில் சார்ந்த அறிவியல் உண்மையாகும்.

நவீன காலத்தில் பொன்னேர் பூட்டுதல் சடங்கு ஊர்க் கட்டுப்பாடுடைய ஒரு சில கிராமத்தில் மட்டுமே நடைபெறுகின்றது. பண்டைய காலத்தில் அச்சடங்கினை நூற்றுக்கு மேற்பட்ட கலப்பைகளைக் கொண்டு ஒரு விழாவாக கொண்டாடி வந்த நிலையில் தற்போது  டிராக்டர் கொண்டு அச்சடங்கினைச் செய்து விடுகின்றனர்.

இப்பொன்னேர பூட்டுதல் சடங்கு இந்தியா மட்டுமல்லாது இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, பர்மா முதலிய நாடுகளிலும் இருந்து வருகிறது. மக்களின் பசி, பஞ்சத்தைப் போக்கும் வேளாண்மையோடு நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கைக்கு நன்றி உணர்வோடு தக்க சமயத்தில் ஊரெல்லாம் விழாக்கோலம் பூண்டுச் சடங்கு செய்த முன்னோரின் மரபினைப் பாதுகாப்பதும் போற்றுவதும் நம் கடமையே!

#விவசாயிகளின்_பொன்_ஏர்பூட்டும்  #நிகழ்ச்சி......

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...